ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021

நாம் படைக்கப்பட்ட நோக்கம் என்ன? (8.2.2021)

நாம் படைக்கப்பட்ட நோக்கம் என்ன?
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள். ஏனெனில் அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். 
                        திருப்பாடல் 98: 1 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

 இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் இவ்வுலகை படைத்தது குறித்து நாம் வாசிக்கின்றோம்.  கடவுளின் வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது என்ற இறை வார்த்தைகளுக்கு ஏற்ற வகையில், ஆண்டவரது வார்த்தைகள் வடிவமாகுவதை இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம்.

 யோவான் நற்செய்தி 1 : 1 வது வசனம் கூறுகிறது, தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது;  அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. வாக்கு என்ற அவரே தொடக்கத்தில் இருந்தார் எனச் சொல்லப்படுகிறது. இவ்வார்த்தைகளுக்கு ஏற்ற வகையில் கடவுள் இவ்வுலகத்தை படைக்கும் பொழுது, "ஒளி தோன்றுக"! என்றார், அவரது வார்த்தை அங்கு ஒளியாக வடிவமானது. இருளையும் ஒளியையும் இறைவன் பிரித்தார்.  முதல் நாள் முடிவுற்றது.  நீர்த்திரள்களுக்கு இடையே வானம் தோன்றுக என்றார். அதுவும் அவ்வாறே உருவானது.  ஆண்டவரின் வார்த்தைகள்  அனைத்தும் வடிவம் ஆகின்றன.
ஆண்டவர் இவ்வுலகத்தில் உள்ள அனைத்தையும் படைத்ததன் நோக்கம் என்ன? என சிந்திக்கும் பொழுது, இவ்வுலகமானது, அன்பால் உருவானது என்பதை உணரலாம். இறைவன் தான் அன்பு செய்யப்பட வேண்டும் என்பதற்காக படைப்புகளை உருவாக்கினார். 

யாக்கோபே, உன்னைப் படைத்தவரும் இஸ்ரயேலே, உன்னை உருவாக்கிய வருமான ஆண்டவர் இப்போது இவ்வாறு கூறுகிறார்: அஞ்சாதே, நான் உன்னை மீட்டுக் கொண்டேன்; உன் பெயரைச் சொல்லி உன்னை அழைத்தேன்; நீ எனக்கு உரியவன், என்று
எசாயா 43:1 கூறுகிறது. 
இறைவன் படைத்த இவ்வுலகில், 
ஆண் பெண் என்ற உயர்திணை மட்டும் அல்ல, உயிரற்ற அஃறிணையும் அன்பு செய்ய வேண்டும் என்பதற்காகவே எல்லாவற்றையும் ஆண் பெண்ணாக, சமமாக உருவாக்கினார். 
உயிர் உள்ளவற்றில் மட்டுமல்ல உயிரற்றவற்றிலும் ஆண் பெண் வேறுபாடு உண்டு.
 கல்லில் கூட ஆண் கல், பெண் கல் என்று உண்டு. சிற்பி சிலை செய்ய ஆண் கல்லையே பயன்படுத்துகிறார், 
பகல், இரவு, வானம், பூமி, வாழ்க்கை, மரணம், இன்பம், துன்பம் என எதிரெதிர் துருவங்களாக இருக்கக்கூடிய அனைத்தும் இறைவனால் உருவாக்கப்பட்டது.  
மனிதன் இன்று இவ்வுலகில் உயிரோடு இருக்கிறான் என்பதற்கு அடையாளம், அவன் மூச்சு விடுவதல்ல,  அவன் அன்பு செய்வதே. 
ஒருவன் அன்பு இருக்கிறது என்றால், அவன் உயிரோடு இருக்கின்றான் எனப் பொருள். அன்பு இல்லையேல் அவன் பிணம் என்றுதான் கருதப்படுகிறான் என அப்துல் ரகுமான் அவர்கள், தன்னுடைய மந்திரச் சிறகு என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.  
கடவுள் இவ்வுலகத்தில் உள்ள ஒவ்வொன்றையும் படைத்ததன் நோக்கம், அது அனைவருக்கும் பயன் தர வேண்டும் என்பதற்காகவே. ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து எது எப்படி இருந்தால் மனிதனுக்கு நலமாக இருக்கும்?  என்று சிந்தித்தவராய் இறைவன் அனைத்தையும் படைத்தார். படைத்த அனைத்தும் அதனதன் பணியை செவ்வனே செய்கின்றன. மனிதர்களாகிய நாம் படைக்கப்பட்ட நோக்கம் என்ன என்பதை உணர்ந்தது உண்டா? அந்நோக்கத்திற்காக நமது செயல்பாடுகள் அமைந்தது உண்டா? என சிந்திக்க இன்றைய நாள் வாசகங்கள் அழைப்பு விடுக்கின்றன. 



அன்பின் அடிப்படையில் உருவான இவ்வுலகத்தில் மனிதனின் பணி என்னவென்று சிந்திக்கும் பொழுது?  இன்றைய நற்செய்தி வாசகம் அதற்கு பதில் தருகிறது. இயேசு மனிதனாக இம்மண்ணில் வலம் வந்தபோது நோயாளிகள், ஏழைகள், பலவிதமான துயரங்களால் வாடக்கூடியவர்கள் என அனைவரும் இயேசுவைத் தேடி வந்தார்கள். காரணம், இயேசு அவர்களை தேடிச் சென்றார். இன்று அவர்  தேடப்படக் கூடியவராக மாறினார்.  அவரைத் தேடி வந்தவர்கள் எல்லாம் உள்ளத்தில் ஆழமான அன்பும் நம்பிக்கையும் கொண்டிருந்தனர். இயேசுவின் ஆடையைத் தொட்டால் போதும்,  நான் குணம் அடைவேன் என்ற எண்ணத்தோடு அவரைச் சூழ்ந்திருந்த, அவரை காண ஓடி வந்திருந்த ஏழைகள், அனாதைகள், துன்புறுவோர், பசியால் வாடுவோர், உடல் ஊனமுற்றோர் என அனைவருமே அவரைத் தொட வேண்டும் என விரும்பினர். தொட்டு நலம் பெற வேண்டும் என விரும்பினர். அவ்வாறே தொட்டு நலம் பெற்றனர். மனிதர்கள் இறைவன் படைத்த இந்த அழகிய உலகத்தில் செய்ய வேண்டிய மகத்துவமான பணி, அன்பு செய்வதாகும். இறைவன் அன்பு செய்வதற்காகவே படைப்புகளை எதிரும் புதிருமாக படைத்தார். நாமும் இந்த உலகத்தில் படைக்கப்பட்டதன் நோக்கம் ஒருவர் மற்றவரை அன்பு செய்யவும், இருக்கக்கூடிய இறைவனது படைப்பை பாதுகாத்து அதை வரக்கூடிய தலைமுறையினருக்கு கொடுத்துச் செல்லவுமே நாம் அனைவரும் இவ்வுலகில் படைக்கப்பட்டு இருக்கிறோம். 

                இயேசு தன்னுடைய செயல்கள் மூலம் அவர் இவ்வுலகத்திற்கு வந்ததன் நோக்கம் என்ன என்பதை வெளிக்காட்டினார். நாம் நமது வாழ்வில், நாம் ஏன் பிறந்தோம்? வளர்ந்தோம்? ஏன் நகர்ந்து கொண்டே இருக்கிறோம் ஒவ்வொரு நாளும்? எனச் சிந்திப்பதை விட,  நாம் இவ்வுலகில் இருப்பதும் இயங்குவதும் அன்பு செய்யவே என்பதை உணர்ந்தவர்களாக, இறைவன் படைத்த இயற்கையின் உதவியோடு ஒருவர் மற்றவருக்கு உதவி செய்து, அன்போடும் அருளோடும் வாழ இறையருளை வேண்டுவோம்.  மாற்றம் வேண்டும் எனில் முதலில் நாம் மாற வேண்டும். இறைவன் படைத்த இந்த அழகிய உலகினில் நாம் இருக்கும் நாட்கள் எவ்வளவு நாள் என்பது யாரும் அறியாத ஒன்று. எனவே இருப்பதோ கொஞ்சம் நாள் தான். அதில் வஞ்சகம் இல்லாத நெஞ்சங்களாக வாழ்ந்திடவும்,  இறைவன் படைத்த இயற்கையை பாதுகாத்து வருங்கால தலைமுறையினருக்கு அதை வழங்கிடவும் இறையருளை வேண்டி இணைந்து ஜெபிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...