புதன், 16 மார்ச், 2022

நாம் வாழும் இச்சமூகத்தின் மீது அக்கறை கொண்ட மனிதர்களாக நாம் மாறிட ...(17.3.2022)

நாம் வாழும் இச்சமூகத்தின் மீது அக்கறை கொண்ட மனிதர்களாக நாம் மாறிட 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 இன்றைய நற்செய்தி வாசகத்தின் வாயிலாக நாம் செல்வந்தன், ஏழை லாசரைக் குறித்து வாசிக்க கேட்டோம்.  இந்த வாசகப் பகுதி நமக்குத் தருகின்ற வாழ்வுக்கான பாடம் என்ன என சிந்திக்கின்ற போது, தவக்காலம் என்பது நமது செயல்களை சீர்தூக்கிப் பார்த்து,  நம்மை நாமே சரி செய்து கொள்வதற்கான ஒரு காலம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.  

              இன்றைய நற்செய்தி வாசகத்தின் வாயிலாக சமூகத்தின் மீது அக்கறையற்று இருக்கக்கூடிய தன்மையை இயேசு சுட்டிக்காட்டுகிறார்.  பல நேரங்களில் நாம் செல்வந்த இளைஞனைப் போலத் தான் நம் அருகில் இருப்பவர்களின் துயரத்தை கண்டும் காணாதவர்களாக இருந்து கொண்டிருக்கிறோம்.  நாம் வாழுகின்ற சமூகத்தின் மீது அக்கறையற்ற மனிதர்களாக இருந்து கொண்டிருக்கிறோம். இத்தகைய செயலை தவறு என இறைவன் சுட்டிக்காட்டுகிறார்.  எப்படி செல்வந்த இளைஞன் தன் வீட்டுக்கருகில் இருந்த ஏழை லாசரைக் கண்டுகொள்ளாமல் இருந்தானோ,  அது போலத்தான் பல நேரங்களில் நாமும் நாம் வாழுகின்ற சமூகத்தில் பல்வேறு துன்பங்களைப் படுகின்ற மக்களை பார்க்கிற போது,  பார்த்தும் பாராதது போல இருந்து விட்டுச் செல்லக் கூடியவர்களாக இருக்கிறோம். 

         ஒரு பத்திரிகை ஆசிரியர் இவ்வாறு குறிப்பிடுகிறார்,  இந்த உலகத்தில் ஒரு இனத்திற்கு ஒரு துன்பம்  நேர்கிறது என்றால், அந்த இனத்தைச் சார்ந்த அனைத்தும் அதனை எதிர்த்துப் போராடும். ஆனால் மனித இனம் மட்டுமே புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும் என்று.

 இன்று  நாம் வாழுகின்ற சமூகத்தில், இந்த சமூகத்தில் காணக்கூடிய அவலங்களை கண்டும் காணாமல் செல்வதற்காக நாம் படைக்கப்பட்டவர்கள் அல்ல.  நாம் காணுகின்ற அவலங்களை எல்லாம் சரி செய்வதற்கான ஆற்றலை இறைவன் நமக்குத் தந்திருக்கிறார். நமது மத்தியில் பசியோடு வாடுபவரை  காணும் போது, அவரது பசியைப் போக்கக் கூடியவர்களாகவும்,  துன்பத்தில் வாடுபவர்களைக் காணும் போது, அவர்களின் துன்பத்தில் அவர்களோடு உடனிருக்க கூடியவர்களாகவும் நாம் இருக்க வேண்டும் என்பதை இறைவன் வலியுறுத்துகிறார்.

     இறைவன் வலியுறுத்தும் இந்த வாழ்க்கைப் பாடத்தை உணர்ந்து கொண்டவர்களாக நாம் வாழும் இச்சமூகத்தின் மீது அக்கறை கொண்ட மனிதர்களாக நாம் மாறிட இறையருள் வேண்டி தொடர்ந்து திருப்பலி வழியாக செபிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...