வியாழன், 24 மார்ச், 2022

அர்ப்பணிப்பதே ஆண்டவருக்கு உகந்த வாழ்வு...(25.3.2022)

அர்ப்பணிப்பதே ஆண்டவருக்கு உகந்த வாழ்வு


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
           இன்று நம் தாய்த் திரு அவையானது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு முன்னறிவிக்கப்பட்ட தினத்தை கொண்டாட நமக்கு அழைப்பு தருகிறது.   இன்றைய நாளில் நாம் வாசிக்கக் கேட்ட முதல் வாசகம் நமக்காக ஒரு ஆண்மகவு அடையாளமாக தரப்படும் என்பதை எடுத்துரைத்தது.  அந்த அடையாளமாக தரப்பட்ட நபரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து.  இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இவ்வுலகத்திற்கு, நமது பாவங்களிலிருந்து நம்மை மீட்க வந்தவர்.  எனவே இவரை செம்மறியின் வெள்ளாட்டுக் கிடாய்க்கு ஒப்பிட்டு இன்றைய இரண்டாம் வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது.

            இன்றைய  நற்செய்தி வாசகத்தில் இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு அறிவிப்பை நாம் வாசிக்கக் கேட்டோம்.  ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு  அறிவிப்பு பெருவிழா இன்று நமக்குத் தருகின்ற வாழ்வுக்கான பாடம் என்ன என சிந்திக்கின்ற போது இந்த மண்ணில் வாழ்கின்ற ஒவ்வொரு மனிதர்களும் மண்ணில் வாழ்கின்ற மற்ற மனிதர்களுக்கு  அடையாளமாகத் திகழ வேண்டும்.  நமக்கு எப்படி ஆண்டவர் இயேசு கிறிஸ்து அடையாளமாக தரப்பட்டாரோ, அவரை பின்பற்றுகின்ற நாமும் அடையாளங்களாக மாறிட வேண்டும். இயேசுவின் வாழ்வு செம்மறி ஆட்டுக் கிடாயோடு ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது. பலியிடப்படக் கூடிய செம்மறியாடாய் இயேசு தன்னை தந்தையின் விருப்பத்திற்கு கையளித்தார்.


          நாமும் அவரைப் போல நம்மை கடவுளின் விருப்பத்திற்கு, கடவுளின் வார்த்தைகளுக்கு ஏற்ப வாழக் கூடியவர்களாக நம்மையே நாம் கையளிக்க இந்த நாள் அழைப்பு தருகிறது.  இதோ! உமது திருவுளத்தை நிறைவேற்ற வருகிறேன் என்று கூறக்கூடிய மனிதர்களாக கடவுளின் திட்டத்தை அறிந்து கொண்டு, அத்திட்டத்திற்கு நம்மை முழுவதும் கையளிக்க இந்த நாள் நமக்கு வலியுறுத்துகிறது. 

        அன்று யூத சமூகத்தில் திருமணத்திற்கு முன்பாக ஒரு பெண் கருவுற்றால் பலவிதமான இன்னல்களை சந்திக்க வேண்டும் என்பதை அறிந்திருந்த நிலையிலும் கூட அன்னை மரியாள் கடவுளின் திருவுளத்திற்கு தன்னை ஆம் எனக் கூறி கையளித்தார். 

           அன்னை மரியாவிடம் காணப்பட்ட அந்த அர்ப்பணிப்பு இன்று நமது அர்ப்பணிப்பாக மாறவேண்டும். தவக்காலத்தில் பலவிதமான தவ முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்க கூடிய நாம் நம்முடைய வாழ்வை கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப அர்ப்பணிக்கக் கூடிய ஒரு வாழ்வாக மாற்றிக் கொள்ள இந்த நாள் நமக்கு அழைப்புத் தருகிறது. இறைவன் தருகின்ற இந்த அழைப்பை உணர்ந்து கொண்டவர்களாக நமது வாழ்வை இறைவனுக்கு அர்ப்பணிப்போம். அவரின் வார்த்தைகளுக்கு ஏற்ப நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இறையருள் பெற்று  இந்த வாழ்வை அடுத்தவரின் நலனுக்காக இயேசுவைப் போல கையளிக்க,  அன்னை மரியாவைப் போல ஆம் எனக் கூறி,  ஆண்டவருக்கு அர்ப்பணிக்க, அகிலத்தின் நன்மைக்காக அர்ப்பணிக்க  இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து இந்த திருப்பலியில் செபிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...