இறை வார்த்தைகள் வாழ்வாகட்டும்...
இறுதி நாள் நமதாகட்டும்.....
அன்புக்குரியவர்களே! ...
மனித வாழ்க்கையை பத்து பத்தாக பிரிக்கலாம். 10 வயதில் குழந்தை
20 வயதில் இளைஞன்
30 வயது என்பது முறுக்கேறிய பருவம் (எதையாவது செய்ய வேண்டும் என்ற துடிப்பு காணப்படும்)
40 வயது என்பது பொறுப்புகளின் காலம் (எப்படியாவது நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் திருமணம் முடிக்க வேண்டும்)
50 வயது என்பது ஆசைகளின் காலம் (இன்னும் சில வருடத்தில் ஓய்வு தரப்பட்டு விடும் அதற்குள் நல்ல வீடு கட்டவேண்டும் குழந்தைகளை நல்ல நிலைக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்ற எண்ணங்கள் மேலோங்குகின்ற காலம்)
60 வயது என்பது ஓய்வின் காலம் (விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஓய்வு தரப்பட்டு விடும்)
70 வயது என்பது ஏக்கங்களின் காலம் (நல்ல நிலையில் இருந்தபோது ஓடி ஆடிய நேரங்களில் இதை இப்படி செய்திருக்கலாம் அப்படி செய்திருக்கலாம் என்ற ஏக்கங்கள் உள்ளத்தில் அரங்கேறுகின்ற காலம்)
80 வயது என்பது எதிர்பார்ப்பின் காலம் (அடுத்தவரின் துணையை எதிர்பார்த்து வயதான காலத்தில் தன்னை தன் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் கவனித்துக் கொள்ளவேண்டும் என அனைத்திற்கும் அடுத்தவரை சார்ந்திருக்கின்ற ஒரு எதிர்பார்ப்பின் காலம்)
90 வயது என்பது நடுக்கத்தின் காலம் (தள்ளாடும் வயதில் தாங்கும் பிள்ளைகளின் உதவியோடு தடுமாறி நடக்கின்ற காலம்)
100 வயது என்பது அடக்கத்தின் காலம்.
(மண்ணிலிருந்து மறைந்த நிலையில் விண்ணை நோக்கிய பயணத்திற்கான அடக்கத்தின் காலம்)
மனித வாழ்வை இவ்வாறு பத்து பத்தாக பிரித்தாளும் இன்று அறுபது தொடுவது கூட ஆச்சரியமாக பார்க்கப்படுகின்ற நிலைதான் நிலவிக் கொண்டு இருக்கின்றது.... ஆனால் இன்றைய நாள் வாசகங்கள் அனைத்துமே இறுதி நாளினை குறித்து சிந்திக்கவும் செயலாற்றவும் நமக்கு அழைப்பு தருகின்றன.
மனிதர்களாகிய நமக்கு இறைவன் தந்த விலைமதிப்பில்லாத பரிசு இந்த வாழ்வு இந்த வாழ்வை ஆண்டவர் இயேசு கிறிஸ்து விரும்புகின்ற இறையாட்சியின் மதிப்பீடுகளின் படி அமைத்துக் கொண்டு இறுதிநாளில் அவரை எதிர்கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்புமாக உள்ளது.
இன்றைய நாள் வாசகங்கள் அனைத்துமே உலக முடிவினை பற்றியும், இறுதி நாட்களைப் பற்றியும், ஆண்டவரின் இரண்டாம் வருகையைப் பற்றியும் எடுத்துரைக்கின்றன. இறந்தவர்களை நினைவு கூறுகின்ற இந்த நவம்பர் மாதத்தில் இன்றைய நாள் இறைவார்த்தைகள் அடிப்படையில் நம் எதிர்கால வாழ்வை நோக்கி சிந்திப்பது அவசியமான ஒன்றாகும்.
மண்ணில் பிறந்த ஒவ்வொருவருமே மரணத்தை சந்திப்போம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே ...மரணத்திற்கு பிறகாக ஆண்டவர் இயேசு கிறிஸ்துவால் உயிர்த்தெழுவோம் என்பதும், அன்று அவரது ஆட்சியில், மாட்சியில் பங்கு பெற நாம் வாழுகின்ற இந்த மண்ணுலக வாழ்வில் நம்மை நாம் தகுதி உள்ளவர்களாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதே இன்றைய வாசகங்கள் நமக்குத் தருகின்ற படிப்பினையாக உள்ளது.
இறுதி நாட்கள் என்பதும், உலக முடிவு என்பதும், ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகை என்பதும் உள்ளத்தில் ஒரு விதமான கலகத்தை உருவாக்கும்... காரணம் நமது வாழ்வு முறை ... இறைவன் படைத்த இந்த அழகிய உலகத்தில் நமது படைப்பின் மகத்துவத்தை உணர்ந்தவர்களாய் நான் என்ற மனநிலையோடு பயணிக்காது எப்போதும் விழிப்பாய் இருந்து ஆண்டவரை எதிர்கொள்ள நம்மை நாம் தகுதி படுத்தவேண்டும்.
எசாயா இறைவாக்கினர் 62 அதிகாரம் 3 வசனத்தில் கூறுவதுபோல
ஆண்டவரின் கையில் நீ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்; உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாய் விளங்குவாய்.
என்ற வார்த்தைகளின் படி நமது வாழ்வு அமைந்திட வேண்டும் ... அதற்கு நாம் வாழுகின்ற இச்சமூகத்தில் எப்போதும் விழிப்பாய் இருந்திட வேண்டும்.
இன்பமும் - துன்பமும், நன்மையும் - தீமையும், வெற்றியும் - தோல்வியும் நிறைந்த இவ்வுலகத்தில் நமது வாழ்வு இறைவார்த்தையின் அடிப்படையில் அமைந்திட வேண்டும்.
மண்ணில் வாழுகின்ற மனிதர்களாகிய நாம் நமது வாழ்வில் பின்பற்றுவதற்கான பலவிதமான கட்டளைகளையும் பாடங்களையும் விவிலியத்திலிருந்து பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம் .... ஆனால் அனைத்துக்கும் அடிப்படையானது
இணைச் சட்டம் 6 அதிகாரம் :5வசனம் குறிப்பிடுவதுபோல
உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக!
என்ற பழைய ஏற்பாட்டு இறை வார்த்தைக்கு மெருகேற்றிய ஆண்டவர் இயேசு கிறிஸ்து ...
மத்தேயு 22 அதிகாரம் :37- 39 வசனங்கள் வழியாக ....
"உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.
இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை.
‘உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’ என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை."
என்று குறிப்பிடுகிறார்.... ஆண்டவர் தந்த இந்த கட்டளைகளின்படி நமது வாழ்வை அமைத்துக் கொள்ளுகின்ற போது... மத்தேயு நற்செய்தி ஐந்தாம் அதிகாரத்தில் இடம்பெறுகின்ற இயேசுவின் மலைப்பொழிவு இறைவார்த்தைகள் நமது வாழ்வில் செயலாக மாறும்...
இறைவன் விரும்புவது வெறும் வார்த்தைகள் அல்ல, நமது செயல்களை...
நமது செயல்களால் இந்த சமூகத்தில் ஏழை எளிய வரை தேடிச் செல்லவும், நீதியை நிலைநாட்டவும், இரக்கமற்றவருக்கு இரக்கம் தரவும், இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்து வாழவும், இழப்பதிலும், கொடுப்பதிலும் இனிமை காணவும் உள்ளத்தில் உறுதி ஏற்போம்...
இவ்வாறு இறை வார்த்தைகளின் அடிப்படையில் நமது வாழ்வை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும் போது ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகையின் போதும் இறுதி நாளின் போதும் உலக முடிவின் போதும் நம் ஆண்டவர் இயேசு விரும்பும் மக்களாகிட முடியும் ...
எனவே அன்புக்குரியவர்களே விழிப்போடு இருந்து இறைவார்த்தையின் அடிப்படையில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய நாள் நமக்கு அழைப்பு தருகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இறுதியில் நாம் வாசித்தோம்... மாற்கு நற்செய்தி 13 அதிகாரம் 31 வசனத்தில்
"விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா" என்று...
இறைவனது வார்த்தைகளின் படி நமது வாழ்வை அமைத்துக் கொண்டு, இறுதிநாளில் அவரை எதிர்கொள்ள, நம்மை நாம் தகுதிப்படுத்திக் கொள்ள, இறைவனது அருளை இணைந்து இந்த திருப்பலி வழியாக தொடர்ந்து வேண்டும் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக