துணையாளரை கண்டுகொண்டு துணிவு பெற்று வாழ்வோம்.
துணையாளரை கண்டுகொண்டு துணிவு பெற்று வாழ்வோம்.
பரந்து விரிந்த இந்த அழகிய உலகத்தில் எப்போதும் நம்மோடு இருப்பதற்கு இறைவன் தந்த ஒரு துணையாளர் தூய ஆவியார்
″ உங்களோடு என்றும் இருக்கும் படி மற்றொரு துணையாளரை உங்களுக்கத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். யோவான் 14:16_17
நம்மோடு இருக்கின்ற துணையாளரான இந்தத் தூய ஆவியானவர். நாம் நமது வாழ்வில் மேற்கொள்கின்ற அனைத்துவிதமான முயற்சிகளிலும் நம்முடன் பக்கபலமாக இருப்பவர்.
இவர் நமக்காக இறைவனிடத்தில் பரிந்து பேசக்கூடியவர். நம்மையெல்லாம் முன்குறித்து அழைத்து வந்தவர். அழைத்த நம்மை ஏற்புடையவராக மாற்றுபவர். இந்த தூய ஆவியானவர் எப்போதும் நம்முடன் இருந்து நம் இன்ப துன்பங்களில் நம்மோடு உடன் வருகின்றார். இந்த தூய ஆவியாரின் துணையை உணர்ந்துகொள்ள இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன.
இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது நகர் நகராக, ஊர் ஊராகச் சென்று பலவற்றைக் கற்பித்தார். இயேசு கற்பித்தவற்றையெல்லாம் அவரைப் பின்பற்றிய சீடர்கள் தங்கள் வாழ்வாக மாற்றிக் கொள்வதற்கு தூய ஆவியானவர் அவர்களுக்கு தூண்டுகோலாய் இருந்து வழி நடத்தினார். அதே தூய ஆவியார் இன்று நம்மையும் வழிநடத்துகிறார்.
என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்.” (யோவான் 14:26)
இயேசு கற்பித்தவற்றையெல்லாம் நாம் நமது வாழ்வில் செயலாக மாற்றி, அவரை பின்பற்ற வேண்டும் என்பதே நம் அனைவரின் எண்ணமாக இருக்க வேண்டும். இந்த எண்ணத்தை நமக்குள் உணர்த்துபவர் இந்தத் தூய ஆவியார். இந்த தூய ஆவியாரின் துணை கொண்டு இந்த சமூகத்தில் இயேசுவைப் போல வாழவும், இயேசு கற்பித்த வாழ்க்கை நெறிகளுக்கு ஏற்ப நமது வாழ்வை மாற்றிக் கொள்ளவும் இன்றைய நாள் வாசகங்கள் வழியாக நமக்கு அழைப்பு தரப்படுகின்றது.
அழைத்த இறைவன் தம் தூய ஆவியார் வழியாக நம்மை தன் பணிக்கு ஏற்புடையவராக மாற்றுவார் என்ற ஆழமான நம்பிக்கையோடு இன்றைய நாளில் இறைவனது அருளை இணைந்து வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக