செவ்வாய், 9 பிப்ரவரி, 2021

உள்ளத்தின் வெளிப்பாடு என்ன? (10.2.2021)

உள்ளத்தின் வெளிப்பாடு என்ன?

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!

 இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் தான் படைத்த இப்புவியை பண்படுத்தவும் பாதுகாக்கவும் மனிதனை உருவாக்கினார். தான் உருவாக்கிய மனிதன் எப்படி செயல்பட வேண்டும் என்பதை உள்ளத்தில் சிந்தித்தவராய், தான் உருவாக்கிய மனிதனுக்கு இவ்வுலகில் உள்ள அனைத்தையும் தன் விருப்பம் போல பயன்படுத்த அனுமதிக்கிறார். ஆனால்  நன்மை,தீமை அறியும் மரத்தின் கனியை மட்டும் உண்ணாமல் இருக்க கட்டளையைப் பிறப்பிக்கின்றார்.  

பொதுவாகவே மனித மனமானது ஆசையின் அடிப்படையில் நகரக் கூடியது.
மனிதன் என்ற படகுக்கு ஆசைகள் தான் துடுப்புகளாக இருக்கின்றன. 
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை. 
ஒருவன் பொன்னை விரும்புகிறான். 
ஒருவன் மண்ணை விரும்புகிறான்.  
ஒருவன் பதவியை விரும்புகிறான். 
ஒருவன் பணத்தை விரும்புகிறான். 
ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு விதமான ஆசை மனிதனுக்குள் துளிர்விடுகிறது. 
ஆசை இல்லாத மனிதனே இல்லை. 
ஆசைகளைத் துறக்க வேண்டும் என்பவனும் மோட்சத்தை விரும்புகிறான்.  
மனிதன் ஆசைப்படுவதெல்லாம் அவனுக்கு கிடைத்துவிடுவதில்லை.

முதல் பெற்றோர்களிடம் எப்படி கடவுள் செய்யக்கூடாது எனக் கூறியதை, ஆசையின் அடிப்படையில் மனிதன் செய்தானோ, அது போலத்தான் இன்றும், இச்சமூகத்தில் செய்யக்கூடாது என்பதை தான் கொண்ட ஆசையினால் சுயநலத்திற்காக செய்கின்றான்.  அதன் பிறகு தான் செய்ததை சரியென நியாயப்படுத்த விரும்பியவனாய் குற்றத்தை  பிறர் மீது சாட்டுகின்றான். இப்படிப்பட்ட மனித வாழ்வில் இன்றைய நாளில் நற்செய்தி வழியாக இறைவன் நமக்கு தரக்கூடிய செய்தி... 
மனிதனுக்கு உள்ளே செல்லக் கூடிய எதுவும் அவனை தீட்டுப்படுத்துவதில்லை. மாறாக, மனிதனிடமிருந்து வெளிவருவதே தீட்டுப்படுத்துகிறது என்கின்றார்.

மனிதனுக்குள்ளாக இருக்கக்கூடிய ஆசை என்ற உணர்வானது, இந்த அகிலத்தில் பலவிதமான அநீதிகள் உருவாகுவதற்கு வழிவகுக்கிறது.உள்ளத்தில் இருந்து வெளிவரக்கூடிய ஆசையின் அடிப்படையில் மனிதன் பலவற்றை இவ்வுலகத்தில் செய்கிறான். அதனால் பலவிதமான இன்னல்களை சந்திக்கின்றான். ஆசை, இச்சை, விருப்பம், பேரவா இவை அனைத்தும் மனிதனிடம் இருந்து வேரோடு பிடுங்கப்பட வேண்டியவை. இவைகள் மனிதனை அடக்கியாள நினைக்கும். ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் ஆசை என்பது இருக்கிறது. இதைத் தான், ஆசை யாரை விடும்? அது அனைவர் மனதிலும் வேரை விடும் எனக் கூறுவார்கள்.  ஆசையை வென்றவர்  அகிலத்தில் யாருமில்லை என்று கூறுவார்கள். கடவுளைப் போல மாற வேண்டுமென்ற ஆசையின் வெளிப்பாடு தான், மனிதன் கடவுளின் கட்டளையை மீறினான்.    நமக்குள் இருக்கக்கூடிய இந்த ஆசையின் அடிப்படையில் உதயமாகும் ஆசை, இச்சை, விருப்பம், பேரவா போன்றவற்றை சிறப்பாக நெறிப்படுத்தி கையாள நாம் அழைக்கப்படுகிறோம். 

கிறிஸ்து இயேசுவை ஆண்டவராக ஏற்றுக்கொண்டீர்கள். அவரோடு இணைந்து வாழுங்கள்.
கொலோசையர் 2:6 நாம் இயேசுவில் வேரூன்றியவர்களாகவும் அவர் மீது கட்டியெழுப்பப்பட்டவர்களாகவும் இருங்கள். நீங்கள் கற்றுக்கொண்ட விசுவாசத்தில் உறுதியாக நில்லுங்கள். நன்றி மிக்கவர்களாய்த் திகழுங்கள்.
கொலோசையர் 2:7 என்று திருத்தூதர் பவுல் நம்மை ஆசையிலே வேரூன்றியவர்களாக அல்ல, மாறாக, கிறிஸ்து இயேசுவில் வேரூன்றியவர்களாக வாழ நம்மை அழைக்கின்றார்.

ஏனெனில், பரத்தைமையில் ஈடுபடுவோர், ஒழுக்கக் கேடாக நடப்போர், சிலை வழிபாடாகிய பேராசை கொண்டோர் போன்ற எவரும் கிறிஸ்துவுக்கும் கடவுளுக்கும் உரிய அரசில் உரிமைப் பேறு அடையார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
எபேசியர் 5:5 
                எனவும் தனது சுயநலப் போக்கின்படி வாழ்பவர்களை புனித பவுல் எச்சரிக்கின்றார்.

                                மனிதன் ஒரு உயர்ந்த மலையின் அடியில் நின்று கொண்டே, சிகரத்தின் உச்சியை அடைய வேண்டும் என எண்ணினால், அவனது மன எண்ணம் நிறைவேறுமா? இயலாது. முயற்சிக்க வேண்டும். முயற்சியின்போது தடைகள் உருவாகும். 
தடைகளை உடைத்து எறிய சக்தியையும் யுக்தியையும் பயன்படுத்த வேண்டும். 
சூழலுக்கு ஏற்ப வாழப் பழகிக்கொள்ள வேண்டும். 
இறைவனை மனதில் இருத்தி எதையும் துவங்க வேண்டும். 
அந்த அடிப்படையில், உள்ளத்தில் இருக்கக்கூடிய ஆசை, இச்சை, பேரவா, விருப்பம் போன்ற நமக்குள் இருக்கக்கூடிய தீய எண்ணங்களை எல்லாம் களைவதற்கான முயற்சியில் நாம் ஈடுபட வேண்டும். 
அதற்கான முயற்சியில் தோல்விகளை நாம் சந்தித்தாலும், முயற்சிகளை கைவிடக்கூடாது. தொடர்ந்து முயற்சித்து நம்மிடம் நம்முள் இருந்து வெளிவரக்கூடிய அன்பால் இச்சமூகத்தில் அநீதியையும், அமைதியற்ற சூழலையும் உருவாக்காமல் அன்பை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்திட வேண்டும் என்ற சிந்தனையை இன்றைய வாசகங்கள் மூலம் இறைவன் நமக்குத் தருகின்றார். இறைவனது குரலினை உணர்ந்து கொண்டவர்களாக, நம்மையே நாம் சரி செய்து கொண்டு, அவர் காட்டும் பாதையில் அவரைப் பின் செல்ல நம் உள்ளத்தின் வெளிப்பாடு என்ன?என்பதை கண்டுணர்ந்து கொள்ள இறையருளை வேண்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...