வாருங்கள் நோன்பு இருப்போம்.....
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயாவின் வழியாக, மக்களின் வாழ்வு நிலை பற்றி ஆண்டவர் கூறுகிறார். மக்கள் தாங்கள் மிகவும் நேர்மையாளர்கள் போல ஆண்டவரை அணுகி வருவதையும், அவர்கள் உண்ணாநோன்பு இருக்கும் பொழுது ஆண்டவர் தமக்கு செவி கொடுக்க வேண்டும் எனக் கேட்பதையும் கூறுகிறார்.
மக்கள் நோன்புகள் ஏற்ற பொழுதும் அண்டை அயலாரோடு வீண் சச்சரவுகளிலும், சண்டைகளிலும், ஈடுபட்டு மற்றவர்களை துன்புறுத்துகின்றனர். தமது சொந்த ஆதாயத்தை நாடுகின்றனர். இதனை ஆண்டவர் விரும்பவில்லை என இறைவாக்கினர் எசாயா வழியாக நமக்கு எடுத்துரைக்கிறார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் யோவானின் சீடர்கள், பரிசேயர்களும் தாங்களும் அதிகமாக நோன்பு இருப்பதையும், இயேசுவின் சீடர்கள் நோன்பை கடைபிடிக்காமல் இருப்பதையும் கேட்கின்றனர். ஆண்டவர் இயேசுவோ, மணமகன் தங்களோடு இருக்கும் வரை மண விருந்தினர்கள் நோன்பு இருக்க மாட்டார்கள். மணமகன் தங்களை விட்டு பிரிகின்ற காலத்தில் தான் அவர்கள் நோன்பு இருப்பார்கள் என்று கூறுகிறார்.
இன்றைய இரண்டு வாசகங்களும் இவ்வுலகை பொருத்தமட்டில், இறைவனின் பார்வை வேறு, மனிதரின் பார்வை வேறு என்பதை வெளிப்படுத்துகின்றன. இன்றைய நாட்களில் மனிதர்கள் பல்வேறு காரணங்களுக்காக நோன்பு இருக்கிறார்கள். சிலர் தாங்கள் வேண்டிய பொருத்தனைக் காரியங்கள் நிறைவேறுவதற்காக நோன்பு இருக்கிறார்கள். சிலர் தேர்வில் வெற்றிபெற நோன்பு இருக்கிறார்கள். சிலர் விவசாயம் செழிக்க, வியாபாரம் சிறக்க நோன்பு இருக்கிறார்கள். சிலர் தம் பெற்றோர் அல்லது பிள்ளைகளின் நல்ல உடல் நலனுக்காக நோன்பு இருக்கிறார்கள். சிலர் தங்கள் உடல் பருமனை குறைக்க முன்பு இருக்கிறார்கள். சிலர் தம்மிடம் காணப்படும் தீய பண்புகள் குறைந்து நல்ல பண்புகள் வளர நோன்பு இருக்கிறார்கள். ஆனால் இவ்வகை நோன்புகள் அனைத்தும் நமது ஆதாயத்திற்காகவே செய்யப்படுகின்றவையாகும்.
இத்தகைய நோன்பை கடவுள் விரும்பவில்லை என முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா வழியாக கூறுகிறார்.
இன்று நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறுவது போல,
நமது சோகங்களை களைந்திடும் நோன்பிருந்து நன்றி உணர்வை வளர்த்துக் கொள்ளவும்,
பிறரை புண்படுத்தும் வார்த்தைகளில் நோன்பிருந்து, ஆறுதல் தரும் வார்த்தைகளை வளர்த்துக் கொள்ளவும்,
கோபத்தை அகற்றும் நோன்பிருந்து பொறுமையைக் கடைபிடித்து வாழவும்,
கவலைகளையும், அவநம்பிக்கைகளையும் அப்புறப்படுத்தும் நோன்பிருந்து, ஆண்டவரில் முழு நம்பிக்கை வைத்து வாழவும்,
மனக் கசப்புகளை நம்மிடம் இருந்து முழுமையாக அகற்றும் நோன்பிருந்து, இதயங்களை மகிழ்ச்சியினால் நிரப்பவும்,
குற்றம் சாட்டுவதை நிறுத்தும் நோன்பிருந்து போதுமென்ற மனதோடு வாழவும்,
மன அழுத்தங்களிலிருந்து விடுபடும் நோன்பிருந்து செபத்தினால் நம்மை நிரப்பவும்,
நான் என்ற சுயநல நிலையிலிருந்து விடுபடும் நோன்பு இருந்து, பிறர் மீது கருணையுள்ளம் கொண்டவர்களாக வாழவும்,
மன்னிக்க முடியாத நிலையில் இருந்து மீண்டு எழும் நோன்பு இருந்து மன்னிக்கும் மனப்பான்மையில் வளரவும்,
அதிகம் பேசுவதை தவிர்த்து, அமைதியை நிலைநாட்டும் நோன்பிருந்து, மற்றவர்கள் சொல்வதையும் அமைதியாக கேட்கும் மனப்பான்மையில் வளரவும்,
இவ்வாறாக உண்மையான நோன்பை வாழ்வில் கடைபிடிக்க ஆண்டவர் இயேசு அழைப்பு விடுக்கின்றார். இத்தகைய நோன்புகளை நாமும் வாழ்வில் கடைப்பிடிக்க முற்படுவோம். இவற்றில் ஒன்றையேனும் அல்லது ஒரு சிலவற்றையேனும் இன்றைய நாளில் கடைபிடிக்க உள்ளத்தில் உறுதி கொள்வோம். அதற்கான அருளை இறைவனிடத்தில் வேண்டி இணைந்து ஜெபிப்போம். உண்மையான நோன்பு இருக்க கற்றுக் கொள்வோம்.
திருத்தந்தையோடு இணைந்து உண்மையான நோன்பை கற்றுக்கொள்ளவும் கடைப்பிடிக்கவும் அழைக்கும் அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு எங்களது அன்பின் வாழ்த்துக்களும் செபங்களும்! 🙇🙇🙇🙇🙇
பதிலளிநீக்கு