சனி, 20 பிப்ரவரி, 2021

உடன்படிக்கையை நிறுவுவோமா...? (21.2.2021)

உடன்படிக்கையை நிறுவுவோமா...?

இறைவனில் அன்புக்குரியவர்களே
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன்.

ஒருவரோடு ஒருவர் அன்பிலும் உறவிலும் வளர வேண்டும் என்பதற்காக இறைவன் இவ்வுலகில் மனிதனை உருவாக்கினார். ஆனால் மனிதன் தன் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை மறந்து பகைமையை பகிர கூடியவனாக மாறினான். பொறுமையிழந்த இறைவன் படைத்த அனைவரையும் அழிக்கலானார். ஆனால் நேர்மையோடு செயல்பட்ட சிலரை காத்து பலரை அன்று நீரால் அழித்தார்.அதனைத் தொடர்ந்து நேர்மையோடு செயல்பட்ட அந்த சிலருக்கு முன்பாக இறைவன் தனக்குத் தானே மக்களோடு  ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தினார்.இனி நீரால் இந்த உலகத்தை இப்போது செய்தது போல் எப்போதும் செய்வதில்லை  என்ற உடன்படிக்கையை ஏற்படுத்தினார். அந்த உடன்படிக்கையின் அடையாளமாக வானவில்லை வானில் வைத்தார் என இன்றைய முதல் வாசகம் வழியாக நாம் வாசிக்க அறிகின்றோம்.
அன்று கடவுள் மனிதர்களோடு செய்த உடன்படிக்கையை போல இன்று நாம் நமது உடலுக்கும் உள்ளத்துக்கும் இடையே உடன்படிக்கையை செய்து கொள்ள அழைக்கப்படுகிறோம். 
ஏன் இந்த உடன்படிக்கை?
எதற்காக நாம் நமக்கு நாமே உடன்படிக்கை செய்துகொள்ள வேண்டும்? என்ற கேள்வி எழலாம்.

நாம் தற்போது தவக்காலத்தை தொடங்கியிருக்கிறோம்.
தவக்காலம் என்பது.... 

ன்னார்வத்துடன்  
ம்செய்து 
தர்க்கம் எதுவுமின்றி 
பிறருக்காக 
தன்னத்தை விடுத்து 
தரணியில் இணைவோம்...என்பதை உணர்த்தும் காலம்.

இந்த தவக் காலத்தில் நமது தவமானது பல நிலைகளில் இருக்கலாம்.
உண்ணாமை என்பது ஒரு தவமே... 
இன்சொல் மட்டுமே பேசுவேன் என்பதும் ஒருவித தவமே... 
அடுத்தவருக்கு என்னிடம் இருப்பதை பகிர்வேன் என்பதும் ஒருவித தவமே... 
மதிப்போடும் மரியாதையோடும் அனைவரையும் நோக்குவேன் என்பதும் ஒருவித தவமே ..

இவ்வாறு இக்காலத்தில் நாம் மேற்கொள்ளக்கூடிய தவத்தின் வடிவம் ஏராளம்.
இந்த தவத்தினை மேற்கொள்ளும்போது நம் தவத்தினை கலைக்க நேரிடும்  பல விதமான சோதனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இயேசு தன் வாழ்வில் மேற்கொண்ட சோதனைகளை தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்கின்றோம். 
ஒளி தொடாத எந்த ஒரு கல்லும் சிலையாக முடியாது.
அதுபோலவே சோதனைகளை எதிர் கொள்ளாத எவனாலும் வெற்றியை நிலைநாட்ட முடியாது.

இயேசு சோதனைகளின் போது மனம் தளராத உறுதியோடு நிலைத்து நின்று இயேசு சோதனைகளை எதிர்கொண்டு வெற்றி கண்டார். இயேசுவின் வெற்றி என்பது அவர் நமக்காக நமது பாவங்களுக்காக சிலுவையில் தன் இன்னுயிரை இழந்ததைதான் அவரது வெற்றியாக இன்றைய இரண்டாம் வாசகமமானது நமக்கு தெளிவு படுத்திக் காட்டுகிறது.

இந்த நாற்பது நாட்களும் பலவிதமான தவ முயற்சிகளில் ஈடுபடக் கூடிய நாம் நமது தவத்தினை கலைப்பதற்கு பலவிதமான இடையூறுகளை  சந்திக்கலாம். பொதுவாகவே நாம் மேற்கொள்ளும் தவமானது நமது உடலுக்கும் உள்ளத்துக்கும் இடையேயான மனப் போராட்டத்தை உருவாக்கலாம். 
உடலும் உள்ளமும் இணைந்து செல்ல நிலையை பல நேரங்களில் நமக்குள் நாமே உணரலாம் .
அச் சூழ்நிலைகளில் அஞ்சாது தூய ஆவியின் துணையோடு இயேசு எப்படி சோதனைகளை மேற்கொண்டாரோ அவரைப்போல நாமும் மேற்கொள்ள இன்றைய நாள் வாசகங்கள் வழியாக நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம்.
திருமுழுக்கு என்னும் அருள் சாதனத்தின் வழியாக நாம் ஒவ்வொருவரும் தூய ஆவியானவரை பெற்றுள்ளோம். இந்தத் தூய ஆவியானவர் நமக்கு அன்பை வழங்குகிறார். இதனை உரோமையர் 5:5 நாம் வாசிக்கின்றோம்." நம் எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது ஏனெனில் நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது".
தூய ஆவியார் வழியாக நமக்குள் பொழியப்பட்டுள்ள அந்த அன்பினை அடிப்படையாகக் கொண்டு நாம் வாழும் இவ்வுலகத்தில் அறச் செயல்கள் பல செய்து அர்த்தமுள்ள வகையில் இந்த தவக்காலத்தை மாற்றிக் கொள்ள நாம் சோதனைகளை எதிர் நோக்கி நமது பயணத்தை தொடருவோம். 
வானில் நிறுவப்பட்ட வானவில்லானது பார்க்கும்போதெல்லாம் கடவுள் நம்மோடு செய்து கொண்ட உடன்படிக்கையை நினைவுறுத்துவது போல நாம் நமக்குளாக சிலுவையில் தொங்கும் இயேசுவை உடன்படிக்கையாக மனதில் நிறுத்திக் கொள்வோம். அதை உற்று நோக்கும் போதெல்லாம் நாம் நமது உள்ளத்துக்கும் உடலுக்கும் இடையே செய்துகொண்ட உடன்படிக்கையை அது நினைவுறுத்தட்டும். அதனடிப்படையில் அறச்செயல்களால் இந்த அகிலத்தில் அறம் செய்யும் மனிதர்களாக மாறிட இந்த தவக்காலத்தில்  தூய ஆவியின் துணையோடு தொடர்ந்து பயணிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...