திங்கள், 21 மார்ச், 2022

அன்பை பகிர்ந்து வாழ்ந்திட....(22.3.2022)

 அன்பை பகிர்ந்து வாழ்ந்திட....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நல்ல மனம் வேண்டும் நாடு போற்ற வாழ என்று முன்னோர்கள் கூறியிருக்கின்றார்கள். 
நல்ல மனம் உடையவரின் கண்களில் ஆனந்தம் மிளிரும்.
நல்ல மனம் உடையவரால் இந்த உலகம் எழில் நிறைந்ததாய் காணப்படும். 
நல்ல மனம் உடையவரால் இந்த பூமி அழகாய் சிரித்துக் கொண்டிருக்கும்.

ஆம்! அன்புக்குரியவர்களே!
இன்றைய நற்செய்தி வாசகமானது நாம் வாழ நமக்காக படைக்கப்பட்ட இந்த உலகத்தை நமது மேன்மையான எண்ணங்களால் மகிழ்விக்கவும், நான் எனும் தன்முனைப்பை தவிடுபடியாக்கி
 நாம் என்னும் நல்லுறவை வளர்த்துக் கொள்ள நமக்கு அழைப்பு தருகிறது.

உயர்ந்திருந்தாலும் குறைந்திருந்தாலும் ஒரே கருத்தில் இணைக்கப்பட்டுள்ளன நமது விரல்களைப் போல ஆண்டவனால் படைக்கப்பட்ட நாமும் கூட பணத்தால், பதவியால், படித்துப் பெற்ற பட்டங்களால், சமூக அந்தஸ்தால் உயர்ந்திருந்தாலும் குறைந்திருந்தாலும், நாம் அனைவரும் அன்பு தந்தை இறைவனால் படைக்கப்பட்ட அன்பு மக்களே என்பதை உணர்ந்துகொள்ள இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். 


வண்ணங்கள் இணைந்தால் வானவில் உண்டு.

இதயங்கள் இணைந்தால் அன்பு உண்டு.

இதழ்கள் இணைந்தால் மலர் உண்டு.

வண்டுகள் இணைந்தால் தேன் உண்டு. 


ஆண்டவரின் சாயலில் படைக்கப்பட்ட மனிதர்கள் நாம் ஒவ்வொருவரும் இணைந்து வாழ அழைக்கப்படுகிறோம்.

ஆண்டவர் திருமுன் அல்லும் பகலும் அமர்ந்து

 ஆண்டவரே!

 எனக்கு அதைக் கொடு! எனக்கு இதைக் கொடு! என்று சதாகாலமும் நமது கண்ணுக்கு முன்பாக தெரிகின்ற காரியங்களை மட்டுமே ஆண்டவரிடத்தில் கேட்டுக் கொண்டிருக்கின்ற
நாம், ஆண்டவர் நம்மிடம் விரும்புகின்றன மேலான காரியமான அன்போடு இணைந்த மன்னிப்பையும், அன்போடு இணைந்த அரவணைப்பையும், நம்மில் வளர்த்து இருக்கின்றோமா என்பதை சிந்திப்போம்.

இந்த உலகில் மன்னிப்பு வழங்க தயாராக இருப்பவர்களே மிகத் திடமானவர்கள். மன்னிக்க முடியாத தவறு என்று ஒன்று இந்த உலகத்தில் இல்லவே இல்லை. பிறரது குற்றங்களை நாம் மனதார மன்னிக்கும் போது, நமது உள்ளத்திற்கு நாமே விடுதலை கொடுத்து கொள்கிறோம். 


இரக்கமுடையோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்” என்று மத்தேயு 5: 7 ல் பார்க்கிறோம். இயேசு கற்பித்த  செபத்தில், நாம் மற்றவர்களை மன்னிப்பதுபோல, நமது பாவங்களை கடவுள் மன்னிக்கிறார் என்பதற்கு அழுத்தம் கொடுக்கிறார். அதைத்தொடர்ந்து மீண்டும் பாவங்களை மன்னிப்பதைச் சொல்கிறார். ”மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்” மத்தேயு 6: 15.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கப்பட்ட உவமையில் பெரிய கடன் தொகையைக் கொண்டவன், அரசனிடம் என் கடனையெல்லாம் மன்னித்து விடுங்கள் என்றெல்லாம் கேட்கவில்லை. ஆனால் அரசனோ பெருந்தன்மையுடன் அவன் மேல் கருணை கூர்ந்து அவனது கடனையும், தண்டனையையும் நீக்குகிறார். அவனுக்கு விடுதலைக் கொடுக்கிறார். இவனுடைய விடுதலை கண்டிப்பாக அடுத்தவருக்கு விடுதலையைக் கொடுக்க வேண்டுமே தவிர அடுத்தவர்களை அடிமைப்படுத்தக் கூடாது. இவனின் மிகப்பெரிய கடன்தொகையை (குற்றத்தை) மன்னித்து, அரசன் இவனிடமிருந்து எதிர்பார்ப்பதும் கருணையையும், மன்னிப்பையுமே! அதை அவன் செய்ய தவறுகிறான் எனவே தண்டனைக்கு உள்ளாக்கப் படுகிறான்.

அன்பும், இரக்கமும், மன்னிப்பும் இந்த உலகத்தின் வளர்ச்சியில் நம்மை வழிநடத்திச் செல்லக் கூடியவை. இவற்றை நமது ஆடையாக அணிந்து கொண்டு வெறுப்பு என்னும் தடைக்கல்லை படிக்கல்லாக மாற்றி, ஆண்டவரை சந்தித்து அன்பை பகிர்ந்து வாழ்ந்திட இறையருள் வேண்டி இந்த திருப்பலியில் இணைந்து செபிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...