இயேசுவும் - அழைப்பும்....
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் வழியாக பாவி என கருதப்பட்ட லேவியை கடவுள் தன்னை பின்பற்ற அழைப்பது குறித்து நாம் வாசிக்க கேட்டோம். அன்றைய யூத சமூகத்தில் இஸ்ரேல் மக்களை ரோமையர்கள் ஆட்சி செய்து வந்தார்கள். உரோமையர்கள் மக்களிடமிருந்து வரி வசூலிப்பதற்காக சிலரை நியமித்தார்கள். அவர்கள் மக்களிடமிருந்து நியாயமற்ற முறையில் வரியை வசூலித்து அதை உரோமை அரசுக்கு தரக் கூடியவர்களாக இருந்தார்கள். இத்தகைய பணியினை செய்யக்கூடிய மனிதர்களை அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் திருடர்களையும் கொள்ளையர்களையும் வெறுப்பது போல இந்த வரி வசூலிப்பவர்களை வெறுத்து ஒதுக்கினார்கள். நியாயமான முறையில் வரி வசூலிக்கக் கூடிய மனிதர்களுக்கு சில இடங்களில் சிலைகளை வைத்து இருந்த அதே மக்கள் அநியாயமான முறையில் வரி வசூலிக்க கூடிய நபர்களை வெறுக்கக்கூடியவர்களாகவும் அவர்களைப் பாவி என முத்திரை குத்தக் கூடியவர்களாக இருந்தார்கள் என வரலாறு நமக்கு கற்பிக்கிறது.
இந்த வரலாற்றுப் பின்னணியின் அடிப்படையில் நோக்குகின்ற போது இந்த லேவி எனப்படக்கூடிய மத்தேயு, பாவியாக சித்தரிக்கப்பட்ட ஒரு நபர். இது அவர் அநியாயமான முறையில் மக்களிடம் வரியை வசூலித்தார் என்பதை வெளிப்படுத்துகிறது. மக்களின் பார்வையில் பாவி என கருதப்பட்ட ஒருவரை இயேசு தேடி செல்லக்கூடிய ஒரு மனிதராக இருந்தார். அவரை தன்னை பின்பற்ற வருமாறு அழைத்தார். அவரது வீட்டிற்குச் சென்று அவரோடு அமர்ந்து உணவருந்தினர். இதை பார்த்த மக்கள் அனைவரும் இயேசுவின் செயலில் குற்றம் சுமத்தத் தொடங்கினார்கள். இவர் பாவிகளோடு உறவு கொள்கிறார் என இயேசுவின் செயலை குற்றப்படுத்தினார்கள். ஆனால் இயேசு அவர்களுக்கு நான் நேர்மையாளரை அல்ல பாவிகளையே அழைக்க வந்தேன் எனக் குறிப்பிட்டார்.
கடவுளின் பார்வையில் நாம் அனைவருமே சமமானவர்கள். நாம் எந்நிலையில் இருந்தாலும் கடவுள் நம்மை தன் பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவரது பிள்ளைகளாகிய நாம் பல நேரங்களில் நமது ஊனியல்புகளின் அடிப்படையில் தவறான வழிகளில் செல்லுகிற போது கூட நம்மை கண்டித்து திருத்தக்கூடிய ஒரு நபராகத் தான் கடவுள் நம்முள் இருக்கிறாரே ஒழிய, நாம் செய்கிற செயல் தவறு எனக் கருதி நம்மை விட்டு நகர்ந்து நிற்பவர் அல்ல கடவுள்.
அந்த அடிப்படையில் தான் பாவி என மக்கள் கருதுகின்ற அளவிற்கு தன் செயல்களை அமைத்துக் கொண்டிருந்த மத்தேயுவை இயேசு தேடிச் சென்றார். அவரை தனது சீடராக மாற்றனார்.
.
இன்று இந்த இறைவார்த்தைப்பகுதி தருகின்ற நமது வாழ்வுக்கான பாடம் என்ன? என சிந்திக்கின்ற போது, இந்த தவக்காலத்தில் நாம் நமது செயல்களை குறித்து சிந்திக்கிறோம். பல நேரங்களில் நாம் பல இடங்களில் நமது வாழ்வுக்கான பாடம் என்ன என சிந்திக்கின்ற போது பல நேரங்களில் நமது ஊனியல்புகளின் அடிப்படையில் சிந்திக்கின்ற போது, நாமும் இந்த மத்தேயுவைப் போல, பாவிகளாக இச்சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நாம் செய்த குற்றங்கறைகளை
நினைவு கூர்ந்து, மனம் வருந்தி மனமாற்றம் பெற்ற மத்தேயுவைப் போல நாமும் மனமாற்றம் பெற வேண்டும் என்பது தான் இந்த தவக்காலம் நமக்கு வலியுறுத்துகின்ற வாழ்வுக்கான பாடம். தவக்காலத்தில் நாம் மேற்கொள்கின்ற தவ முயற்சிகள் வழியாகவும், அறச்செயல்கள் வழியாகவும், நாம் செய்து வந்த தவறுகளை நாம் கண்டு கொள்ளவும், அதை சரி செய்து கொள்ளவும், சரி செய்து கொண்டவர்களாய் ஆண்டவர் இயேசுவின் பின்னால் அவரை நம்பி பயணம் செய்யக்கூடியவர்களாகிய சீடர்களாக மாற, இறைவன் அழைப்பு தருகிறார். ஏதோ இறைவன் அழைக்கிறார் என்ற சொல்லியவதைக் கேட்டுவிட்டு, நகர்பவர்களாக நாம் இல்லாமல், நமது செயல்களை இன்றைய நாளில் அமைதியில் அமர்ந்து சிந்தித்துப் பார்த்து, சரி செய்ய வேண்டியவற்றை சரி செய்து இறைவனின் பாதையில் பயணம் செய்ய நம்பிக்கையில் ஊனறியவற்றை கொண்டவர்களாய், இறையருளை வேண்டுவோம் இந்த திருப்பலி வழியாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக