தலைமை பண்பினை வளர்த்துக் கொள்வோம்...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.
இன்று நாம் புனித பேதுருவின் தலைமை பீட விழாவினை கொண்டாடுகிறோம்.
தலைமை பொறுப்பு என்பது தன்னையும் பிறரையும் முன்னோக்கிச் செல்ல வேண்டிய சரியான பாதையை தேர்வு செய்து சரியான முறையில் அனைவரையும் அதில் வழி நடத்திச் செல்வதாகும்.
இன்றைய முதல் வாசகம் ஒரு தலைமைப் பொறுப்பில் இருக்கின்ற ஆயர் இவ்வாறு தன் பணியை மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் விருப்பத்தோடு நேர்மையோடும் செய்திட வேண்டும் என எடுத்துக் கூறுகிறது.
இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவால் முதன்முதலில் அழைக்கப்பட்ட சீடர்களில் ஒருவரான புனித பேதுருவின் ஆண்டவரை பற்றிய உண்மையை அறிக்கை இடுவதை எடுத்துரைக்கிறது.
இன்றைய வாசகத்தின் மைய நிகழ்வாக ஆண்டவர் இயேசு தான் யாரென தன் சீடர்களைப் பார்த்து கேட்கிறார். அப்பொழுது தான் ஆண்டவர் இயேசு மெசியா என்று தூய ஆவியானவர் வழியாக புனித பேதுருவுக்கு எடுத்துரைக்கின்றார். இன்றைய நாளில் ஆண்டவர் இயேசு நமக்கு வெளிப்படுத்தவிருக்கின்ற தலைமை பண்பை பற்றி இன்று சற்று சிந்திப்போம்.
தலைமை என்பது ஏதோ சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு மற்றவர்களை அடக்கி ஆளும் செயல்முறையல்ல. மாறாக தான் சார்ந்திருக்கிற குழுவின் மேம்பாட்டிற்காகவும், ஒற்றுமைக்காகவும் தேவையான செயல்களை விருப்பு வெறுப்பின்றி மேற்கொள்ளக்கூடிய பொறுப்பு.
தலைமை பண்பு என்பது ஒவ்வொரு மனிதருக்கும் உள்ளார்ந்து இருக்கின்ற ஆற்றல். இதை சிலர் வெகு எளிதாக கண்டுணர்ந்து விடுகிறார்கள். இன்னும் சிலர் அதை கண்டுபிடிக்காமலே ஏதோ வாழ்ந்துவிட்டு போவோம் என்று இருந்து விடுகின்றனர். தலைமை பண்பினை வளர்த்துக் கொள்ள தேடுதல் இருந்திட வேண்டும். இதற்கு அடிப்படையாக ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கைக்கு முதலில் பொறுப்பேற்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக