உள்ளம் என்னும் கோவில் தூய்மையாய் மாற்றிட தூய ஆவியாரின் துணையை நாடுவோம்....
இறை இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்று அன்னையாம் திருஅவை இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவை கொண்டாடுகிறது.
இறைவன் எங்கும் நிறைந்திருந்தாலும் அவரை பிரத்தியேகமாக வழிபடுவதற்கு மனிதர்களாகிய நமக்கு ஆலயம் என்பது மிகவும் அவசியமாகிறது.
இலாத்தரன் பசிலிக்கா உரோமை உயர் மறைமாவட்ட பேராலயமாகவும் திருத்தந்தையின் அதிகாரப்பூர்வமான இருக்கையை கொண்டுள்ள இடமாகவும் விளங்குகிறது.
இன்றைய வாசகங்கள் அனைத்தும் கோவிலை அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளன.
எசாயா இறைவாக்கினர் இன்றைய முதல் வாசகத்தின் வழியாக ஆலயத்தில் இருந்து புறப்பட்டு வரும் நீரூற்றை குறித்து எடுத்துரைக்கின்றார். அந்த நீரூற்றி சார்ந்தது வளர்ந்து நிற்கக் கூடிய உயர்ந்த மரங்களையும் செடிகளையும் எடுத்துரைக்கின்றார். அதுபோலவே ஆலயத்தைச் சார்ந்து அமைந்திருக்கக் கூடிய நம் ஒவ்வொருவரின் வீடுகளிலும் இறைவனது ஆசையானது வந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் உணர்ந்துகொள்ள அழைக்கப்படுகிறோம்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கொரிந்து நகர மக்களுக்கு எழுதுகின்ற கடிதத்தில் நாம் அனைவரும் கிறிஸ்துவின் மேல் கட்டப்பட்ட ஆலயங்கள் என்பதை தெளிவுபடுத்துகிறார்.
அதுபோலவே நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் தமது இல்லமாகிய ஆலயத்தை கள்வர் குகையாக மாற்றாதீர்கள் என அங்கு நடக்கின்ற அநீதிகளுக்கு எதிராக சாட்டையை சுழற்றுகிறார். என வாசிக்க கேட்டோம். நமது உள்ளம் எனும் ஆலயத்தை இறைவன் எப்போதும் தங்கும் நல்ல இல்லமாக வைத்துக்கொள்ள நமது எண்ணங்கள் தூய்மையாக வேண்டும்.
நம்முள் எழுகின்ற எதிர்மறை எண்ணங்களை அகற்றி நேர்மறையான எண்ணங்களால் ஆண்டவரின் இல்லமான நமது உடலை எப்போதும் தூய்மையாக்கி கொள்ளவும் அதனடிப்படையில் அனைவருக்கும் நலன் தருகின்ற ஆசைகளை வழங்குகின்ற மனிதர்களாக நாம் வாழவும் இறைவன் நமக்கு அழைப்பு தருகின்றார்.
இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவை கொண்டாடும் நாம் நம்முடைய உடலும் இறைவன் குடியிருக்கும் கோவில் என்பதை உணர்ந்து நமது உடலின் புனிதத்தை காக்க நம்முள் குடியிருக்கும் தூய ஆவியாரின் துணயை நாடுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக