சனி, 6 பிப்ரவரி, 2021

கைம்மாறாக என்ன கிடைக்கும்...? (7.2.2021)

கைம்மாறாக  என்ன கிடைக்கும்...?

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

மனிதன் வாழ்க்கையில் இன்பத்தையும் துன்பத்தையும் சம்பாதிக்கிறான்.

இன்பம் பணத்தை போன்றது, சம்பாதிக்கும் பணம் செலவாகி விடுவதைப் போல இன்பமும் போய் விடுகிறது.
துன்பம் அனுபவம் போன்றது. அது மனிதன் இடமே தங்கிவிடுகிறது.
இன்பம் விருந்தாளியை போன்றது. சிலநாள் இருக்கும் போய்விடும்.
துன்பம் உறவினர்களை போன்றது. அது எளிதில் பிரிவதில்லை.
துன்பத்தை அனுபவிக்கிறவன் அது நீங்காதா? என்று நினைப்பான்.
அதை நீக்குவதற்கு யாராவது வர மாட்டார்களா? என்று ஏங்குவான்.  
நாம் வாழும் இந்த உலகத்தில் கண்ணீரையும், காயங்களையும் யார்தான் விரும்புவார்கள்?என்று கேள்வியை எழுப்பி பார்த்தால்...காதல் செய்பவர்களும் அடுத்தவர் மீதான அன்போடு வாழ்பவர்களும் மட்டுமே என்ற பதிலைப் பெறலாம் என கவிஞர் அப்துல்ரகுமான் தனது மகரந்தச் சிறகு என்ற புத்தகத்தில் கூறுகிறார். 
ஒரு மனிதன் நல்லதை செய்கிறான். ஆனால் அவனுக்கு துன்பமே கிடைக்கிறது. இதை எப்படி புரிந்து கொள்வது? என்ற நோக்கத்தோடு அலையக்கூடிய நம்மில் பலருக்கு இன்றைய முதல் வாசகத்தில்  வாசிக்கப்படும் யோபுவின் வாழ்வு  பாடம் கற்பிக்கிறது.
யோபு என்ற மனிதன் எல்லாவித செல்வங்களும் இறை பக்தியோடும் வாழ்ந்தவன். திடீரென அனைத்தையும் இழந்து விடுகிறான். அது கடவுளுக்கும் அலகைக்கும் இடையேயான உரையாடளால் நிகழ்ந்தது என்பது அவன்  அறியாதது.  இந்த யோகபு தன்னிடமிருந்த செல்வங்களை கொண்டு எத்தகைய பணி எல்லாம் முன்னெடுத்தார் என சிந்திக்கும் பொழுது யோபு நூல் 29 அதிகாரம் அதற்கு பதில் தருகிறது.
 இவர் கதறிய ஏழைகளை காப்பாற்றினார்.தந்தை 
இல்லாதோருக்கு உதவினார். 
அழிய இருந்தவரும் இவருக்கு ஆசி வழங்கினார்.
கைம்பெண்களின் உள்ளத்தை களிப்பால் பாடச் செய்தவர். அறத்தை ஆடையாக அணிந்தவர்.
நீதி இவருக்கு மேலாடையும் பாகையும் ஆயிருந்தது.
பார்வையற்றவருக்கு கண் ஆனார்.
கால் ஊனமுற்றோர்க்கு  கால் ஆனார்.
ஏழைகளுக்கு தந்தையாக இருந்தார்.
அறிமுகமற்ற வழக்குக்காக வாதிட்டார். 
இத்தகைய நலமான நல்ல பணிகளைச் செய்தவர். திடீரென அனைத்தையும் இழந்து உடல் முழுவதும் கொப்புளங்கள், ஒரு ஓட்டை மட்டும் கையில் வைத்துக்கொண்டு, சமூகத்தில் அனைவரும் தொட மறுக்கக்கூடிய பரிதாபமான நிலையை அடைந்தார்.

 இச்சூழலில் அவரின் நண்பர்கள் அவருக்கு எதிராக சொல்லக்கூடிய ஆழமற்ற இறையியல் கருத்துக்கள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல அமைகிறது. இதனை அவரே  யோபு புத்தகம் 30 : 10 ஆம் வசனத்தில் கூறுகிறார். என்னை அவர்கள் அருவருகின்றனர். என்னை விட்டு விலகி போகின்றனர். என்முன் காறித்துப்பும் அவர்கள் தயங்கவில்லை.

இந்நிலையில் நல்லது செய்பவன் ஏன் துன்புற வேண்டும்? என்ற கேள்வியை உள்ளத்தில் ஆழமாக எல்லாம். இயேசுவும் இந்த மண்ணில் வாழ்ந்த  33 ஆண்டு காலம் நலமான நல்ல பணிகளைச் செய்து வந்தார். அதற்கு அவர் பரிசாக பெற்றது பலரின் தேவையற்ற பேச்சும், சிலுவை மரணமுமே...

 இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட இயேசு இறையாட்சி பணிக்கென சீடர்களை அழைத்துக் கொண்டு, நோயுற்றவர்கள் பேய் பிடித்தவர்கள், சமூகத்தால் புறம்தள்ளப்பட்ட நோயாளிகள் என ஒவ்வொருவரையும் தேடிச்சென்று குணப்படுத்துகிறார். இறைவனையும் தேடிச் சென்று தனிமையிலும் ஜெபிக்கிறார். வாருங்கள் அடுத்த ஊருக்கும் சென்று இப்பணியைச் செய்வோம் என சீடர்களை அழைத்துக் கொண்டு புறப்படுகிறார். 
நலமான பணிகளை மட்டுமே முன்னெடுத்தால் கைம்மாறு துன்பமாக இருக்கும் போது எப்படி அதனை முன்னெடுப்பது? என்ற கேள்விக்கு விடை தரும் வகையில் இன்றைய இரண்டாம் வாசகமானது அமைகிறது.  கொரிந்து நகர மக்களுக்கு பவுல் எழுதிய முதல் கடிதத்தில்,  மனநிறைவே கைம்மாறு (1கொரி. 9:18) எனக் குறிப்பிடுகிறார். இதை மனதில் கொண்டு பயணிக்கவே நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம்.

ஒருமுறை என் நண்பர் என்னிடம் கேட்ட கேள்வி...யாராவது உன்னிடம் உதவி வேண்டி கையேந்தி நின்றால் நீ என்ன செய்வாய்? என்று கேட்டார். அதற்கு நான் கூறினேன். ஏன் இவர் அடுத்தவரிடம் கையேந்துகிறார்? என சிந்திப்பேன். அதன் பிறகு அவருக்கு உதவி செய்வேன் என்றேன். ஆனால் அவர் என்னிடத்தில் கூறினார். முதலில் கையேந்தி நிற்பவருக்கு உதவி செய். அதன் பிறகு ஏன் இவர் இத்தகைய நிலைக்கு ஆளானார் என சிந்தனை செய்... உன்னுடைய  வாழ்வில் இத்தகைய சூழல்...நீ இருக்கும் தளங்களில் உருவாகாத வகையில் மக்களிடையே விழிப்புணர் கொடுத்து வா என்று கூறினார்.

ஸ்டீபன் கோவே என்பவர் 90 : 10 என்ற அடிப்படையில் ஒரு கொள்கையை கூறுவார். அதாவது ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது என்றால். அந்நிகழ்வில் 10% நம்மால் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.90% நம்மால் மாற்ற இயலாது எனவே நடந்ததை எண்ணி வருந்தது வாழ்க்கையை வளமுடன் வாழுங்கள் என்பார். நடந்ததை முற்றிலும் நம்மால் மாற்ற இயலாது. அதுபோலவே நடப்பதை முழுமையாக கணிக்கவும் நம்மால் இயலாது. நடந்தது, நடக்கப் போவது குறித்து வருந்துவதை விட, நாம் செய்யும் நற்செயல்களையும், அதனால் கிடைக்கும்  மனநிறைவையும் அடிப்படையாகக் கொண்டு செயல்பட இன்றைய வாசகங்கள் வழியாக நாம் அழைக்கப்படுகின்றோம்.

இத்தகைய மனநிறைவை மனதில் கொண்டிருந்த காரணத்தினாலே யோபு, அனைத்தையும் இழந்த நிலையிலும் கூட ஆண்டவர் அளித்தார் ஆண்டவர் எடுத்துக்கொண்டார் (யோபு 1 :21) என்றும், நன்மையை கடவுளிடமிருந்து பெற்ற நாம் ஏன் தீமையை பெறக்கூடாது (யோபு 2: 10) என்றும் குறிப்பிடுகிறார்.
அதுபோலவே இயேசுவும் தான் கைது செய்யப்படுவதற்கு முன்பாக, கெத்சமனே தோட்டத்தில் இறைவனிடம்... இத்துன்ப கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும், என் விருப்பப்படி அல்ல... உம் விருப்பப்படியே நிகழட்டும் (மாற்க்கு 14: 36) என்கிறார்.   

மனநிறைவை மையமாகக் கொண்டு தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்ட இந்த நல்ல மனிதர்கள் காட்டிய பாதையில் அவர்களை  பின் தொடரக்கூடிய நாம் நல்லதை செய்கிறோம், ஆனால் துன்பமே பரிசாக கிடைக்கிறது என்றாலும் ... தொடர்ந்து நல்லதை செய்வோம். மனநிறைவை கைம்மாறாக பெற்றுக்கொள்வோம்.

2 கருத்துகள்:

  1. நாம் விதைக்கின்ற நற்செயல்கள் எனும் விதைகள் நிச்சயம் நமக்கு நற்கனிகளைத் தரும். தங்களின் பணிகளும் மிகுந்த பலன் கொடுக்க வாழ்த்துகிறோம்! ஜெபிக்கிறோம்!

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...