எதை நாம் தேர்வு செய்யப் போகிறோம்...?
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் உளம் மகிழ்கிறேன்.
ஒரு ஆலயத்தில் ஞாயிறு திருப்பலியில் நடைபெற்றுக்கொண்டு இருந்தது. குருவானவர் மறையுரையாற்றிக் கொண்டிருந்தார். முகமூடி அணிந்த இருவர் கைகளில் ஏகே47 ரக துப்பாக்கிகளை ஏந்தி கொண்டு ஆலய வாயில் வழியாக நுழைந்து பீடத்துக்கு முன் வந்து நின்றனர். மக்கள் அச்சத்தினால் அலறியடித்து கூச்சலிட்டனர். குருவானவர் மறையுரையை நிறுத்தி விட்டார். துப்பாக்கி வைத்திருந்த ஒருவன் மேல் நோக்கி ஒரு முறை சுட்டான்
எல்லோரும் அமைதி ஆனார்கள். துப்பாக்கி வைத்திருந்த இன்னொருவன் சொன்னான், இயேசு கிறிஸ்துவுக்காக உயிரை இழக்க தயாராக இருப்பவர்கள் மட்டும் ஆலயத்திற்குள் இருங்கள் என்றான். உடனே மக்கள் தங்கள் உயிரைப் பாதுகாக்க, தப்பித்துக்கொள்ள, அலறியடித்துக்கொண்டு ஆலயத்திற்கு வெளியே சென்றனர். ஆயிரம் பேர் இருந்த ஆலயத்தில் 20 பேர் மட்டுமே பீடத்திற்கு முன் துணிச்சலுடன் நின்றனர். துப்பாக்கி வைத்திருந்த இருவரும் பீடத்தில் நின்ற குருவானவரை நோக்கி, தந்தையே! நாங்கள் வெளிவேடக்காரர்களை வெளியேற்றிவிட்டோம். நீங்கள் தொடர்ந்து திருப்பலியை நிறைவேற்றுங்கள் என்றனர்.
இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவரையே பற்றிக்கொள். அவரே உனது வாழ்வு. அவரரே நித்திய வாழ்வைக் கொடுப்பவர். அவருக்கு செவிகொடு. அவரை பின்பற்ற அவர் வார்த்தைகளை கேட்டு அதன்படி நட என்று இணைச்சட்ட நூல் 30: 15- 20 நமக்கு அறிவுறுத்துகிறது.
வாழ்வின் ஊற்றாக இருக்கும் இறைவனைப் பற்றிக்கொள்ள உலகப் பற்றுகளை விட்டு விட வேண்டும். இதற்கு மாறாக பணம், பதவி, அதிகாரம், இனம், ஜாதி போன்றவற்றை நாம் இறுகத் தழுவிக் கொண்டுள்ளோம். இந்நிலையில் இறைவனை எப்படி நம்மால் பற்றிக் கொள்ள முடியும்? சாட்சியாக வாழ முடியும்?
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அவரை பின்பற்ற விரும்பும் ஒவ்வொருவருக்கும் தன்னலம் துறந்து தன் சிலுவையை சுமந்து செல்லவேண்டும் என்ற ஒரு கட்டளையை கொடுக்கின்றார்.
நாமோ, நமது சிந்தனையில் பணம் சம்பாதிக்கும் அறிவை சுமந்து கொண்டும், மனதின் மேடையிலே பேராசையை நிறுத்திக்கொண்டும், அதிகார நாற்காலியில் அமர்ந்து கொண்டும் நாம் நிலை வாழ்வைத் தேடி பயன் இல்லை. மாறாக துணிவோடு எல்லாவற்றையும் விட்டுவிட்டு நம்மை வெற்றுக் கலன்களாக்குவோம். வாழ்வின் ஊற்றாகிய ஆண்டவரை உண்மையாக அன்பு செய்வோம். அவரின் பணியை நாம் தொடர்வோம். அவர் நமக்கு நிச்சயம் நீடிய வாழ்வை கொடுப்பார். நம் வாழ்வில் வரும் துன்பங்களை அன்போடு ஏற்றுக் கொண்டால் மட்டுமே அவரின் பணியை நிறைவாக செய்ய முடியும். நமது சிலுவைகளை ஏற்றுக் கொள்ளும்போது மட்டுமே, பிறரின் குறைகளை கண்டுணர்ந்து கொள்ள முடியும். பிறருக்கு வாழ்வு கொடுக்க முடியும். நமது வாழ்வும் சாரமுள்ளதாக மாறும் என்பதை இன்றைய நாளில் உணர்வோம்.
ஆண்டவரை அன்பு செய்வதற்கும் அவரிடமிருந்து வாழ்வைப் பெற்றுக் கொள்வதற்கும் தடையாக இருக்கின்ற ஆடம்பரமான வாழ்வுக்கான ஆசைகளை விட்டுவிட்டு, அடிப்படைத் தேவைகள் கூட நிறைவேறாத, தேவையில் இருக்கும் மனிதரை நமது பொருட்களால் சந்தித்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற முயற்சிகள் மேற்கொள்வோம்.
நம் அருகில் இருப்பவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்க்கும் பொறாமை எண்ணங்களை விட்டுவிட்டு, ஆண்டவர் நமக்குக் கொடுத்திருக்கும் அருள் வரங்களுக்காக, குறிப்பாக ஆண்டவரைப் பற்றி தியானித்து நமது வாழ்வை திருப்பி பார்த்து நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ள ஆண்டவர் கொடுத்திருக்கின்ற இந்த அருளின் நேரங்களுக்காக நன்றி கூறி, இயேசுவின் மனநிலையோடு பிறரன்புப் பணிகளில் ஈடுபடுவோம்.
இவ்வுலகில் மனிதர்கள் மத்தியில் பிளவுகள் தேவையில்லை என்பதே உணர்ந்தவர்களாய், மனிதனால் உருவாக்கப்பட்ட வேறுபாடுகளைக் களைந்து விட்டு அனைவரையும் ஆண்டவரின் பிள்ளைகளாக அன்பு செய்திடவும், அதன் மூலம் சிறப்பாக ஆண்டவர் நம் கண் முன் வைத்திருக்கின்ற வாழ்வின் உரிமையாளர்களாக நாம் ஆகிட இன்றைய நாளில் அவரின் அருளை வேண்டுவோம்.ஆண்டவரின் வார்த்தைகளின் படி நமது வாழ்வை அமைத்துக் கொள்வதும் ஆண்டவரின் வார்த்தை களுக்கு எதிரான வகையில் நம் வாழ்வை அமைத்துக் கொள்வதும் நம் முன்பாக இருக்கின்ற வாய்ப்பு எதை நாம் தேர்வு செய்யப் போகிறோம்...?
சிந்தித்து செயலாற்றுவோம்...
எதைத் தேர்வு செய்யப் போகிறோம் என்ற கேள்வியின் வழியாக ஆண்டவரை கண்டுணர அழைப்பு விடுத்த அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு ஆண்டவர் இயேசுவின் பெயரால் எங்களது அன்பின் வாழ்த்துகள்!
பதிலளிநீக்கு