ஆண்டவர் விரும்பும் மக்களாக மாறிட...
நமது கிறிஸ்தவ மறையில் இறைவன் நம்மீது கொண்டிருக்கின்ற உறவை பொதுவாக கோழிக்கும் அதன் குஞ்சுகளுக்கும் இடையே இருக்கக்கூடிய உறவோடு ஒப்பிட்டு பார்ப்பார்கள்....
கோழி தனது குஞ்சுகளோடு இருக்கும் பொழுது தனது குஞ்சுகளை நோக்கி ஏதேனும் ஆபத்து நெருங்கி வருகிறது. அல்லது தனது குஞ்சுகள் ஏதேனும் தவறான வழிக்குச் செல்லுகிறது என தெரிந்தால்.... உடனே தாய் கோழி குரல் எழுப்பும். தாய்க்கோழயின் குரலுக்கு செவி கொடுத்து அதன் குஞ்சுகள் அனைத்தும் ஓடி வந்து தாயின் இறக்கைகளில் தங்கிக்கொள்ளும். தாய் கோழி தன் இறக்கைகளால் தனது குஞ்சுகளைக் காப்பது போல, இறைவன் நம்மை ஒவ்வொரு நாளும் பாதுகாத்து வருகின்றார்.
இந்த இறைவன் நமக்குத் தருகின்ற அழைப்பை உணர்ந்து கொண்டு நாம் நமது வாழ்வில் அவரின் இறையாட்சியின் மதிப்பீடுகளை பின்பற்றக்கூடிய மனிதர்களாக வாழ அழைக்கப்படுகிறோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு கிறிஸ்து எருசலேம் தேவாலயத்தை பார்த்து கண்ணீர் சிந்துகிறார்.
ஏன் இவர் எருசலேம் தேவாலயத்தை பார்த்து கண்ணீர் சிந்த வேண்டும்? என்ற கேள்வியை நமக்குளாக எழுப்பி பார்க்கின்றபோது.... ஆலயம் என்பது ஆண்டவன் குடியிருக்கும் இல்லம். இந்த இல்லத்தில் நம்மிடையே எந்தவித ஏற்றத்தாழ்வுகளுக்கும், வேறுபாடுகளுக்கும் இடமில்லை. ஆனால் அன்றைய காலகட்டத்தில் எருசலேம் தேவாலயத்தை வைத்து பல விதமான அரசியல் அரங்கேறிக் கொண்டிருந்தன. ஆலயத்திற்குள் வியாபாரிகள் ஒருபுறம், மறுபுறமோ ஆண்டவரின் பெயரால் தாங்கள் விரும்புகிறவற்றையெல்லாம் செய்யக்கூடிய மனிதர்களும் நிரம்பி இருந்தார்கள். ஆண்டவர் கற்பித்த இறையாட்சியின் மதிப்பீடுகளை ஏற்றுக் கொள்ளவோ... செயல்படுத்தவும்... அவர்கள் முன்வரவில்லை.
இயேசு அவர்களுக்கு மத்தியில் வாழ்ந்த போது ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும்? என்பதை கற்பித்தார். தான் கற்பித்ததை வாழ்ந்தும் காண்பித்தார். ஆனால் இந்த இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை தங்கள் செவியில் ஏற்று செயலில் வெளிப்படுத்துவதற்கு பதிலாக எருசலேம் மக்கள் இந்த இயேசு கிறிஸ்துவை ஒழித்துவிட எண்ணினார். ஆண்டவர் விரும்புகின்ற நல்லதொரு மாற்றத்தை உருவாக்குவதை விட மாற்றத்தை உருவாக்க விரும்பியவரை இந்த உலகத்தில் இருந்து மறைத்து விட வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட்டார்கள்.
மனம் மாறாத அவர்களின் நிலையை கண்ட இயேசு அன்று கண்ணீர் சிந்தினார். ஆண்டவர் இயேசு கிறிஸ்து நாமும் நமது வாழ்வில் நாம் தவறு இழைக்கின்ற நேரங்களில் நம்மை சரிசெய்து கொண்டு அவரின் மக்களாக வாழ்வதற்கான அழைப்பினை பல மனிதர்கள் வழியாக நமக்கு கற்பிக்கின்றார். கடவுள் கற்பித்தவைகளை கற்றுக்கண்டு அவர் விரும்பும் மனிதர்களாக இச்சமூகத்தில் நாம் பயணம் செய்ய அழைக்கப்படுகின்றோம்....
ஆண்டவரின் சன்னதியில் அமர்ந்து உள்ள நாமும் நமது வாழ்வில் இறைவன் நம்மைத் தேடி வந்து நல்வழிப்படுத்துகின்ற தருணங்களை எல்லாம் கண்டு கொண்டு ஆண்டவர் விரும்பும் மக்களாக மாறிட இறைவனது அருளை இணைந்து வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக