நம்பிக்கையே ஆண்டவரோடு உள்ள உறவில் நம்மை ஆழப்படுத்தும்...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
தவக்காலம் என்பதே நமக்கும் - கடவுளுக்கும், நமக்கும் - நமது செயல்களுக்கும், நமக்கும் - நமது சகோதரர்களுக்கும் இடையே உள்ள உறவை குறித்து சிந்திப்பதும் ... நமது உறவை சரிப்படுத்திக் கொள்வதற்குமான ஒரு காலம் ...
நமக்கும் கடவுளுக்கும் இடையேயான உறவு சரியாக இருக்கும் பொழுது நமது செயல்களுக்கும் பிற சகோதரர்களுக்கும் இடையேயான உறவும் சரியானதாக அமையும்.
இன்றைய வாசகங்கள் அனைத்தும் ஆண்டவரோடு உள்ள உறவில் நிலைத்திருப்பதே நம் வாழ்வில் மகிழ்ச்சி என்பதை நமக்கு வலியுறுத்துகின்றன ...
ஆண்டவரோடு உள்ள உறவில் நாம் நிலைத்திருக்க ஆபிரகாமிடம் காணப்பட்ட நம்பிக்கை நமது நம்பிக்கையாக இருக்க வேண்டும் என்பதை முதல் வாசகம் வலியுறுத்துகிறது ...
தொடக்க நூல் 12ல் நாம் வாசிக்கிறோம் ...
வசதி வாய்ப்புக்களோடு, உறவுகளோடு இணைந்திருந்த ஆபிரகாமை
ஆண்டவர் நோக்கி, “உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல்.
உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய்.
உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்; உன்னைச் சபிப்போரை நானும் சபிப்பேன்; உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்” என்றார்.
ஆபிரகாமும் ஆண்டவரின் வார்த்தைகளின் மீது நம்பிக்கை கொண்டவராய் ஆண்டவரின் வார்த்தைகளை தன் வாழ்வாக மாற்றுகிறார். நாள்கள் பல கடந்த நிலையிலும் தனக்கென ஒரு வாரிசு இல்லாத நபராகவே ஆபிரகாம் நெடுநாட்கள் வாழ்ந்தார். ஆனால் அவர் ஆண்டவரின் வார்த்தைகளின் மீது கொண்டிருந்த நம்பிக்கையிலிருந்து பின்வாங்கவில்லை. நம்பிக்கையில் நிலைத்திருந்தார்... பல நேரங்களில் கடவுள் அவரோடு உரையாடுகின்ற பொழுதெல்லாம் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதாக அவருக்கு மீண்டும் மீண்டும் தன் வாக்குறுதிகளை நினைவுறுத்திக் கொண்டே இருந்தார். இதைத்தான் இன்றைய முதல் வாசகமாக நாம் வாசிக்க கேட்டோம்.... ஆபிரகாமை வெளியே அழைத்துச் சென்ற கடவுள்,
“வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்” என்றார்.
ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்.
தொடக்கநூல் 15: 6-7
ஆண்டவர் இயேசுவின் மீது நாம் கொள்ளுகின்ற நம்பிக்கைதான் ஆண்டவரோடு உள்ள உறவில் நாம் நிலைத்திருக்க நமக்கு உந்து சக்தியாக இருக்கிறது என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு வலியுறுத்துகிறது.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் பிலிப்பு நகர மக்களுக்கு எழுதிய கடிதத்தில் அவர்களிடத்தில் காணப்பட்ட தவறான நடைமுறைகளை சுட்டிக் காண்பித்து....
சகோதர சகோதரிகளே, நீங்கள் அனைவரும் என்னைப்போல் வாழுங்கள். நாங்கள் உங்களுக்குக் காட்டிய முன்மாதிரியின்படி வாழ்பவர்களைப் பின்பற்றுங்கள்.
பிலிப்பியர் 3:18
என வலியுறுத்துகிறார் ....
பவுலைப் போல நாம் வாழ வேண்டுமாயின் பவுலிடத்தில் காணப்பட்ட ஆண்டவர் மீதான ஆழமான நம்பிக்கை நமது நம்பிக்கையாக இருக்க வேண்டும். அவர் முன்மாதிரியாகக் காட்டிய திருத்தூதர்களின் வாழ்வில் வெளிப்பட்ட நம்பிக்கை, நமது நம்பிக்கையாக இருக்க வேண்டும். இந்த நம்பிக்கை மட்டுமே ஆண்டவரோடு உள்ள உறவில் நாம் நிலைத்திருக்க வழிவகுக்கும். அதுவே நமது மகிழ்ச்சி என்பதையும் திருத்தூதர் பவுல் தனது கடிதத்தின் வாயிலாக நமக்கு இன்றைய இரண்டாம் வாசகம் வழியாக வலியுறுத்துகிறார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உருமாற்றத்தை குறித்து வாசிக்க கேட்டோம்.
பழைய ஏற்பாட்டு நூல்களில் மிகப் பெரிய ஆளுமையாக காட்டப்படக் கூடிய மோசேயுடனும், மிகப்பெரிய தீர்க்கதரிசியாக கருதப்பட்ட எலியாவுடனும் இயேசு மலைமீது உரையாடிக் கொண்டிருக்கிறார் ... அதனைக் கண்ட சீடர்கள் இந்த இயேசுவை யார் என அறியாதவர்களாய் வியப்புக்குள்ளானவர்களாய் வியந்து பார்த்த போது பேதுரு, ஆண்டவரே! மூவரும் தங்குவதற்கு இங்கே கூடாரம் அமைக்கட்டுமா? என, தான் சொல்வது என்னவென்று அறியாதவராய் அதைச் சொன்னார் என விவிலியம் சுட்டிக்காட்டுகிறது. இயேசுவைப் பற்றிய தெளிவற்ற நிலையில் இருந்த சீடர்களுக்கு தெளிவை உணர்த்தும் விதமாக மேகத்தினின்று, ″ இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள் ″ என்று ஒரு குரல் ஒலித்தது....
ஒலித்த இறைவனது வார்த்தைகளின் அடிப்படையில் தங்களோடு இருக்கின்ற இறைவன் இயேசுவின் மீதான நம்பிக்கையில் வேரூன்றியவர்களாக சீடர்களும் அவரைப் பின்தொடர்ந்தார்கள் என்பதை நாம் சீடர்களின் வாழ்விலிருந்து அறிகிறோம்.
ஆனால் பல நேரங்களில் அவர்கள் தாங்கள் கொண்டிருந்த நம்பிக்கையில் இருந்து விலகியவர்களாய், மனித இயல்புக்கு ஏற்ப ஆண்டவர் இயேசுவை விட்டுவிட்டு ஓடக்கூடிய மனிதர்களாக இருந்தார்கள். அவரோடு கொண்டிருந்த உறவில் இருந்து தங்களை விலக்கிக் கொள்ளக் கூடிய நிலையிலும் அவர்கள் இருந்தார்கள் என்பதை வரலாறு நமக்கு சீடர்களின் வாழ்விலிருந்து வெளிப்படுத்துகிறது ...
சீடர்களைப் போலவே, ஆண்டவர் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டிருக்கக்கூடிய நாமும் பல நேரங்களில் அவரோடு கொண்டிருக்கின்ற நம்பிக்கையில் இருந்து விலகியவர்களாய் இயேசுவோடு உள்ள உறவிலிருந்து விடுபட்டுப் போகக்கூடிய சூழ்நிலைகளை நமது வாழ்வில் சந்திக்க நேரலாம். சந்திக்கின்ற போதெல்லாம் இதயத்தில் இருத்திக் கொள்ள வேண்டிய இறைவார்த்தை....
நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாய் மீட்புக்காகக் கடவுளுடைய வல்லமையால் பாதுகாக்கப்பட்டு வருகிறீர்கள். இம்மீட்பு இறுதிக் காலத்தில் வெளிப்பட ஆயத்தமாய் உள்ளது.
இப்போது சிறிது காலம் நீங்கள் பல்வகைச் சோதனைகளால் துயருற வேண்டியிருப்பினும், அந்நாளிலே பேருவகை கொள்வீர்கள்.
அழியக்கூடிய பொன் நெருப்பினால் புடமிடப்படுகிறது. அதைவிட விலையுயர்ந்த உங்கள் நம்பிக்கையும் மெய்ப்பிக்கப்படவே துயருறுகிறீர்கள். இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது அந்நம்பிக்கை உங்களுக்குப் புகழும் மாண்பும் பெருமையும் தருவதாய் விளங்கும்.
நீங்கள் அவரைப் பார்த்ததில்லை; எனினும், அவர்மீது அன்பு செலுத்துகிறீர்கள். இப்பொழுதும் நீங்கள் அவரைக் கண்டதில்லை; எனினும், நம்பிக்கை கொண்டு சொல்லொண்ணா, ஒப்பற்ற மகிழ்ச்சியடைந்து பேருவகை கொள்கிறீர்கள்.
1 பேதுரு 1:5- 8
என்பதாகும் ....
நாம் கொண்டிருக்கின்ற நம்பிக்கையினால் தான் நாம் கடவுளோடு உள்ள உறவில் ஆழப்படப் போகிறோம் என்பதை உணர்ந்தவர்களாய் வாழ்வில் பல நேரங்களில் சோதனைகளை சந்திக்கின்ற சூழல்களை நாம் சந்தித்தாலும், சோதனைகளுக்கு மத்தியிலும் அதனையெல்லாம் துணிவோடு எதிர் கொண்டவர்களாய் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நம்பிக்கையில் நிலைத்திருந்து ஆண்டவரோடு உள்ள உறவில் நாளும் வளரவேண்டும் என்பதற்காகவே இந்த தவக்காலம் நமக்குத் தரப்பட்டிருக்கிறது. இந்த காலத்தில் நாம் மேற்கொள்கின்ற அனைத்து விதமான முயற்சிகளும் ஆண்டவரோடு உள்ள உறவில் நம்மை இணையச் செய்கிறது என்பதை உணர்ந்தவளாய் நாம் நம்புகின்ற இறைவன் மீது இன்னும் ஆழமான நம்பிக்கை கொண்டு அவரைப் பின்தொடர்வோம்.
நம்பிக்கையே ஆண்டவரோடு உள்ள உறவில் நம்மை ஆழப்படுத்தும் என்பதை அறிந்தவர்களாய் இறைவனோடு உள்ள உறவில் ஆழப்பட ...
இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து திருப்பலி வழியாக செபிப்போம் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக