தொடர்ந்து பயணம் செய்வோம்,
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்!
விதையிலிருந்து மரம் வெடித்து வெளி வருகிறது. ஆனால் விதையைப் பற்றிக் கொண்டிருக்க எண்ணுவதில்லை.
முட்டையிலிருந்து வெளி வருகிறது கோழிக்குஞ்சு. ஆனால், ஓடுகளை உயிர் என கருதி ஒட்டிக்கொண்டு இருப்பதில்லை.
மேகமாய் இருப்பதே மேன்மை. கீழே இறங்கி சேற்றுடன் கலப்பது கீழ்மை என மழை எண்ணுவதில்லை. மேகம் பருவம் வந்தால் பெய்து விடுகிறது.
மனிதனும் அப்படியே.
பேறுகாலம் வந்தால் விடுபட்டுத் தான் ஆக வேண்டும்,தாயின் வயிற்றிலிருந்து ஒரு குழந்தையாக.
வன்மையாக தெரிந்தாலும் தொப்புள் கொடியை வெட்டி விடத்தான் வேண்டும். அது வெட்டி பிரித்தல் அல்ல. விடுபட்டு பிழைத்தல் என்பார்கள்.
தாயும் சேயும் வேறு வேறு அல்ல என்ற நிலை மாறி, வேறு வேறு உடல் ஆகிறது.
இவ்வாறு இன்று மனித மனங்கள் பல ஓட்டை உயிரென பிடித்துக் கொண்டும்... மேகமாய் மேல் இருப்பதே மேன்மை என எண்ணிக் கொண்டும்.... இருக்கலாம் என எண்ணுகிறார்கள் ஆனால் நேரமும் சூழலும் கூடி வரும் பொழுது கண்டிப்பாக நாம் பிடித்துக்கொண்டு இருக்கக்கூடிய எதுவும் நம்மைக் காக்காது. நம்மை காக்க நாம் செயலில் இறங்க வேண்டும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. இதுநாள்வரை மறைத்த பலரின் உண்மை முகங்கள் வெளியாக தொடங்கிவிட்டன ...
தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு விழா நடத்த வைத்தவரின் வீட்டில் சமஸ்கிரதம் அரங்கேறுகிறது.
ஐந்தாண்டுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் ஐந்தாம் ஆண்டு முடியும் சில நாட்களுக்கு முன்பாக அமலாக்கம் செய்யப்படும் தந்திரம் மிக்க செயல்.
கோட்டையை நான் பிடிக்கப் போகின்றேன் என பாட்டாலே பட்டிதொட்டியெங்கும் விளம்பரப்படுத்தப்படும் சிலர்.
என பரபரப்புகளுக்கு மத்தியில்
இன்று நாம் நினைவு கூறக் கூடிய இந்த தவக்காலமும் நமது வாழ்வை சீர்தூக்கி பார்க்க அழைப்பு தருகின்ற ஒரு காலமாகும்.
இந்த தவக்காலம் என்பது தன்னலத்தை அகற்றி, பிறரை முன்னிறுத்தி, சிந்தித்து செயலாற்ற, நம்மை அழைக்கின்றது.
பலரும் பல நேரங்களில் இறைவனிடம் கையேந்துகிறார்கள். ஆனால் இறைவனிடம் கையேந்தி உதவி கேட்கும் நபர்களிடம் சிலர் கையேந்தி தங்களுக்கான உதவியை வேண்டுவார்கள். நாம் நம்மிடம் கைகளை ஏந்தி உதவி கேட்கும் நபருக்கு உதவும் போது அவருக்கு நாம் கடவுளாக தெரிகின்றோம்.
இன்று கடவுள் செய்யக்கூடிய அனைத்தையும் மனிதனால் செய்ய இயலும் என்பதை உணர்த்தவே, ஆண்டவர் இயேசு கிறிஸ்து மனிதனாக இம்மண்ணில் பிறந்தார். மண்ணில் மனிதனாக வாழ்ந்தார். மனிதன் இவ்வுலகில் அனுபவிக்கக்கூடிய அனைத்து விதமான இன்னல்களையும் அனுபவித்தார். என்னால் முடியும் என்றால், அது உங்களாலும் முடியும் என்பதை நமக்கு ஆழமாக எடுத்துக் கூறியவர் இந்த இறைவன்.
அன்புக்குரியவர்களே! இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாமிடம் கடவுள் தன்னுடைய ஒரே மகனை தனக்கு பலியிடுமாறு கூறுகின்றார். கொடுத்தவர் இறைவன். இன்று கேட்பதும் அவரே என்பதை உணர்ந்தவராய், அவர் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவராய், கடவுளின் வார்த்தைகளுக்கு செவி கொடுத்து தனது ஒரே மகனை அழைத்துக் கொண்டு அவனை கடவுளுக்கு பலியிடுவதற்காக மலையை நோக்கி ஏறிச் செல்கிறார் ஆபிரகாம். கடவுளுக்கு பலியிடுவதற்காக பலிபீடம் கட்டி, தன் மகன் தோளில் சுமந்து வந்த விறகுகளை அதில் அடுக்கி விட்டு தனது மகனின் கைகளையும் கால்களையும் கட்டி அவனை அந்த பலிபீடத்தின் மீது படுக்க வைத்து தனது இடையில் இருந்த கூரிய வாளினை எடுத்து பலியிடுவதற்காக கைகளை உயர்த்தினார். ஆனால், கடவுளின் தூதர் அவரை தடுத்து நிறுத்துகிறார். நீர் எந்த அளவிற்கு கடவுள் மீது நம்பிக்கை கொண்டவர் என்பதை நான் கண்டு கொண்டேன். உன் மகனுக்கு எத்தீங்கும் செய்யாதே எனக் கூறி, கடவுளுக்கு பலியிடுவதற்காக ஒரு ஆட்டுக்குட்டியை காண்பிக்கின்றார். இதே நிகழ்வுதான் தந்தையாம் இறைவனிடத்திலும் நாம் காண்கின்றோம். இவ்வுலக மக்களின் பாவங்களுக்காக தன்னுடைய ஒரே மகனை நமக்காக பலியிட அனுப்பி வைத்தார். இந்த இறைவனை போலத்தான், அன்று ஆபிரகாமும் செயல்பட்டார். கடவுளுக்காக என்ற நோக்கத்தோடு, கடவுள் கேட்கின்றார் என்று, கடவுள் கொடுத்த மகனை கடவுளுக்கே பலியிட முன் வருகின்றார்.இவரைப்போலவே ஆண்டவரும் மக்களுக்காக தன் ஒரே மகனை கைளிக்கின்றார்.
கடவுள் நம்மைப் படைத்தது அடுத்தவரை மகிழ்வித்து தன்னைப் போலவே அனைவரும் இவ்வுலகத்தில் இன்புற்று வாழ வேண்டுமென விரும்புகிறார். ஆனால் இந்த உலகிலே மனிதன் பெரும்பாலான நேரங்களில் நம்மால் கடவுளை போல மாற இயலாது. கடவுளுக்கும் நமக்கும் இடையே பல விதமான வேறுபாடுகள் முரண்பாடுகள் இருக்கிறது என்று எண்ணிக்கொண்டு, உண்மையாக இயேசுவைப் போல இவ்வுலகத்தில் உண்மைக்கும், நீதிக்கும், அன்புக்கும், நட்புக்கும், சாட்சிகளாய் திகழ்வதை விட்டுவிட்டு தன்னுடைய சுயநலப் போக்கில் இவ்வுலக இச்சைகளை எல்லாம் பிடித்துக்கொண்டு பயணம் செய்கின்றான். இதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் காண்கின்றோம்.
ஆண்டவர் இயேசுவின் உருமாற்றத்தைத் தான் நாம் இன்று நற்செய்தியாக வாசிக்கக் கேட்டோம்.
ஏன் இந்த ஒரு உருமாற்றம்?
எதற்காக நிகழ்ந்தது?
என்பது யாரும் அறியாத வண்ணம் இருக்க..
இறையியலாளர்கள் சிலர் இயேசு எதிர்கொள்ளவிருக்கும் பாடுகளை குறித்து மோசேயும் எலியாவும் உரையாடுகிறார் என விளக்கம் தருகிறார்கள்.ஆனால் இயேசுவோடு இருந்த சீடர்கள் இவ்வுரு மாற்றத்தின் உண்மை தன்மையை உணர்ந்து கொள்ள மறுத்து, நாம் இங்கேயே இருப்பது நல்லது. ஆளுக்கு ஒரு கூடாரம் என தனித்தனியாக அமைத்துக்கொண்டு நாம் இங்கேயே இருந்து விடுவோம் என்று கூறுகிறார்கள். அங்கு தாபோர் மலையில் நடக்கக்கூடிய இறை அனுபவத்தை ஆழமாக உள்வாங்கிக் கொள்வதை விடுத்து விட்டு, மேலோட்டமாக, மகிழ்வோடு அங்கேயே தங்கிவிட வேண்டும் என்பதைத்தான் உள்ளத்தில் இறுகப் பிடித்துக் கொள்கிறார்கள்.
நாம் வாழும் உலகில் பல நேரங்களில், நாமும் மேலோட்டமாக சிறிது நேரத்தில் இன்பம் தரக்கூடிய சில செயல்களை பிடித்துக்கொண்டு இறைவனது உண்மையான உடனிருப்பையும் அவர் நமக்கு வெளிப்படுத்தும் நல்ல செயல்களையும், உள்வாங்கி கொள்ளாதவர்களாக இருந்துவிடுகிறோம். இதைத்தான் இறைவனும், செவிகள் இருந்தும் கேட்காத வர்களாக இருக்கிறார்கள் எனக் குறிப்பிடுகிறார். இத்தகைய செயல்களிலிருந்து நம்மை நாம் விடுவித்துக் கொண்டு, மேலோட்டமான செயல்களை எல்லாம் விடுத்துவிட்டு நம்மால் கடவுளை போல மாற முடியும். இயேசுவைப் போல, அனைத்து விதமான துன்பங்களுக்கு மத்தியிலும் மனிதநேயத்தோடு, நல்ல ஒரு மனிதனாக, மனித நிலையிலிருந்து கடவுளாக மாறக் கூடிய நிலையை நம்மால் அடைய முடியும் என்பதை உள்ளத்தில் ஆழமாகப் பதிய வைத்துக் கொண்டு பயணிக்க நாம் அழைக்கப்படுகின்றோம்.
இன்று நாம் வாழும் இந்த உலகத்தில் நம்மில் பலர் நமது நாட்டில் நடக்கும் பல நிகழ்வுகளை வெறும் செய்திகளாக மட்டுமே மேலோட்டமாக எடுத்துக்கொண்டு பயணிக்கின்றோம். ஆனால்
அன்று இயேசு இவ்வுலகில் வாழ்ந்த போது தான் வாழ்ந்த சமூகத்தில் நிலவிய அநீதிகளை எதிர்த்து குரல் கொடுத்தார். அவர் எதையும் மேலோட்டமாக எடுத்துக் கொள்ளவில்லை. அதன் உண்மை தன்மையை ஆய்ந்து அறிந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. அதன் விளைவே அவரது மரணம் என்பது ஒரு அரசியல் கொலையாக சித்தரிக்கப்படுகிறது இன்றுவரை.அவரைப் பின் சென்ற பலர் இன்று நாம் வாழும் உலகில் நாம் நினைவுகூரக் கூடிய புனிதர்களாக உள்ளனர்.எனவேதான் இன்று அவர்கள் வழியாக நாம் இறைவனிடத்தில் மன்றாடி கொண்டிருக்கிறோம். கடவுள் நம்மோடு இருக்கிறார். நமது மேலோட்டமான எண்ணங்களை எல்லாம் விடுத்து விட்டு, இறைவன் வெளிப்படுத்தக் கூடிய உண்மையை தூய ஆவியானவரின் துணை கொண்டு அறிந்து கொண்டு,
அதற்கேற்ற வகையில் நலமான செயல்களை முன்னெடுக்க கூடிய நல்ல இயேசுவின் சீடர்களாக நாம் பயணம் செய்து இவ்வுலகில் இறைவனது ஆட்சியை மலரச் செய்ய அழைக்கப்படுகிறோம்.
இத்தகைய அழைப்பை வெறும் வார்த்தைகளாக எடுத்துக் கொள்ளாமல், உள்ளத்தில் ஆழமாக இருத்தி, நாம் வாழும் இவ்வுலகில் நலமான செயல்களை முன்னெடுக்கக் கூடிய இயேசுவின் சீடர்களாய் நாம் மாறிடுவதற்கு, இந்த தவக்காலம் நமக்கு அழைப்பு தருகிறது. 40 நாட்கள் நாம் பலவிதமான முயற்சிகளை எடுக்க வேண்டும் என தீர்மானித்திருக்கலாம். கடந்த ஒரு வாரமாக அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம். பல நேரங்களில் சின்னஞ் சிறு தவறுகள் மனித பலவீனத்தின் காரணமாக சிலவற்றை நம்மால் கடைப்பிடிக்க முடியாமல் சென்றிருக்கலாம். அவற்றை எண்ணி வருந்துவதை விடுத்து விட்டு, இனி வரும் காலங்களில் மேலோட்டமான பார்வைகளை அகற்றி, நமது பார்வைகளை ஆழப்படுத்தி, ஆண்டவர் நமக்கு வெளிப்படுத்தக்கூடிய வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை நலமான நல்ல வாழ்வாக அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் தொடர்ந்து இறையருளை வேண்டி இணைந்து, செபித்த வண்ணம், நமது தவக்கால பயணத்தில் தொடர்ந்து பயணம் செய்வோம், இயேசுவின் பாடுகளை மனதில் கொண்டவர்களாக!
துன்பங்களுக்கு மத்தியிலும் ஆண்டவரோடு இணைந்திருக்க நம்மை அன்புடன் அழைக்கும் அருட்சகோதரர் சகாய ராஜ் அவர்களுக்கு நமது அன்பான நன்றிகள்!
பதிலளிநீக்கு