மாற்றம் அது நமக்குள் நிகழ வேண்டும்
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்று கொடிய குத்தகைக்காரர் உவமையை நாம் வாசிக்க கேட்டோம். இந்த உவமை வாயிலாக இறைவன் நமக்குத் தருகின்ற வாழ்வுக்கான பாடம்:
இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் இந்த அழகிய வாழ்வை கொடுத்திருக்கிறார். இந்த வாழ்வில் பல நேரங்களில் நாம் நமது சுயநலத்தை மட்டும் முன்னிறுத்தி, பலவிதமான தீமைகளை மற்றவருக்கு இழைக்கிறோம். வாழ்வைக் கொடுத்த இறைவனை மறந்து போனவர்களாய், மற்றவர்களுக்கு தீமையை கொடுக்கிறோம். நமது நலனுக்காக நமக்கு இந்த வாழ்வை தந்த இறைவனது மதிப்பீடுகளை மறந்த மக்களாக வாழுகின்றோம். ஆனால் இறைவன் நாம் மனமாற்றம் பெற வேண்டும் என பல வழிகளில் நமக்கு அழைப்பை தருகின்றார். அந்த அழைப்பை உணர்ந்து கொண்டு, நல்லதொரு மன மாற்றத்தை நாம் பெற்றுக்கொண்டு வாழ வேண்டும் என்பதை இன்றைய வாசகங்கள் நமக்கு வலியுறுத்துகின்றன.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்ட திராட்சை தோட்டம் என்பது நமது வாழ்வை குறிக்கிறது. இஸ்ரயேல் மக்கள் தங்கள் வாழ்வைத் திராட்சை தோட்டத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தார்கள் என எசாயா 5: 7ல் நாம் வாசிக்கின்றோம்.
படைகளின் ஆண்டவரது திராட்சைத் தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே என எசாயா 5 ஆம் அதிகாரம் 7 ஆம் வசனம் குறிப்பிடுகிறது. இந்த இஸ்ரயேல் மக்கள் தான் கட்டுவோரால் புறக்கணிக்கப்பட்ட கல்.
யோசேப்பு ஆட்சி அதிகாரத்தில் இருந்த
போது எகிப்தில் சென்று குடியேறியவர்களை எண்ணிக்கையில் மிகுதியாகிறார்கள் என்று எண்ணிய எகிப்தியர்கள், நம்மை விட வலிமை வாய்ந்தவர்களாக இவர்கள் மாறி விடக் கூடும் என்ற எண்ணத்தோடு அவர்களை அடக்கி ஆளக் கூடிய பணியினை செய்தார்கள். புறக்கணிக்கப்பட்ட ஒரு கல்லாக மாறிப் போனார்கள். இந்த புறக்கணிக்கப்பட்ட மக்களையே இறைவன் தனது திட்டத்திற்கு பயன்படுத்துகிறார். அவர்களை மீட்டு வருகிறார். அவர்களை மூலைக் கல்லாக மாற்றுகிறார். உதறித் தள்ளப்பட்ட மக்களை கட்டிடத்தின் மூலைக்கல்லாக மாற்றக் கூடியவராக இயேசு இருக்கின்றார். நாமும் பல நேரங்களில் ஆண்டவரின் வார்த்தைகளுக்கு ஏற்ப நமது வாழ்வை அமைத்துக் கொள்ளாது, நமது செயல்பாடுகளை நமது மனம் போன போக்கில் அமைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதனையெல்லாம் நினைத்துப் பார்த்து நம்மை நாம் சரி செய்து கொள்ளவே இந்த தவக்காலம் நமக்கு தரப்படுகிறது. இதனை உணர்ந்து கொண்டவர்களாக நல்லதொரு மன மாற்றத்தை நாம் பெற்றவர்களாய், ஆண்டவரை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதை இன்றைய வாசகங்கள் நமக்கு வலியுறுத்துகின்றன. வாசகங்கள் வலியுறுத்தும் வாழ்க்கைப் பாடத்தை உணர்ந்தவர்களாக, தவக்காலத்தை தகுந்த காலம் என எண்ணி, நல்லதொரு மன மாற்றத்தை நாம் நமக்குள் உருவாக்கிக் கொண்டு, ஆண்டவர் கொடுத்த இந்த அழகிய வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றிக் கொண்டு, அடுத்தவர் நலனை பாதுகாப்பதும், ஆண்டவரின் வார்த்தைகளின் படி வாழ்வை அமைத்துக் கொள்வதுமே, நமது தலையாய கடமை என்பதை உணர்ந்தவர்களாய் செயல்பட இறையருள் வேண்டி தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக செபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக