அன்புக்குரியவர்களை இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
கோவில் இல்லா ஊரில் குடியிருக்க ஆகாது என்பார்கள்.
ஆலயம் என்பது நமது அடையாளம்....
ஆலயம்ஆண்டவரோடு உரையாடுகின்ற இடம்...
ஆலயத்திற்கு வருவது அமைதியைத் தரும்.
ஆலயத்தில் அமர்ந்து இறைவார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை சீர்தூக்கிப் பார்க்கலாம்.
ஆலயத்தில் நடக்கின்ற வழிபாடுகளில் பக்தியோடு பங்கேற்பதன் அடிப்படையில் ஆண்டவர் இயேசுவின் பாடுகளை தியானிக்கலாம்....
ஆலயம் நமது வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்க வேண்டும்....
நேற்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு எருசலேம் தேவாலயத்தை பார்த்து கண்ணீர் சிந்தினார் என வாசித்தோம்.. இன்றைய நாளில் அந்த ஆலயத்தை சீர் படுத்தும் பணியில் இயேசு செயல்படுவதை வாசிக்க கேட்டோம்....
ஆலயம் என்பது இறை வேண்டுதலின் வீடாகக் இயேசு குறிப்பிடுகிறார்.
இந்த இறைவேண்டலில் வீட்டில் நம்பிக்கையோடு வரவும், ஆண்டவரோடு உரையாடவும், அவரிடமிருந்து ஆசிகளை பெற்றுச் செல்லவும், பெற்றவர்களை மற்றவரோடு பகிரவும் நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம்.
இதைச் செய்வதற்கு பதிலாக ஆண்டவரின் இல்லத்தை வியாபாரத்தின் இடமாகவும், ஆடம்பரத்தின் அச்சாணியாகவும், காட்சியகமாகவும் மாற்றுவதை இறைவன் பொறுத்துக் கொள்ளார் என்பதை இன்றைய வாசகங்கள் நமக்கு ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றன.
அன்று ஆலயத்தின் மகத்துவத்தை உணராதவர்களாய் தங்களின் மனம் போன போக்கில் தங்கள் விருப்பம் போல சட்டங்களை வளைத்துக் கொண்டு ஆண்டவரின் பெயரால் ஆலயத்தில் அநீதிகள் அரங்கேற காரணமாக அமைந்த மறைநூல் அறிஞர்களை ஆண்டவர் இயேசு கிறிஸ்து சாட்டையால் சாடக்கூடியவராகவும், அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து, அவர்களோடு இணைந்து ஆண்டவரின் இல்லத்தை பாழ்படுத்தியவர்களை சாட்டை கொண்டு விரட்டக் கூடியவராக இயேசு செயல்பட்டார்.
நாமும் நமது ஆலயங்களில் ஆண்டவரோடு உரையாடுவதற்கான இடம் இது என்பதனை நமது வருங்கால தலைமுறையினருக்கு சொல்லித் தர வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். இன்று வளர்ந்து வருகின்ற இளம் தலைமுறையினருக்கு ஆலயத்தின் மகத்துவம் என்பது அறியாத ஒன்றாகவே இருக்கிறது ...
ஆண்டவரின் இல்லமாகிய ஆலயத்தில் நமது குழந்தைகள், நமது உறவுகளும் அமர்ந்து ஆண்டவரோடு உரையாடி உறவை வளர்த்துக்கொள்ள நம்பிக்கையில் ஆழப்பட கற்பிக்க வேண்டியது நம்பிக்கையாளர்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமை. இக்கடமையை சிறப்புடன் செய்து ஆலயத்தின் மகத்துவத்தை அகிலத்தில் உள்ள அனைவரும் அறிந்து கொள்ள கூடிய வகையில் நமது செயல்பாடுகள் அமைய இறைவனது அருளை இன்றைய நாளில் இணைந்து வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக