வளனாரின் வாழ்வு காட்டும் வாழ்க்கை பாடம்...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்று நம் தாய் திரு அவையானது புனித வளனாரின் திருநாளை சிறப்பிக்க நமக்கு அழைப்பு விடுக்கிறது.
'யோசேப்பு' என்றால் 'அவர் சேர்ப்பார்,' '(கடவுள்) சேர்த்துக் கொடுப்பார்' என்று பொருள் தரப்படுகின்றது.
யோசேப்பைக் குறித்து விவிலியத்தின் துணை கொண்டு நாம் ஆராய்கின்ற போது அவர் ஒரு நேர்மையாளர், நீதிமான் என விவிலியம் சுட்டிக்காட்டுகிறது.
கனவில் இறைவன் தூதரோடு உரையாடியவர் இவர்.
இறைவனின் தூதர் கூறிய வார்த்தைகளுக்கு ஏற்ப தன் வாழ்வை அமைத்துக் கொண்டவர் இவர்.
தன் வாழ் நாள் முழுவதையுமே அன்னை மரியாவையும் இயேசுவையும் பாதுகாத்து பராமரிக்கின்ற பணியிலேயே செலவழித்த ஒரு நபர் இந்த வளனார் அவர்கள். திருக்குடும்பத்தின் தலைவராக விளங்குகின்ற இந்த வளனாரின் வாழ்வோடு நமது வாழ்வை ஒப்பிட்டுப் பார்க்க இன்றைய நாள் நமக்கு அழைப்பு விடுக்கிறது.
ஒரு குடும்பம் என்றால் அங்கு தாயும் தந்தையும் இன்றியமையாதவர்கள். இருவரின் தியாகமும் ஒரே தராசில் வைத்துப் பார்க்கின்ற போது அது சரிநிகராகவே இருக்கும். ஆனால் பெரும்பாலான நேரங்களில் தாய்மார்களின் தியாகமானது பலரால் போற்றப்படுகிறது. தந்தையர்களின் தியாகமானது மௌனம் ஆக்கப்படுகிறது.
மனித வாழ்வில் பொதுவாக கூறுவார்கள், ஒரு தந்தையானவர் குடும்பத்தில் உள்ள குழந்தைகளை கண்டிக்கின்ற போது தாயானவள், பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தனக்குத்தான் வலியும் வேதனையும் தெரியும் எனக் கூறி குழந்தைகளுக்கு ஆதரவாக தனது குரலோசையை எழுப்புவார். ஆனால் உண்மையில் பார்க்கின்ற போது தியாகத்தில் இருவரும் குறைந்தவர்கள் அல்ல. தாயையும் சேயையும் மருத்துவமனைக்குள் அனுப்பி விட்டு, பல தந்தைமார்கள் இரண்டு உயிர்களும் இறைவனின் அருளால் பாதுகாக்கப்பட வேண்டுமென அவர்கள் மனம் படுகின்ற வேதனையை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். தங்களின் தியாகங்களை தங்களுக்குள்ளாக புதைத்துக் கொண்டு, தங்களின் தேவைகளை சுருக்கிக் கொண்டு, தன்னை நம்பி வந்த மனைவியின் எண்ணங்களையும், மனைவியின் தேவைகளையும், தங்களுக்கு இறைவனின் அருளால் கிடைத்த குழந்தைகளின் தேவைகளையும் நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதில் தங்களையே கரைத்துக்கொள்ளக் கூடிய தந்தைமார்கள் பலர் உண்டு. அவர்களைக் குறித்து நினைவுகூர இந்த நாள் நமக்கு அழைப்பு விடுக்கிறது. புனித வளனார் திருக்குடும்பத்தின் தலைவராக இருந்து, இயேசுவை வளர்த்தெடுத்தது போல, நாமும் இந்த சமூகத்தில் தந்தைக்குரிய பாங்கோடு, நம்மைச் சுற்றி உள்ளவர்களையும், நம்மைச் சார்ந்தவர்களையும் வளர்த்தெடுக்க கடமைப்பட்டு இருக்கிறோம் என்பதை உணர்ந்து கொண்டவர்களாக, மாறிட இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது.
தவக்காலம் என்பதே நம்மைக் குறித்து நாம் சிந்திப்பதற்கும், நமக்கும் கடவுளுக்கும் இடையேயான உறவை சரிசெய்து கொள்வதற்குமான ஒரு அழைப்பை தருகின்ற காலம் என்பதை உணர்ந்தவர்களாக, சற்று நிதானமாக, நமது வாழ்வில் நமக்காக நமது தந்தையர்கள், நமது பெற்றோர்கள் செய்கின்ற தியாகத்தை நினைவு கூர்வோம். அதுபோல நாம் செய்து கொண்டிருக்கின்ற தியாகங்களை நினைவு கூர்வோம். நமக்காக தியாகங்களை செய்கின்றவர்களை நினைவு கூர்வோம். அவர்களுக்காக செபிக்க இந்த நாளில் நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம். வளனாரின் வாழ்வு நமக்கு நீதியோடும், நேர்மையோடும் தங்கள் வாழ்வை அடுத்தவருக்கு அர்ப்பணிக்கக் கூடியவர்களாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது என்பதை உணர்ந்து கொண்டவர்களாக, நமது வாழ்வை அடுத்தவருக்கான வாழ்வாக மாற்றிட இறையருள் வேண்டி தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக செபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக