திங்கள், 22 பிப்ரவரி, 2021

பண்பான மனிதர்களாக வாழ்வோம்... (23.2.2021)

பண்பான மனிதர்களாக வாழ்வோம்... 

இறைவன்  இயேசுவில் அன்புக்குரியவர்களே! 
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்றைய இரு வாசகங்களும் இறைவார்த்தையின் வலிமையைப் பற்றி, அவற்றின் மேன்மையைப் பற்றி, நமக்கு விளக்குகின்றன.


மனித உள்ளத்தில் இருந்து
வீசப்படும் வார்த்தைகள்
ஒவ்வொன்றும் ஒன்றித்து
வாழ்க்கையின் வசமாகி
பல்திறன் படைக்கின்றன.

பரம்பொருளாம் இறைவனின்
பரிசுத்தமான வார்த்தைகள்
வாழ்க்கையை வசமாக்கி
பக்குவமாய் வழிநடத்தி
பேரின்பம் பெருக்குகின்றன.

ஆம்! இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் அனுப்புகின்ற வார்த்தைகள், இறைவனது மிகப் பெரும் பணியை ஆற்றுகின்றன. இறைவனின் வார்த்தைகள் செயல் திறன் மிக்கவை. எவ்வாறு மழையும் பனியும் நிலத்தை நனைத்து, இறுகிய நிலத்தினுள் மறைந்திருக்கும் விதையை முளைத்து அரும்பி வளரச் செய்து, அதன் பலனாக அனைவருக்கும் அன்றாடம் வாழத் தேவையான வயிறாரும் உணவையும், 
உணவின் ஆதாரமான விதையையும் மனிதன் பேணிப் பாதுகாக்கும் விதமாக, எல்லோரும் வாழ்வடையும் விதமாக, இரவிலும் பகலிலும் ஒவ்வொரு நொடியிலும் அயர்வுறாது செயல்பட்டு, ஒவ்வொரு உயிரையும் இவ்வுலகில் வாழச் செய்கின்றன என்பதை
இறைவாக்கினர் எசாயா வழியாக  இறைவன் இன்று கூறுகிறார். 
இன்றைய நற்செய்தி வாசகத்தில் வானக விருந்தாக, வார்த்தையின் வடிவமாக, உடல் எடுத்து இம்மண்ணில் பிறந்து, தான் செல்கின்ற இடமெல்லாம் இறைவார்த்தையை விதைத்துச் செல்கின்ற ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்றைய நாளில் சிறப்பாக நமது வார்த்தைகளின் வழியாக இறைவனோடு உறவு கொள்ள ஒரு மிகச்சிறந்த  செபத்தினை இன்று நமக்கு கற்பிக்கின்றார்.

ஆண்டவர் இன்று நமக்கு கற்பிக்கும் செபத்தின் அனைத்து வாக்கியங்களும் கடவுளாம் ஆண்டவர், கண் துஞ்சாதவராக, அல்லும் பகலும் தம் மக்களை கண்ணோக்குபவராக,  என்றென்றும் புகழ்ச்சிக்கும் ஆராதனைக்கும் உரியவராக, தம் மக்களுக்குத் தேவையான உணவை,  அன்றன்று வழங்குபவராக,  நாம் எத்தனை முறை குற்றங்கள் புரிந்தாலும் நம்மை மன்னித்து ஏற்றுக் கொள்பவராக இருக்கின்றார் என்பதையும், 

                       அந்த மன்னிப்பின் மூலம் மனமாற்றம் பெற்றவர்களாக,  அவரது பிரசன்னத்தின் மூலமாக தூய ஆவியானவரின் வல்லமையால் புத்தொளி பெற்றவர்களாக, நாம் செல்கின்ற இடமெல்லாம் நாம் உள்ளத்தில் தாங்கியிருக்கின்ற பேரொளியை நமது அன்பான வார்த்தைகளால்,  அக்கறையான புரிந்துணர்வால், கண்டிப்பின் கரிசனைகளால், தள்ளாடும் முதியோரை தாங்கிப்பிடிக்கும் அன்பான கரங்களால், எல்லோரும் ஏற்றம் பெற ஏங்கும் எதார்த்தமான எண்ணங்களால், 

          ஆண்டவரின் அன்புக் கட்டளைகளை ஆர்வத்தோடு செயல்படுத்தும் மழையையும் பனியையும் போல, நாமும் வார்த்தை வடிவான இறைவனின் வழித்தோன்றல்களாய், இறையாட்சியின் விழுமியங்களை வல்லமையோடு செயல்படுத்திட இறைவாக்கின் வழியாக  இறைவன் நம்மை அழைக்கின்றார். 

              இன்று நாம் இறுகிப்போன நிலமாக இருக்க விரும்புகின்றோமா?
அல்லது ஈரமான இதயத்திலிருந்து பெருகியோடும் வல்லமையான அருளின் நதியாக, பரந்த மனதோடு 
பண்பான மனிதர்களாக வாழப் போகின்றோமா? 
 
இறைவனின் கரங்களில் நம்மை ஒப்புவித்து ஆண்டவர் இயேசுவின் கல்வாரிப்  பலியில் இணைவோம்.

1 கருத்து:

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...