அச்சம் நம்பிக்கையை மறைக்கிறது ...
இறைவன் இயேசுவின் அன்புக்குரியவர்களை இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் .இந்த உலகத்தில் நாம் எல்லோரும் ஏதோ ஒன்றுக்கு அச்சப்பட்டு கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் அச்சத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதுதான் இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தின் மைய சிந்தனையாக அமைந்துள்ளது. விவிலியத்தில் அச்சத்தை குறித்து பலவற்றை நாம் காணமுடியும்.
மத்தேயு நற்செய்தி 4 : 24 வசனத்தில் நாம் வாசிக்கலாம். இயேசுவின் சீடர்கள் இயற்கை சீற்றத்தைக் கண்டு அஞ்சினார்கள். இந்தத் இயேசுவின் சீடர்கள் எல்லாம் இயேசுவோடு இருந்தவர்கள். அவருடைய பணி வாழ்வில் அவரை பின் தொடர்ந்தவர்கள். இயேசு செய்த பல வல்ல செயல்களை கண்ணால் கண்டவர்கள். ஆனாலும் பயம் என்று வருகின்ற போது அவர்கள் அனைத்தையும் மறந்து போனார்கள். தங்களை மறந்தார்கள், தங்களோடு இருக்கின்ற ஆண்டவர் இயேசுவை மறந்தார்கள். எனவேதான் நாம் சாகப் போகிறோம் என இயேசுவினிடத்தில் கூறினார்கள். பல நேரங்களில் நமது வாழ்வில் அச்சம் ஏற்படுகின்ற போது நாமும் அனைத்தையும் மறக்க கூடியவர்களாக இருக்கின்றோம்.
ஆனால் இன்றைய நாள் நற்செய்தி வாசகமானது நாம் ஆண்டவருக்கு மட்டுமே அஞ்ச வேண்டும் வேறு எவருக்கும் அஞ்ச வேண்டியதில்லை என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது. விவிலியத்திலும் அஞ்சாதே என்ற வார்த்தை 365 முறை இடம்பெறுகிறது. இது நமக்கு ஒரு விதமான ஊக்கத்த தரக்கூடியதாக அமைந்துள்ளது.
இயேசு மண்ணில் வாழ்ந்த போது பலவற்றை தன்னுடைய சீடர்களுக்கு கற்பித்தார். அவர் கற்பித்தவற்றுள் மிகவும் சிறந்தது என நான் கருதுவது "அஞ்சாதே " என்பது ஆகத்தான் இருக்க முடியும். இயேசு சீடர்களுக்கு அச்சத்தைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறினார். ஆனால் அவர்கள் அஞ்ச கூடியவர்களாக தான் இருந்தார்கள். எனவே தான் இயேசுவை கைது செய்த போது அனைவரும் அனைத்தையும் விட்டுவிட்டு ஓட கூடியவர்களாக இருந்தார்கள். அச்சத்தைத் தவிர்க்க வேண்டும் என்பது மிகவும் கடினமான ஒன்றுதான். ஆனால் அது முடியாத ஒன்று அல்ல. இது செய்யக் கூடிய ஒன்றுதான்.
நாம் அனைவரும் அறிவோம் தொடக்ககாலத் ஒரு அவையில் இயேசுவின் சீடர்களும், இயேசுவை ஏற்றுக் கொண்டவர்களும் யூதர்களை கண்டு அஞ்சினார்கள். எனவே குகைகளுக்குள் சென்று மறைந்து கொண்டார்கள். ஆனால் இவர்களெல்லாம் கடைசிவரை அந்த குகைகளுக்குள்ளே இருக்க வேண்டும் என எண்ண வில்லை. மாறாக குகையை விட்டு வெளியே வந்தார்கள், மறைவிடத்தில் இருந்து வெளியே வந்து ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை அறிவித்தார்கள். இவர்களின் இத்தகைய மாற்றத்திற்கான காரணம் அவர்கள் தங்களுக்குள்ளாக அஞ்ச வேண்டியது ஆண்டவர் ஒருவருக்கே மற்றவருக்கு அல்ல என்பதை உறுதியாக தங்களுக்குள் நிலை நிறுத்திக் கொண்டார்கள். எனவேதான் தங்கள் வாழ்வில் துணிவோடு யாரைக் கண்டு அஞ்சினார்களோ அவர்கள் முன்பாகவே வந்து நின்று ஆண்டவர் இயேசுவை பற்றிய நற்செய்தியைப் பறைசாற்ற கூடியவர்களாக மாறினார்கள்.
இன்றைய நாள் முதல் வாசகத்தில் அச்சத்திலிருந்து வெளிவந்த ஒரு மனிதனைப் பற்றி அழகாக எடுத்துரைக்கிறார். அவர் வேறு யாரும் அல்ல நமது விசுவாசத்தின் தந்தை எனப்படக்கூடிய ஆபிரகாம் . கடவுள் ஆபிரகாமை அழைத்தார். ஆபிரகாம் கடவுளை நேரடியாக பார்க்கவில்லை. ஆனால் அவரது குரல் ஓசையை கேட்டார். அந்த வார்த்தைகளை நம்பி அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்தொடர்ந்தார். இந்த ஆபிரகாம் தன் வாழ்வில் உணவை எண்ணியோ இடத்தை எண்ணியோ, நீரை எண்ணியோ அஞ்சியதாக நாம் எங்கும் காண முடியவில்லை. காரணம் இவர் ஆண்டவரின் வார்த்தைகளின் மீது நம்பிக்கை கொண்டவராய் அனைத்தையும் துறந்து ஆண்டவரை நோக்கி பயணப்பட்டார். நாமும் நமது வாழ்வில் அச்சத்தை தவிர்த்து இயேசுவின் சீடர்கள் போலும், ஆபிரகாமை போலும் வாழ அழைக்கப்படுகின்றோம்.
நாம் அச்சத்தை தவிர்த்து வாழுகின்ற போது இயேசுவின் சீடர்களை போல பலவிதமான மகத்துவமான செயல்களை நம்மால் இந்த உலகத்தில் செய்யமுடியும். அச்சத்தை கலைந்து ஆண்டவரை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் 99 அடி அவர் நம்மை நோக்கி எடுத்து வைப்பார் என்பது மறுக்கவியலாத உண்மையாக உள்ளது.
அன்புக்குரியவர்களே நாம் அனைவரும் அறிந்திருக்கலாம் சிறந்த மேடைப் பேச்சாளர் பர்வீன் சுல்தான் அவர்கள் எப்போதும் சொல்லுவார் இந்த உலகத்தில் வலியை கண்டு அஞ்சுபவர்கள் சிலர் ஆனால் வலித்து விடுமோ என அஞ்சுபவர்கள் பலர் என்று.... எனவேதான் நாம் சொல்வதும், நாம் சிந்திப்பதும் சரியாக இருந்தாலும் கூட அச்சத்தின் காரணமாக அதனை சொல்லாமலும், செயலில் காட்டாமலும் இருக்க கூடியவர்களாக நாம் பல நேரங்களில் இருந்து கொண்டிருக்கிறோம்.
இன்றைய நாளில் அச்சத்தை கலைந்து ஆண்டவரை இறுகப் பிடித்துக் கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். அச்சம் இருக்கும் பொழுது நம்பிக்கை மறைக்கப்படுகிறது. நாம் அச்சத்தை தவிர்த்து அருகில் இருக்கக்கூடிய சகோதரர்களையும், அதிகாரிகளையும் உலகத்தில் உள்ள ஒவ்வொருவரையும் அன்போடு நோக்கவும் அச்சமின்றி அவர்களோடு வாழ அழைக்கப்படுகிறோம். இந்த உலகத்தில் நாம் அஞ்ச வேண்டியது ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஒருவருக்கு மட்டுமே தவிர வேறு எவருக்கும் இல்லை காரணம் அவர் கூறினார் நாம் சிட்டுக்குருவிகளை விட மேலானவர்கள் என்று இந்த ஆண்டவரிடம் மட்டும் அச்சம் கொள்ளக் கூடியவர்களாக இந்த சமூகத்தில் அச்சம் தவிர்த்து ஆண்டவரின் சீடர்களாக வாழ இறையருளை இன்றைய நாளில் இணைந்து வேண்டுவோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பாராக ஆமென்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக