சனி, 5 மார்ச், 2022

சோதனைகளை சாதனைகளாக மாற்றுவோம்...(6.3.2022)

இறைவன் இயேசுவில் அன்பு உறவுகளே..... 

இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் ....
 

இன்றைய நாள் வாசகங்கள் அனைத்துமே இந்த தவக்காலத்தில் நாம் மேற்கொள்ளவிருக்கின்ற ஜெபம் தவம் தர்மச் செயல்கள் அனைத்திலும் நாம் சந்திக்கக்கூடிய சோதனைகளுக்கு மத்தியிலும் தளரா மனதோடு நிலைத்திருந்து ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பிற்கு நம்மை நாம் தகுதிப்படுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கின்றன.


 இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய இன்ப துன்பங்களில் தங்களோடு உடன் இருந்து தங்களை வழிநடத்தி, மீட்டு வந்து, பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டில் குடியேற வைத்த இறைவனது வல்ல செயல்களை நினைவுகூர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்துகிறார்கள். இந்த இஸ்ரயேல் மக்களைப் போலவே தான் நாமும் நமது வாழ்வில் பல நேரங்களில் பலவிதமான இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் உட்பட்டிருந்த சூழ்நிலையில், முன்பின் தெரியாத பல நபர்கள் வழியாக இறைவன் நம் துன்பத்தில் நமக்கு துணை நின்று நம் துன்பத்தை நம்மிடமிருந்து அகற்றியுள்ளார். பல நேரங்களில் அந்த இறைவனை நாம் கண்டுகொண்டது உண்டு. ஆனால் சில நேரங்களில் துன்பம் மறைந்தவுடன் துணைநின்ற இறைவனையும் மறந்தவர்களாக நாம் இருந்திருக்கலாம்.

     இன்றைய முதல் வாசகம் இறைவனை நம்மோடு உடனிருந்த நேரங்களை நினைவுகூர நமக்கு அழைப்பு விடுக்கிறது. நமது வாழ்வில் நமக்கு துணை நின்ற இறைவனை நினைவுகூர்ந்து அவர் செய்த நன்மைகளுக்கு நன்றி கூற இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது.

அது போலவே இன்றைய இரண்டாம் வாசகம் நம்பிக்கையில் நாம் நிலைத்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. நம்புகிறவருக்கு எல்லாம் கூடும் என்ற விவிலிய வார்த்தைகளுக்கு ஏற்ப நம்பிக்கையில் நாம் நாளும் வளரக்கூடிய மனிதர்களாக இருக்க நமக்கு அழைப்பு தருகிறது. தவக்காலத்தில் இந்த 40 நாட்களில் நாம் மேற்கொள்ளுகின்ற தவ முயற்சிகளை நாம் பின்பற்ற இயலுமா? இயலாதா? என்ற எண்ணங்கள் உள்ளத்தில் எழுகின்ற போதெல்லாம், முடியும் என்ற எண்ணத்தோடு ஜெபத்திலும் தவத்திலும் தரும செயலிலும் நாம் ஈடுபட இந்த நாள் நமக்கு வலியுறுத்துகிறது.

நல்லதை செய்ய எண்ணும் பொழுது வாழ்வில் பலவிதமான தடைகளை சந்திக்க நேரும் என்பதற்கு இயேசுவின் வாழ்வு ஒரு முன் உதாரணமாக அமைகிறது.

      இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் தனது வாழ்வில் மூன்று சோதனைகளை எதிர் கொள்கிறார். இந்த மூன்று சோதனைகளும் தொடக்க காலத்தில் ஆதாம்-ஏவாள்  வாழ்வில் ஏற்பட்ட சோதனைகளுக்கு இணையானவையே ....

தொடக்க நூலில் நாம் வாசிக்கலாம், ...உண்ணக்கூடாது என இறைவன் உரைத்த மரத்தின் கனியை உண்ண பாம்பு அவர்களைத் தூண்டியது .... பாவத்தை குறித்து, அந்த மரத்தின் கனியை குறித்து விவிலியத்தில் இவ்வாறு சொல்லப்படுகிறது ...

தொடக்க நூல் 3:6

அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும், கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும், அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருந்ததைக் கண்டு, பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள். அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள். அவனும் உண்டான்.


மரத்தின் கனி 
சுவையானதாக , 
கண்களுக்கு களிப்பூட்டுவதாக, 
விரும்பத்தக்கதாக இருந்தது என விவிலியம் நமக்கு எடுத்துரைக்கிறது...

இந்த மூன்று செயல்பாடுகளும் இயேசுவின் சோதனையிலும் இடம்பெறுகின்றன.  

முதலில் கல்லை அப்பமாக மாற்றச் சொன்ன போது உணவு... சுவை...இதை மையப்படுத்திய சோதனையாக அது அமைந்தது. உண்பதற்கு சுவையானதாகவும் இருந்தது. எனது முதல் பெற்றோர் விலக்கப்பட்ட கனியை உண்டு பாவம் செய்தனர். ஆனால் இயேசுவோ பசியாய் இருந்த நிலையிலும் உணவினால் மட்டும் மனிதன் உயிர் வாழ்வதில்லை என்பதை எடுத்துரைக்கக் கூடியவராய் இருக்கின்றார்.

 முதல் பெற்றோர் விலக்கப்பட்ட கனி கண்களுக்கு களிப்பூட்டுவதாக இருக்கிறது என எண்ணி அதனை உண்டு பாவம் செய்தார்கள். ஆனால் உலகச் செல்வங்களையெல்லாம் அலகை இயேசுவுக்கு காட்டியபோது அவர் அதற்கு மயங்கவில்லை... மாறாக நிலையற்ற செல்வங்களை விட நிலையானவர் இறைவன் ஒருவரே.  அவர் ஒருவருக்கே பணிந்து நட என அலகைக்கும் பாடம் கற்பித்தார்.

ஆதிப் பெற்றோர் அறிவைப் பெற விரும்பத்தக்கதாக இருக்கிறது என எண்ணி, விலக்கப்பட்ட கனியை உண்டு பாவம் செய்தார்கள். அதுபோலவே அலகையும் இயேசுவிடம்,  மேலிருந்து கீழே குதி, உன்னைத் தாங்கும்படி தம் தூதர்களுக்கு அவர் கட்டளையிடுவார் என விவிலியத்தில் உள்ளது என்பதை மேற்கோள்காட்டி, அறிவை பயன்படுத்தி ஆண்டவரைத் தக்க வைக்க முயன்றபோது கூட இயேசு அதை விரும்பாத ஒரு நபராக, "உன் கடவுளாகிய ஆண்டவரை சோதிக்க வேண்டாம்" என விவிலியத்தில் உள்ளதை மேற்கோள்காட்டி அலகையை வெற்றி கொள்கிறார்.


ஆதிப் பெற்றோரைப் போலவே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் சோதிக்கப்பட்டார். ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து சோதனைகளின் போது சோதனைகளை சாதனைகளாக மாற்றினார். நாமும் இந்த 40 நாட்கள் தவக்காலத்தில் நமக்கும்- கடவுளுக்கும், நமக்கும்- நமது செயல்களுக்கும், நமக்கும்- பிறருக்கும் இடையேயான உறவை குறித்து இன்னும் ஆழமாக சிந்தித்து, முறிந்து போன உறவுகளை முறைப்படுத்திக் கொள்ள முயலுகின்ற இந்த தவக்காலத்தில் பலவிதமான தடைகளை சந்திக்க நேரிடலாம். தடைகளை சந்திக்கின்ற போது மனம் தளராது, துணிவோடு இயேசுவைப்போல அதனை எதிர்கொள்ளக்கூடிய துணிச்சல் பெற்ற மனிதர்களாக நீங்களும் நானும் இருக்க வேண்டும் என்பதை இன்றைய நாள் இறைவார்த்தை நமக்கு விளக்குகிறது.

இறைவன் தருகின்ற இந்த வாழ்வுக்கான பாடத்தை இதயத்தில் இருத்தியவர்களாய்... வாழ்வில் இடர்களை சந்திக்கின்ற நேரங்களிலெல்லாம் 

1பேதுரு 5:8-11 கூறுவதுபோல,  

அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிகிறது.

அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள். உலகெங்கிலுமுள்ள உங்கள் சகோதரர் சகோதரிகள் உங்களைப் போலவே துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் அல்லவா?

எல்லா அருளும் நிறைந்த கடவுள், இயேசு கிறிஸ்துவுக்குள் என்றும் நிலைக்கும் தம் மாட்சியில் பங்குகொள்ள உங்களை அழைத்திருக்கிறார். சிறிது காலத் துன்பங்களுக்குப்பின் அவர் உங்களைப் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, வலுப்படுத்தி நிலைநிறுத்துவார்.
அவரது வல்லமை என்றென்றைக்கும் உள்ளது. 

                      என்ற இறை வார்த்தைகளை இதயத்தில் இருத்தியவர்களாய் சோதனைகளை சாதனைகளாக மாற்றிக்கொண்டு,  ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்கக் கூடியவர்கள் நாம் என்பதை நமது செயல்களால் வெளிக்காட்டிட இறையருளை இந்த திருப்பலி வழியாக தொடர்ந்து வேண்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...