நம்பிக்கையில் நிலைத்தவர்களாக...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
முப்பத்து எட்டு ஆண்டுகளாக உடல் நலமற்று இருந்த தன்னை குணமாக்க இயலாத நிலையில் இருந்த ஒரு நபரை இயேசு அவரது நம்பிக்கையின் நிமித்தமாக குணமாக்குவதை இன்றைய நாளில் நாம் வாசிக்கக் கேட்டோம். 38 ஆண்டுகளாக குளத்தில் தன்னை இறக்கி விட ஆள் இல்லாத காரணத்தினால், எப்படியாவது குணம் பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு குளத்தின் அருகில் காத்துக் கிடந்த ஒரு மனிதனை இறைவன் இயேசு கண்ணோக்குகின்றார்.
பொதுவாகவே இந்த யூத சமூகத்தில் பெத்சாய்தா என்ற அந்த குளத்தை நம்பி பலர் வாழ்ந்து கொண்டிருந்தனர். 38 ஆண்டுகளாக இஸ்ரயேல் மக்களிடையே பலவிதமான நம்பிக்கைகள் இருந்தன. யூதர்களிடையே பலவிதமான வழக்கங்கள் இருந்தன.
அவைகளுள் ஒன்று தான் இந்த பெத்சாய்தா குளத்தினை வானதூதர் கலக்குவதாகவும்,
கலங்குகின்ற நேரத்தில் இறங்குபவர் நலம் பெறுவார்கள் என்ற நம்பிக்கை அவர்களிடத்தில் மேலோங்கி காணப்பட்டது.
அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் எப்படியாவது முதலில் குளத்தில் இறங்கி நலம் பெற வேண்டுமென முப்பத்து எட்டு ஆண்டுகளாக ஒரு மனிதன் காத்திருந்தான். காத்திருந்து காத்திருந்து கடவுளின் அருளைப் பெற முடியாத நிலையில் இருந்தான். அந்த மனிதனுக்கு இயேசுவின் அருள் கிடைத்தது.
38 ஆண்டுகளாக நம்பிக்கையோடு காத்திருந்ததன் விளைவு, இயேசு அவரை ஒரே நிமிடத்தில் நலமாக்குகிறார். இயேசு நலமாக்குவதற்கு முன்பாக , அந்த முடக்குவாதமுற்ற மனிதனை நோக்கி ஒரு கேள்வியை எழுப்புகிறார். நீர் நலம் பெற விரும்புகிறீரா? என்று கேட்கிறார். அவரும் விரும்புகிறேன் என்று கூறுகிறார். அவர் கொண்டிருந்த நம்பிக்கையின் நிமித்தமாகவே, இயேசு அவரை குணப்படுத்துகிறார்.
நாமும் அத்தகைய நம்பிக்கையை கொண்டிருக்க வேண்டும். ஆண்டவர் மீது நம்பிக்கையோடு இருக்கிற போது அவர் நமது வாழ்வில் பலவிதமான நல்ல காரியங்களை செய்வார் என்பதை இன்றைய வாசகங்கள் வெளிப்படுத்துகின்றன.
எனவே நாமும் இந்தத் தவக்காலத்தில் ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டவர்களாக, நம்பிக்கையில் நிலைத்தவர்களாக, ஆண்டவர் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையில் ஆழப்பட இறையருள் வேண்டி இன்றைய நாளில் இந்த திருப்பலி வழியாக இணைந்து தொடர்ந்து செபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக