நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ள ...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய நற்செய்தியில், இயேசு தன்னை இறைத்தந்தையோடு இணைத்துப்பேசுகிறார். கடவுள் எப்படி இருக்கிறார் என்பதை இயேசுவிடமிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
ஏனென்றால், இயேசுவின் வார்த்தைகள் கடவுளின் வார்த்தைகள். இயேசுவின் உணர்வுகள் கடவுளின் உணர்வுகள். இயேசுவின் செயல்பாடுகள் கடவுளின் செயல்பாடுகள். பாவத்திற்கு எதிராக, கடவுள் எப்படி எழுகிறார் என்பதை இயேசுவின் வாழ்விலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். மனிதர்களைக் கடவுள் எப்படி பார்க்கிறார் என்பதையும், இயேசுவின் வார்த்தைகள் மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம்.
இயேசுவை முழுமையாக அறிந்துகொண்டவர்கள், நிச்சயம் தந்தையாகிற இறைவனை அறிந்திருப்பார்கள். ஏனென்றால், இயேசு கடவுளின் பிரதி பிம்பம். இயேசுவின் வார்த்தைகளையும், அவருடைய போதனைகளையும் நாம் நன்கு அறிந்துகொண்டால், கடவுளை நாம் முழுமையாக அறிந்துகொள்ளலாம்.
சிலுவையில் இயேசுவை அறையத் தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுள் ஒன்று, இயேசு தன்னை தந்தை இறைவனோடு இணையாக்கினார் என்பது. தந்தை இறைவனும் இயேசுவும்ஆள்தன்மையில் மட்டுமே வேறுபட்டவர்கள். சிந்தனை, செயல்பாடு அனைத்திலும் ஒன்றுபட்டவர்கள்.
"மகன் தாமாக எதையும் செய்ய இயலாது; தந்தையிடம் தாம் காணும் செயல்களையே செய்ய இயலும்."(மத்5:19)
எனவே இன்றைய நாளில் தந்தை இறைவனோடு தன்னை இணைத்துக் கொண்டு அவரது பணியை நிறைவேற்றுவதில், மனிதனாக இம்மண்ணில் பிறந்து சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்கு தன்னை தாழ்த்திக் கொண்ட நம் ஆண்டவர் இயேசுவைப் பின்பற்றி, நாமும் அவரைப்போல தந்தை இறைவனை முழுமையாக அறிந்து கொள்வதிலும், இன்னும் அதிகமாக ஆண்டவரோடு உறவாடுவதிலும், தந்தை இறைவனோடு உறவாடுவதிலும் நமது செப நேரத்தை அர்த்தமுள்ளதாக, பயனுள்ளதாக, மேன்மையான ஒரு நேரமாக நம்மை நாமே உருவாக்கிக் கொண்டு, தந்தை இறைவனோடும் ஆண்டவர் இயேசுவோடும் உள்ள உறவில் நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ள இன்றைய நாளில் இறையருள் வேண்டி இந்த திருப்பலியில் இணைந்து ஜெபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக