புதன், 23 மார்ச், 2022

நம்மைப் போலவே பிறரும்....(24.3.2022)

நம்மைப் போலவே பிறரும்....


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இயேசு பெயல்செபூலைக் கொண்டே பேய்களை ஓட்டுவதாக இன்றைய நற்செய்தி வாசகத்தில் பரிசேயர் கூறுவதை நாம் வாசிக்க கேட்டோம். 

 பல நேரங்களில் இந்த பரிசேயர்களை போலத்தான் நாமும் இருக்கின்றோம். ஏனென்றால், பரிசேயர்களைச் சார்ந்தவர்கள் பேய்களை ஓட்டிய பொழுது, அது கடவுளின் வல்லமையால் செய்யப்பட்டது என அவர்கள் மார் தட்டிக் கொண்டனர். அதே வல்ல செயலை இயேசு செய்கின்ற பொழுது, அவர் தீய ஆவியின் துணை கொண்டு அவ்வாறு செய்வதாக கூறினர். 

       இவ்வாறு தனக்கு ஒரு நீதி மற்றவருக்கு ஒரு நீதி என சிந்திக்கவும் பேசவும் கூடிய மன நிலையை அவர்கள் கொண்டிருந்தனர். இதே மனநிலைதான் இன்று பலநேரங்களில் நம்மிடமும் இருக்கின்றது. 

              பல நேரங்களில் நாம் ஒரு காரியத்தை செய்தால் அது மிகவும் சரி எனவும், அதே காரியத்தை மற்றவர்கள் செய்தால் அது கண்டிக்கத்தக்கது, தவறு எனவும் சொல்லக்கூடிய மனப்பாங்கு இன்று மனிதர்களின் மத்தியில் பரவலாக அதிகரித்துக் கொண்டே வருகின்றது. 

         இத்தகைய இரட்டை மனநிலையினைக் கொண்ட நிலைப்பாட்டை களைந்து, நேரிய செயல்களை நாமும் செய்ய இறைவன் இன்றைய நாளில் அழைப்பு தருகின்றார். 

      இன்றைய இறைவார்த்தையின் வழியாக இறைவன் நம்மோடு பேசவிருக்கின்ற செய்தி என்னவென சந்திக்கின்ற பொழுது,      தவக்காலம் என்பது நமது செயல்களை நாமே சீர்தூக்கிப் பார்த்து, சரிப்படுத்திக் கொள்ள அழைப்பு தருகின்ற ஒரு காலம். இத்தவக்க்காலத்தின் அடிப்படையில், நாம் வாழுகின்ற இந்த உலகத்தில்,  நாம் செய்கின்ற செயல்கள் குறித்து சிந்தித்துப் பார்ப்போம். பிறரை குற்றம் சாட்டிய தருணங்களை நினைத்து பார்ப்போம். 

           மற்றவர் நம்மை குறை சொல்லும் பொழுது ஏற்றுக் கொள்ளாத நாம், மற்றவரை குற்றவாளி என தீர்ப்பிட்டுக் கொண்டே இருக்கிறோம். மற்றவர்களை குற்றவாளி என குறை சொல்லும் போதெல்லாம் நாம் குற்றவாளியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது வெள்ளிடை மலை. 

            இன்று  நான் செய்தால் சரி,  மற்றவர் செய்தால் தவறு என்று சொல்லக்கூடிய சுயநலமான நிலைப்பாடு நம்மிடம் இருக்கிறது என்றால் அதனை சரி செய்து கொண்டு, நம்மைப் போலவே மற்றவர்களும் சில நேரங்களில் தவறு இழைக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டு, தவறிழைத்தவர்களை மன்னிக்கக் கூடிய மனநிலை உடையவர்களாக வாழ இன்றைய நாளில் இந்த திருப்பலி வழியாக தொடர்ந்து இணைந்து செபிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...