வானதூதர்கள் போல வாழ....
இறைவன் இயேசுவில் இனியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
குறள் : 314
விளக்கம் :
இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.
இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை சோதிக்கும் நோக்குடன் இறப்புக்குப்பின் உயிர்ப்பு உண்டு என்பதில் நம்பிக்கையற்ற சதுசேயர்கள் இயேசுவை நோக்கி இறப்புக்குப்பின் எத்தகைய வாழ்வு இருக்கும்? என்பது குறித்து ஐயங்களை எழுப்புவது போல ஆண்டவர் இயேசுவின் மீது குற்றம் கண்டுபிடிக்க முயலுகிறார்கள்...
ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறப்புக்குப்பின் உள்ள வாழ்வில் நாம் மனித உடலோடு அல்ல மாட்சி பொருந்திய உடலோடு இருப்போம் எனவும், அவ்வாழ்வில் நாம் வானதூதர் களைப்போல இருப்போம் எனவும் தெளிவுபடுத்துகிறார்.
உயிர்ப்பின் மீது நம்பிக்கையற்ற சதுசேயர்களின் வஞ்சகமான இக்கேள்விக்கு ஆண்டவர் அவர்களும் ஆண்டவரின் மக்கள் என்பதை உணர்த்தும் வண்ணமாக நாம் அனைவரும் வானதூதர்கள் போல் இருப்போம் என குறிப்பிடுகிறார்.
இறந்தவர்களை நினைவு கூறுகின்ற இந்த நவம்பர் மாதத்தில் நமது உடன் பயணித்து, நம்மை விட்டு பிரிந்து விண்ணக வாழ்வுக்கு சென்றிருக்கக்கூடிய நமது உறவுகள் அனைவரம் ஆண்டவரின் முன்பாக வானதூதர்களைப் போல இருந்து அவரை போற்றியும், புகழ்ந்தும் அங்கிருந்து நமக்காக ஜெபித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.
நம்பிக்கையோடு நாம் மரித்துப்போன ஆன்மாக்களை நினைவுகூரவும், அவர்களின் குற்றம் குறைகளை மன்னித்து இறைவன் தனது வானக வீட்டில் அவர்களை இணைத்துக் கொள்ளவும், தொடர்ந்து அவர்களுக்காக ஜெபிக்கவும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
இறப்புக்கு பின்னால் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவால் உயிர்ப்பில் பங்குபெற இருக்கின்ற நாம் நம்மை நாம் தகுதிப்படுத்திக் கொள்ள இன்றைய நாள் வாசகங்கள் அழைப்பு தருகின்றது.
நாம் வாழும் சமூகத்தில் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மனிதர்களுக்கு மத்தியில், நாம் அனைவரையும் அன்பு செய்ய கூடியவர்களாக, அதிலும் குறிப்பாக நமக்கு இன்னல்களை ஏற்படுத்துகின்றவர்களுக்கு நல்லது செய்யக்கூடிய மனிதர்களாக மாறிடவும், அச்செயல்கள் மூலமாக ஆண்டவரின் உயிர்ப்பில் இறுதிநாளில் பங்கேற்று வானதூதர்கள் போல திகழ்ந்திட, நமது செயல்களை இம்மண்ணக வாழ்வில் சீர்தூக்கிப் பார்த்து, சரியான பாதையில் பயணித்து ஆண்டவரின் மாட்சியில் ஆட்சியில் பங்கு பெற தயாராகிட அருள் வேண்டி இந்த திருப்பலியில் தொடர்ந்து ஜெபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக