இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
பாஸ்கா காலத்தில் மூன்றாம் வாரத்தில் இருக்கின்ற நமக்கு ஆண்டவரின் மீதான ஆழமான நம்பிக்கையில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள ஆண்டவரின் வார்த்தைகளை இதயத்தில் இருத்தி ஆழமாக சிந்திக்க நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம். அச்சத்தோடு மாடியறையில் முடங்கி கிடந்தவர்கள் தூய ஆவியாரின் தூண்டுதல் பெற்றவர்களாக இயேசுவை குறித்து அனைவருக்கு மத்தியிலும் சான்று பகர்ந்தார்கள் என்பதை நாம் அறிவோம். இந்த இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட நாம் ஒவ்வொருவருமே இந்த இயேசுவின் வார்த்தைகளை அனுதினமும் இதயத்தில் இருத்தி சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.
தொடக்க காலத்தில் இயேசுவின் சீடர்கள் நம்பிக்கையற்றிருந்த போதும், மறை நூலை சரியாக உணர்ந்து கொள்ளாது இருந்த போதும், ஆண்டவர் அவர்களிடையே தோன்றி அவர்களோடு ஒருவராக இருந்து மறை நூல்களை விளக்கிச் சொல்லி, அவர்களுக்கு தெளிவுபடுத்தினார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.
இந்த இறை வார்த்தைகளின் அடிப்படையில் நாம் நமது வாழ்வில் எப்போதெல்லாம் விவிலியத்தை கையில் ஏந்துகிறோமோ அப்போதெல்லாம் நமது வாழ்வு மாற்றம் பெறுகிறது என்பதை உணர்ந்து கொள்ளவும், விவிலியத்தை அதிகமாக வாசிக்கவும், வாசித்த வார்த்தைகளை இதயத்தில் இருத்தி சிந்திக்கவும், அதன் அடிப்படையில் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு இயேசுவின் சீடர்களைப் போல தெளிவு பெற்றவர்களாக, இயேசுவை அடுத்தவருக்கு அறிவிக்கின்ற மனிதர்களாக நம் வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக