காத்திருப்பவரைக் கண்டு கொள்வோம் ...
அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இன்றைய வாசகங்கள் அனைத்தும் ஆண்டவரோடு உரையாட அழைப்பு தருகின்றன. இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது கடவுளோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். பல பணிகளுக்கு மத்தியிலும் அவர் கடவுளோடு உரையாடுவதை நிறுத்தவில்லை. கடவுளோடு உரையாட தனிப்பட்ட நேரம் ஒதுக்கினார். பல பணிகள் காரணமாக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க கூடிய நாம் ஆண்டவரோடு உரையாட நமது வாழ்வில் எவ்வளவு நேரம் ஒதுக்குகிறோம்? என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக் கொள்வோம்.
ஆண்டவரோடு உரையாடுவது அகிலத்தில் இன்புற்று வாழ வழி வகுக்கிறது.
புனித அன்னை தெரசா தன்னுடைய பணிக்கான சக்தி எங்கிருந்து கிடைக்கிறது? என்ற கேள்வியை எழுப்பிய போது அவர் கூறிய வார்த்தைகள் நற்கருணை ஆண்டவரோடு நான் கொள்ளுகின்ற ஒரு மணிநேர உரையாடல் தான் எனக்கு இப்பணியை ஆற்றுவதற்கான பலத்தை தருகிறது என கூறினாராம். ஆண்டவரோடு உரையாடும் போது நாமும் வலிமையானவர்களாக மாறுகின்றோம்.
முதல் வாசகத்தில் இறைவாக்கினர் யோனா மிகவும் எதார்த்தமாக இறைவனோடு உரையாடுகிறார். இறைவனும் அவரோடு உரையாடுகிறார். நற்செய்தி வாசகத்தில் இறைவனிடத்தில் எப்படி உரையாடுவது என்பதை இயேசு தன் சீடர்களுக்கு சொல்லித் தருகிறார். இறைவாக்கினர் யோனாவைப் போல எதார்த்தமாக நாமும் இறைவனோடு உரையாடலாம். ஆனால் அன்று நிலவிய யூத சமய சட்டங்கள் கடவுளையும் மக்களையும் பிளவுபடுத்தி வைத்திருந்தது. கடவுளை கண்டு அஞ்சுபவர்களாக மட்டுமே மனிதர்கள் இருந்தார்கள். எனவே தான் அந்தச் சூழ்நிலையில் ஆண்டவரோடு உரையாட இயேசு தம் சீடர்களுக்கு கற்பித்தார்.
இயேசு கற்பித்த இறைவேண்டல் சீர்தூக்கிப் பார்க்கும் பொழுது நான்கு வரிகள் இறைவனை மையப்படுத்தியும், அதன் பிறகு வருகின்ற வரிகள் எல்லாம் நம்மையும் நமது வாழ்வையும் நமது எதிர்காலத்தையும் மையப்படுத்தியவையாகும். இறைவனோடு எதார்த்தமாக நாம் உரையாடல் நடத்த வேண்டுமென்றால் இறைவனோடு கூடிய உரையாடல் ஒவ்வொரு நாளும் தொடர வேண்டும்.
வருடத்திற்கு ஒரு முறை , மாதத்திற்கு ஒரு முறை, வாரத்திற்கு ஒரு முறை மட்டும் ஆலயத்திற்குச் சென்று ஆண்டவரை சந்தித்து விட்டு வரலாம்... அவரோடு உரையாடி விட்டு வரலாம்... என எண்ணுவதை விட்டு விட்டு, ஒவ்வொரு நாளும் இறைவனோடு உரையாடல் நடத்த நமது வாழ்வில் பழகிக்கொள்ள வேண்டும் என்பது தான் இயேசுவின் இறைவேண்டல் இன்றைய நாளில் நமக்கு தருகின்ற பாடம். இயேசுவைப் போல நாமும் ஒவ்வொரு நாளும் இறைவனோடு உரையாட சில நேரங்களை ஒதுக்கிட முயற்சிகளில் ஈடுபடுவோம்.
நமக்காக தன் உயிரைத் தியாகம் செய்த இயேசு கிறிஸ்து நம்மோடு உரையாட காத்திருக்கின்றார். காத்திருக்கும் இறைவனை கண்டு கொள்ள இறையருளை இன்றைய நாளில் இணைந்து வேண்டுவோம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக