செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

சாம்பல் புதன் - வாருங்கள் வாழ்வைத் திருப்பி பார்ப்போம் (17.2.2021)

சாம்பல் புதன் - வாருங்கள் வாழ்வைத் திருப்பி பார்ப்போம் 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே 

இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தவக்காலம் ஒவ்வொரு ஆண்டும் தவறாது நம்மை சந்திக்கும் காலம். 
கடந்த கொரோனா கால ஊரடங்கு மூலம் நமது தனித்திருந்த காலத்தில் நாம் ஒரு 
விதப் "பாலைவன" அனுபவத்தைப் பெற்றிருப்போம். 
பெரும்பாலும் நாம் வீட்டுக்குள் முடங்கியே வாழ்ந்திருப்போம். 
இது தண்ணீர் அல்லது உணவு பற்றாக்குறையால் அல்ல, 
நம் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த செய்யப்பட்ட ஒரு ஏற்பாடு. 
இது ஒரு சிலரை முன்னேற்றப் 
பாதைக்கும், பலரைக் கடினமானப் பாதைக்கும் வளர்த்திருக்கலாம். 
      ஆனால் இன்று கொரோனாவின் பிடியிலிருந்து நம்மை விடுவித்துக் கொண்டு, இயல்பு வாழ்க்கையில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள பரபரப்பாக முயன்று கொண்டிருக்கும் நாம் இன்றைய நாளில் சற்று நின்று நிதானிக்கவும், பல்வேறு வளர்ச்சிகள், தளர்ச்சிகள், போராட்டங்கள் மத்தியில், நாம் உண்ணா நோன்புக்கென நாள் குறிக்கவும், உண்ணா நோன்பின் வழியாக நமது உணவை குறைத்து, பசியை உணர்ந்து, அடுத்தவரின் பசியை நீக்கவும், நமது மனதை ஆண்டவரின் பக்கம் திருப்பி, நமது உடைக்கப்பட்ட, பாரமான  இதயத்தோடு ஆண்டவரிடம் திரும்பி வரவும், இரக்கம் மிகுந்த ஆண்டவரின் பேரன்பினை கண்டுணர்ந்து கொள்ளவும்  இன்றைய முதல் வாசகம் நமக்கு அழைப்பு தருகிறது.  

இறைவன் நம்மீது கொண்ட பேரன்பின் காரணமாகவே நமக்காக பாடுகளையும் ஏற்றுக்கொண்டார் நமக்காக தனது உயிரை ஈந்தார். இத்தகைய ஆண்டவரின்  பேரன்பில்  நம்மை இணைத்துக் கொள்ள இன்றைய இரண்டாம் வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. 
           
நமது வாழ்வில் நாம் முக்கியமாகக் கருதுபவற்றை பெரும்பாலான நேரங்களில் வீட்டுக்குள்ளாக, தாழிடப்பட்டு மற்றவர்கள் அறியாத வண்ணமாக பத்திரமாக வைத்து இருப்போம். நமது உடலில் கூட மிகவும் முக்கியமான உறுப்புகளான இதயம் போன்ற உறுப்புகள் அனைத்தும் உள்ளுறுப்புகளாகவே இருக்கின்றன. அது போலவே இன்றைய நற்செய்தி வாசகத்திலும் கூட,  நமது அக வாழ்வின் மலர்ச்சியின் வெளிப்பாடாக நாம் செய்கின்ற அறச்செயல்களையும் நாம் கடைப்பிடிக்கின்ற நோன்புகளையும், நாம் பிறருக்கு செய்கின்ற தானங்களையும், நமது உள்ளார்ந்த இதயத்தை, உடைபட்ட இதயத்தை காணக்கூடிய ஆண்டவர் ஒருவர் மட்டுமே அறியும் வண்ணமாக, வெளிப்புறத்தே இருக்கின்ற மனிதர்கள் அறியாத வண்ணம், நாம் செய்திட வேண்டும் என்று ஆண்டவர் இயேசு அழைப்பு தருகின்றார்.
                                இன்று நாம்
ஆண்டவரின் வழியில் அவரது ஒளியைக் காண, நம்மையே ஒடுக்கி, நம் வாழ்வைச் 
செம்மைப்படுத்த, ஒரு குறுகிய, கடினமான பாதையில் நடப்பது சற்று சங்கடமாகத்தான் 
இருக்கும். இந்த ஊரடங்கின் போது, உலகப் போக்கினுள் சிக்காமல் நம்மால் வாழ முடியும் 
என்பதைக் கண்டுணர்ந்தது போல, இந்த தவக்காலப் 'பாலைவன" வாழ்வில் நாம் சுதந்திரமாக நுழையும் 
போது, இறைவன் தரவிருக்கும் கொடைகள் பலவற்றை நாமும் கண்டறியலாம். நாம் செல்ல வேண்டிய
குறுகிய பாதை இறைவார்த்தையால் நமக்கு குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தவக்காலத்தில் இறைவார்த்தையை 
வாசித்து, செவி கொடுத்து, அதிலுள்ள நம் தந்தையாகிய இறைவனுடைய நிலையான, 
என்றும் பொருத்தமான ஞானத்தை உணர்ந்து கொள்வோம். இறைவார்த்தைக்கு நம் நேரத்தை 
செலவழிப்பது நம் ஆன்மீக வாழ்வுக்கு அதிக லாபம் என்பதை உணர்வோம். ஏனெனில் இறைவார்த்தை உயிருள்ளது, 
ஆற்றல் மிக்கது. மனுவுருவான இயேசு கிறிஸ்து என்ற வார்த்தையால் நாம் மீட்கப்படுகிறோம். 
வார்த்தை காட்டும் பாதையில் நடப்பதால் நாம் நம் ஆசைகளையும் எதிர்நோக்குகளையும் 
நெறிப்படுத்த அழைக்கப்படுகிறோம்.
எது சரி, எது தவறு என்பதைக் குறித்த சலசலப்பும் கவனச்சிதறல்களும் நிறைந்த இந்த உலக 
வாழ்வுக்கு, இறைவார்த்தையைக் கலங்கரை விளக்கமாகத் தாழ்மையுடன் ஏற்க இத்தவக்காலம் 
நமக்கு உதவிடும். 
வாழ்வில் ஆர்வத்தோடும், தாகத்தோடும், இறைவார்த்தை வாசித்து, சிந்தித்து, ஏற்று வாழ்பவர்கள் 
மட்டுமே இறைவனின் ஞானத்தைக் காண முடியும்.
இத்தவக்காலம் என்பது நம் ஆன்மாவோடும் நம் அயலாரோடும் நாம் மேற்கொள்ளும் பயணமாக
இருக்கவும், உள்ளார்ந்ததாகவும், ஆண்டவர் இயேசுவை வெளிப்படுத்தக் கூடியதாகவும் இருக்கவும் உறுதி கொள்வோம்.
இத்தவக்காலத்தை  வீரியத்துடனும் விடாமுயற்சியுடனும் தொடர இறைவனின் அருள் நம்மை வழிநடத்த நம்மை அவர் பாதம் தாழ்ச்சியோடு அர்ப்பணிப்போம்.


http://sahayaraj1166.blogspot.com/2021/02/blog-post_16.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...