இதயக் கதவுகளை திறப்போம்
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அது ஓர் அழகிய நகரம். அந்த நகரத்தின் நுழைவு வாயிலில் எப்போதும் ஒரு வயதான பெரியவர் அந்நியர்கள் யாரும் உள்ளே சென்று விடாமல் காவல் காத்துக்கொண்டிருப்பார். ஒரு நாள் வாலிபன் ஒருவன் நகரத்தின் வாயிலை நோக்கி குதிரையில் வந்துகொண்டிருந்தான்.
அப்போது அங்கிருந்த வயதான காவலாளியிடம் "ஐயா பெரியவரே, இந்த ஊர் மக்கள் எப்படி?"என்று கேட்டான்.
அதற்குக் காவலாளி "ஏன் கேக்குற தம்பி ? இந்த ஊருக்கு குடிவரப் போறியா?" என்று சந்தேகத்துடன் கேட்டார்.
"ஆமாம் ஐயா. நான் முன்னாடி இருந்த ஊர் ரொம்ப மோசம். எதுக்கெடுத்தாலும் சண்டைக்கு வருவாங்க. ஒருத்தரைப் பத்தி ஒருத்தர் தப்பா பேசிக்கிட்டும் திட்டிக்கிட்டும் , எப்படா அந்த ஊரை விட்டு வருவோம்னு இருந்தது. அதான் கேட்டேன் இந்த ஊர் எப்படி?" என்று கேட்டான்.
''நீ வேற தம்பி, இந்த ஊர் உன்னுடைய ஊரைவிட ரொம்ப மோசம். போட்டி, பொறாமை, ஜாதிச் சண்டை, கலவரம்ன்னு ஏதாவது ஒரு பிரச்னை இருந்துக்கிட்டே இருக்கும். நீயே நிம்மதியைத் தேடி வர்ற, உனக்கு இந்த ஊரு சரிப்படாது தம்பி " என்று கூறி அந்த வாலிபனை வெளியே வழியனுப்பி வைத்தார்.
சிறிது நேரம் கழித்து,
அவ்வழியாக வந்த வேறொரு ஆள் காவலாளியிடம் அதே கேள்வியைக் கேட்டான்.
"ஐயா, இந்த ஊரில் தங்கி வியாபாரம் பண்ணலாம்ன்னு இருக்கேன். இந்த ஊர் மக்கள் எப்படி?"
பெரியவர் சிரித்துக்கொண்டே , "ஏன் தம்பி, உனக்குக் கல்யாணம் ஆகிடுச்சா ?"என்று கேட்டார்.
"மூன்று குழந்தையே இருக்குதுங்க ஐயா" என்றான்.
"அப்புறம் ஏன்? இந்த ஊருக்கு வர்ற? உங்க ஊர்லயே வியாபாரம் பண்ணலாம்ல? " என்றார் காவலர்.
"எங்க ஊர் மாதிரி வராதுங்க.. அந்த ஊர் மக்கள் ரொம்பப் பாசக்காரங்க. என் குடும்பம் இப்போ வறுமையில இருக்கு. சம்பாதிக்கத்தான் இந்த ஊருக்கு வந்தேன். நல்லா சம்பாதிச்சிட்டு மறுபடியும் அங்கேயே போயிடுவேன்" என்று கண் கலங்கியபடியே கூறினான்.
"அழாதே தம்பி, இந்த ஊர் மக்களும் ரொம்ப நல்லவங்க. தைரியமா நீ வியாபாரம் பண்ணலாம்" என்று கூறி கதவுகளைத் திறந்து உள்ளே அனுப்பி வைத்தார்.
காவலாளியின் அருகில் இருந்த ஒருவர் இந்த இரண்டு சம்பவங்களையும் கவனித்துக்கொண்டிருந்தார்.
உடனே அவரிடம் "முதலில் வந்தவர்கிட்ட இந்த ஊர் பொல்லாததுன்னு சொன்னீங்க, இவர்கிட்ட மட்டும் நல்ல ஊர்ன்னு சொல்லுறீங்களே ஏன்?" என்று சந்தேகத்துடன் கேட்டார்.
அதற்குப் பெரியவர் "இந்த உலகம் கண்ணாடி மாதிரி. நாம எப்படி இருக்கிறோமோ அப்படித்தான் கண்ணாடி நம்மைக் காட்டும்'' என்றார். ஒரு சிறு விதை போன்றது தான் நமது வாழ்வும். நல்ல எண்ணங்களை விதைத்தால் நன்மையை அறுவடை செய்வோம். போட்டி பொறாமையுடன் தீய எண்ணங்களை விதைத்தால் தீயவற்றை தான் அறுவடை செய்வோம், என்றார் அந்த பெரியவர்.
ஆம்! அன்புக்குரியவர்களே!
மேற்கண்ட நிகழ்வில் நாம் காணும் காவலாளி, வாயிலின் உள்ளே வருவோரையும் போவோரையும் கவனித்துக் கொள்பவராக, வாயில் கதவினை யாருக்கு, எந்த நேரத்தில் திறக்க வேண்டும் என்பதை அறிந்தவராக இருக்கிறார். இந்த காவலாளியைப் போலவே நாமும் நமது மனதிற்கு உள்ளே செல்கின்ற காரியங்களையும் அவற்றில் இருந்து வெளியேறுகின்ற காரியங்களையும் நாம் கவனிக்க வேண்டும், சிந்தித்து சீர்தூக்கி பார்க்க வேண்டும் என இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு அழைப்பு விடுக்கின்றார்.
இன்றைய முதல் வாசகத்தில் சூழ்ச்சி மிக்க பாம்பு கூறிய வார்த்தைகள் அனைத்தையும் சிந்தித்துப் பார்க்காமல், அந்த வார்த்தைகளால் கவரப்பட்ட ஏவாள், பாம்பு கூறிய வார்த்தைகளைப் பற்றி, அந்த வார்த்தைகளின் விளைவுகளைப் பற்றி எண்ணாமல், அவற்றை தனது இதயத்தினை திறந்து அதனுள் அனுமதித்தாள்.
கடவுள் தொடக்கத்தில் இவ்வுலகில் மனிதர்களை படைத்த பொழுது, அவர்களுக்கு திறந்த செவிகளையும் ஒளிரும் கண்களின் பார்வையையும், வார்த்தைகளை எடுத்துரைக்க தெளிவான நாவையும் கொடுத்தார். தனது உடலின் காதுகள் திறந்திருந்தாலும் தனது உள்ளத்தின் காதுகள் உணர்வற்று இருந்தபடியால், அன்று அந்த பாம்பின் வார்த்தைகளுக்கு செவி கொடுத்து செயல்பட்டதனால், அந்த வார்த்தைகளால் தனது ஆசீர்வாதத்தை இழந்து போகின்றாள்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் பல ஆண்டுகளாக காதுகளும் வாயும் கட்டப்பட்டதாக வாழ்ந்து கொண்டிருந்த மனிதனுக்கு அவனுடைய காதுகளையும் நாவையும் ஆண்டவர் இயேசு திறந்து விடுகின்றார், கட்டவிழ்த்து விடுகின்றார். வாழ்நாள் முழுவதும் அடைபட்ட காதுகளுடன் கட்டப்பட்ட வாயுடன் வாழ்ந்து கொண்டிருந்த அந்த ஏழை மனிதன் தனது இதயக் கதவுகளை, தனது இதயத்தின் செவிகளை, ஆண்டவரின் ஆசீர்வாதத்திற்கு திறந்துவைத்து இருந்தபடியால் அன்று அந்த மனிதன் ஆண்டவர் இயேசுவை கண்டு கொண்டான். அன்று ஆண்டவரின் வார்த்தைக்குச் செவிகொடுத்து அந்த மனிதன் தனது கட்டுகளிலிருந்து அன்று விடுவிக்கப்பட்டான். அடைபட்டிருந்த காதுகள், அன்று அவனுக்கு ஆண்டவர் இயேசுவினால் திறந்து விடப்பட்டன. தனது வாழ்நாள் முழுவதற்குமான ஆசீர்வாதங்களை அன்று அந்த மனிதன் பெற்றுக் கொண்டான்.
இன்று நமது வாழ்வில் கவர்ச்சிகரமாக வந்து நம்மை ஏமாற்ற காத்திருக்கும் சாத்தானுக்கு செவிகொடுத்துக் கொண்டிருக்கிறோமா? அல்லது உண்மையின் வழியில், நன்மையின் வழியில் வாழ நம்மை அழைக்கும் ஆண்டவர் இயேசுவின் குரலுக்கு செவி கொடுக்கின்றோமா? யாருடைய குரலுக்கு நமது செவிகளை திறந்து வைத்து இருக்கின்றோம் என சற்று சிந்திப்போம். ஆண்டவர் இயேசுவின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ள நமது இதயக் கதவுகளை, ஆண்டவர் இயேசுவை நோக்கி திறந்து வைப்போம். நமது இதயத்தை காவல் செய்து நாம் பெற்ற நன்மைகள், ஆண்டவரின் ஆசிகள், நமது அண்டை அயலாருக்கும் கிடைக்கப்பெற, எல்லோரும் வாழ்வு பெற இன்றைய நாளில் இவ்வேளையில் சிறப்பாக ஜெபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக