புதன், 20 அக்டோபர், 2021

தன்னையறிதல் பலவீனத்தை பலமாக மாற்றும் ....(22.10.2021)

தன்னையறிதல் பலவீனத்தை பலமாக மாற்றும் ....

இறைவன் இயேசுவின் அன்புக்குரியவர்களை இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
ஒரு கடலில் மலை இருந்தது. அது கடல் அலையை நோக்கி  கூறியது நான் உறுதியானவன் என் மீது மோதாதே என்று.... ஆனால்  மலையை நோக்கி அலைகள் கூறின.... நாங்கள் மோதி கொண்டுதான் இருப்போம். ஏனென்றால் நாங்கள் பலவீனமானவர்கள் என்று..... சில ஆண்டுகளுக்கு பிறகு அந்தக் கடலில் அலை இருந்தது. ஆனால் மலை இல்லை.

பலவீனமான பலர் ஆண்டவரின் பணியில் பலம் பெற்றவர்களாக மாறியுள்ளார்கள். இதற்கு சிறந்த உதாரணம் இயேசுவின் சீடர்கள். 

இன்றைய முதல் வாசகத்தில் தன்னுடைய நிலையை நன்கு அறிந்த பவுல் தன்னை தான் இருப்பது போல  தன்னால் இயேசு கிறிஸ்துவை அறிந்து கொண்ட மக்களுக்கு வெளிப்படுத்துகிறார்.

நன்மை செய்யும் விருப்பம் என்னிடம் இல்லாமல் இல்லை, அதை செய்யத்தான் முடியவில்லை. நான் விரும்பும் நன்மையை செய்வதில்லை, விரும்பாத தீமையை செய்கின்றேன். நான் விரும்பாததை செய்கின்றேன் என்றால், அதை நானாக செய்யவில்லை எனில் குடிகொண்டிருக்கும் பாவமே செய்கிறது. நான் நன்மை செய்ய விரும்பினாலும், என்னால் தீமை தான் செய்ய முடிகிறது. இத்தகையதொரு செயல்முறையை என்னுள் காண்கின்றேன் என பவுல் தன் நிலையை எடுத்துரைக்கின்றார்.

திருத்தூதர் பவுலின் வாழ்வில் தென்பட்ட  இத்தகைய எண்ண ஓட்டங்கள் நமது வாழ்விலும் பல நேரங்களில் அரங்கேறுகின்றன என்பது நிதர்சனமான உண்மை.  சமூகத்தில் நிகழுகின்ற அநீதியை காணும் போது தட்டி கேட்க வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது, ஆனால் தன் குடும்பத்தை நினைக்கும் பொழுது மனதில் அச்சமும் பயமுமே மேலோங்கி நிற்கிறது. இருப்பதை இல்லாதவரோடு பகிர  வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தில் இருந்தாலும், நமது எதிர்காலத்தை எண்ணி அந்த எண்ணத்தை புறந்தள்ள கூடியவர்களாக தான் பல நேரங்களில் நாம் நமது பலவீனத்தின் அடிப்படையில் செயலாற்றுகின்றோம்.

இத்தகையதொரு மனப்பான்மையைத் தான் பாவேந்தர் பாரதிதாசன்....

தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு

சம்பாத்யம் இவையுண்டு தானுண் டென்போன் சின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டோன்..... என குறிப்பிடுகின்றார்.


இன்றைய நாள் வாசகங்கள் அனைத்தும் நாம் எத்தகைய (எண்ணம் கொண்டவர்களாக) உள்ளம் கொண்டவர்களாக இருக்கின்றோம் என்பதை சுய ஆய்வு செய்து பார்க்க நம்மை அழைக்கின்றன.

உன்னையறிந்தால்.... 

நீ உன்னையறிந்தால் .....

உலகத்தில் போராடலாம்.... 

என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப 

நம்மை பற்றிய ஆழமான அறிவே நம்மைப் போலவே மற்றவரும் என  அடுத்தவரை அறிந்து கொள்வதற்கான வழியாக அமைகிறது. திருத்தூதர் பவுல் தன்னை அறிந்திருந்தார். தன் எண்ண ஓட்டத்தை சீர் தூக்கி பார்த்தார். அதன் விளைவு ஆண்டவர் இயேசுவின்  பாதையில் சிறப்பான சீடராக மாறினார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.


இன்று நாமும் நம்மை சுய ஆய்வு செய்து நமது பலவீனங்களுக்கு மத்தியில் நாம் ஆண்டவர் இயேசுவின் சீடர்களாக விளங்கிட அவரது அருளைப் பெற்றிட இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன.


நமது செயல்களையும், சிந்தனையையும் சீர்தூக்கி பார்ப்பதன் அடிப்படையில் தேவையற்ற வாதங்கள், தேவையற்ற சண்டைகள், தேவையற்ற சச்சரவுகள், இவைகளையெல்லாம் முளையிலேயே கிள்ளி எரிவதற்கான  ஆற்றலை நாம் பெற்றுக்கொள்ள முடியும். இவைகளை சரிசெய்து கொண்டு நாம் இச்சமூகத்தில் பயணிக்கின்ற போது நலமான நல்ல பணிகளை திருத்தூதர் பவுலைப் போல முன்னெடுத்துச் செல்ல முடியும். 


மண்ணில் வாழுகின்ற நாட்களில் வஞ்சகத்தை மனதில் வளர்த்திக்கொண்டு, உறவுகளை விட்டு பிரிந்து நின்று வாழ்வதைவிட, கருத்து வேறுபாடுகளையும், சண்டை சச்சரவுகளையும் சரி செய்துகொண்டு ஆண்டவர் இயேசுவின் பாதையில் நம்மை முழுமையாக அறிந்தவர்களாய் இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிய கூடியவர்களாக மாறிட இறைவனது அருளை இன்றைய நாளில் தொடர்ந்து வேண்டுவோம்...

 இயேசு கிறிஸ்துவை பின்பற்றிய சீடர்கள் எல்லாம் படித்த மேதைகள் என்று நாம் எண்ணிவிட முடியாது அன்றாட பிழைப்புக்காக கடலில் வலை வீசிக் கொண்டிருந்த மீனவர்கள். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...