தவக்காலம்....
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்று நாம் தவக்காலத்தினை துவங்குகிறோம். தவக்காலத்தின் துவக்கமாக இன்று நமது நெற்றியில் பூசப்படுகின்ற சாம்பலானது மண்ணில் இருந்து விழுந்த நாம் மண்ணுக்கு உரியவர்கள் என்பதை நினைவூட்டுகிறது. இந்த தவக்காலம் என்பது துக்கத்தின் காலமா? மகிழ்ச்சியின் காலமா? என்ற கேள்வி உள்ளத்தில் எழுமாயின் இது இரண்டும் கலந்த ஒரு காலம். இங்கு தீமைகளையும் நமது நல்ல செயல்களையும் சிந்தித்து சீர்தூக்கி பார்த்து நாம் தீயவற்றை விலக்கி, நன்மையானவற்றை நமது வாழ்வில் தொடர நமக்கு நாமே சுய ஆய்வு செய்து கொண்டு வாழ அழைப்பு தருகின்ற ஒரு காலம்.
இந்த ஒரு காலத்தில் ஆண்டவரின் இரக்கத்தை நாம் அதிகமாக உணர அழைக்கப்படுகிறோம். அந்த ஆண்டவரோடு ஜெபத்திலும், தவத்திலும், தர்மச் செயல்கள் மூலமாகவும் இணைந்து செல்ல வேண்டும் என்பதே திருஅவை நமக்கு வலியுறுத்துகிறது.
இதையே இன்றைய நற்செய்தி வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம்.
ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை பின்பற்றக்கூடிய நாம் ஜெபத்திலும், தவத்திலும், தர்ம செயலிலும் ஈடுபட வேண்டும். இறைவனோடு நாம் கொண்டுள்ள உறவை இன்னும் ஆழமாக சிந்தித்து பார்க்க, அவரோடு உரையாட, அவரது உரையாடலுக்கு நாம் செவி கொடுக்க, இந்த காலம் நமக்கு ஒரு அழைப்பினை தருகிறது. தவ முயற்சிகளை நாம் மேற்கொண்டு, அந்த தவ முயற்சிகள் மூலமாக, நாம் இந்த சமூகத்தில் எப்படி வாழ்கிறோம்? நம்மைச் சுற்றி உள்ளவர்களோடு எப்படி இணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம்? ஆண்டவரின் வார்த்தைகளை நமது வாழ்வாக மாற்றிக் கொள்ள நாம் எடுத்த செயல்பாடுகள் என்ன? நாம் புறம் தள்ளிய நமது சுய விருப்பு வெறுப்புகள் எவை? என்பதையெல்லாம் சிந்தித்துப் பார்த்து, நாம் கடவுள் விரும்பாதவைகளை நமது விருப்பத்திற்கு ஏற்ப செய்து கொண்டிருப்போமாயின், அவைகளை எல்லாம் விலக்கி ஒரு தவ வாழ்வை மேற்கொள்ள, இந்த காலம் ஒரு அழைப்பினை தருகிறது. அது போல தர்மச் செயல்களில் நாம் நிறைந்திருக்க வேண்டும் என்பது இறைவன் விரும்புகிற ஒன்று. இயேசு சென்ற இடமெல்லாம் நன்மை செய்துகொண்டே சென்றார் என விவிலியத்தில் நாம் வாசிக்கிறோம். நாமும் இயேசுவைப் போல கண்ணில் காணும் மனிதர்களுக்கு நல்லது செய்யக்கூடியவர்களாக, தேவையில் இருப்போரின் தேவையை நிவர்த்தி செய்யக் கூடியவர்களாக, நம்மிடம் இருப்பதை இல்லாதவரோடு பகிரக் கூடிய மனிதர்களாக அறச் செயல்களில் அனுதினமும் ஈடுபட அழைப்பு தருகின்ற காலமே இந்த தவக்காலம்.
புதிதாக துவங்கியுள்ள இந்த தவக்காலத்தில் நாம் இறைவனோடு ஜெபத்திலும், நம்மோடு தவத்திலும், அயலாரோடு தர்ம செயலிலும் ஈடுபட்டு வாழ அழைக்கப்படுகிறோம். மற்றவர்கள் அறிய வேண்டும் என்ற எண்ணத்தோடு இவைகளை முன்னெடுத்தல் ஆகாது என்பதை இன்றைய வாசகங்கள் வலியுறுத்துகின்றன. நாம் செய்கின்ற இந்த அறச்செயல்கள் ஆண்டவர் மட்டுமே அறியக் கூடியதாக இருக்க வேண்டும். நாம் அறச்செயல்களை நமது செயல்களாக மாற்றிக் கொண்டு, ஆண்டவரின் வார்த்தைகளை நமது வாழ்வாக மாற்றிட இந்த நாளில் அழைக்கப்படுகிறோம். அழைக்கும் இறைவனின் குரலுக்கு செவி கொடுத்தவர்களாய், இந்த தவக்காலத்தில் இறைவனோடு உள்ள உறவில் இன்னும் ஆழமாக நாம் வளர, நமது வாழ்வில் அனுதினமும் செயலாற்றுகின்ற அந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நாம் இன்னும் அதிகமாக கண்டுகொள்ள இந்த நாளில் அழைக்கப்படுகிறோம். அழைக்கும் இறைவனின் குரல் கொடுத்தவர்களாய் நாம் இறைவனின் அன்பில் நாளும் வளர, நம்மைச் சுற்றி உள்ளவர்களோடு நல்லுறவில் நாம் நமது வாழ்வை தொடர இறையருள் வேண்டி இணைந்து இந்த திருப்பலியில் ஜெபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக