இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பில் நம்பிக்கை கொண்டவர்களாக, துணிச்சல் மிக்கவர்களாக இயேசுவின் உயிர்ப்புக்குச் சான்று பகர்கின்ற பேதுரு, தான் கொண்டிருந்த நம்பிக்கையினை வெளிப்படுத்தும் வண்ணமாக தன்னிடத்தில் யாசகம் கேட்கின்ற ஒரு மனிதனிடத்தில், என்னிடம் உனக்கு கொடுப்பதற்கு பொன்னோ பொருளோ இல்லை. ஆனால் என்னிடம் இருப்பதை உனக்கு தருகிறேன். நாசரேத்து இயேசுவின் பெயரால் சொல்கிறேன், எழுந்து நடை என்று சொல்லி அவருக்கு நலம் தருவதை இன்றைய முதல் வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம்.
நற்செய்தி வாசகத்தில் கூட ஆண்டவர் இயேசுவின் சீடர்கள் இயேசுவின் உயிர்ப்பின் மீது ஐயமுற்ற நிலையில் அவர்கள் எம்மாவூசுக்கு சென்று கொண்டிருந்தபோது இயேசுவும் அவர்களோடு உடன் பயணித்து மறை நூல்களை விளக்கிச் சொல்லி இறுதியில் அவர்களோடு தங்கி, அப்பம் பிடுகிற போது தங்களோடு வந்தவர் தங்களுக்கு திருச்சட்டத்தை எல்லாம் விளக்கிச் சொன்னவர், அப்பத்தை பிட்டுக் கொடுத்தவர் ஆண்டவர் இயேசு கிறிஸ்து என்பதைக் கண்டுணர்ந்தவர்களாக நம்பிக்கை பெற்றவர்களாக புத்துணர்வோடு மீண்டுமாக ஆண்டவர் இயேசுவின் பணியை ஆர்வத்தோடு செய்ய புறப்படுவதைத் தான் இன்றைய நற்செய்தி வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம். இந்த வாசகங்களின் அடிப்படையில் நமது வாழ்வை சீர்தூக்குகிற போது, நம்மிடம் பொன்னும் பொருளும் நிறைய இருந்தாலும், நம்மிடம் அடிப்படையாக இருக்க வேண்டியது இந்த இயேசுவின் மனநிலை என்பதை உணர்ந்தவர்களாக நாம் சொல்லிலும் செயலிலும் இயேசுவை வெளிப்படுத்துகின்ற மனிதர்களாக நம் வாழ்வை அமைத்துக் கொள்ளவும், இந்த இயேசுவுக்கு சான்று பகருகின்ற நல்ல சாட்சியாளர்களாக நம் வாழ்வை அமைத்துக் கொள்ளவும், ஆண்டவரிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக