பொறுப்போடு செயல் பட்டால் புது வாழ்வு கிட்டும் ....
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
காற்றில் ஒரு மயிலிறகு பறந்து வந்தது. அந்த மயிலிறகை எடுத்த ஒரு ஓவியன் அதைக்கொண்டு ஒரு அழகிய ஓவியத்தை வரைந்தார். அதே மயில்இறகு மீண்டும் பறந்து சென்றது. அது ஒரு மருத்துவரின் கையை அடைந்தது. மருத்துவர் அதை எடுத்து காயப்பட்ட ஒருவனின் காயங்களுக்கு மருந்திட்டார். மீண்டும் அதே மயிலிறகு பறந்து சென்று ஒரு இளைஞனின் கைக்குச் சென்றது. அவன் அதில் இருக்கக்கூடிய சிலவற்றை நீக்கிவிட்டு அதைக் கொண்டு தனது காதைக் குடைய கூடியவனாக இருந்தான். ஒரே மயிலிறகு தான் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அதனை பயன்படுத்தினர். இறைவனும் இந்த மயிலிறகை போலத்தான் இந்த மனித வாழ்வை நம் அனைவருக்கும் ஒன்றாகவே தந்திருக்கின்றார். இறைவன் தந்திருக்கும் இந்த அழகிய வாழ்வில் நாம் நமது பொறுப்புக்களையும், கடமைகளையும் உணர்ந்து சிறப்புடன் செயல்படக் கூடியவர்களாக இருக்க அழைக்கப்படுகிறோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவனாக இருந்தவர், பெரிய பொறுப்புகளில் அமர வைக்கப்பட்டதை வாசிக்க கேட்டோம். நம்மிடமும் இறைவன் பலவிதமான பொறுப்புகளை கொடுத்து இருக்கிறார். இறைவன் கொடுத்துள்ள பொருப்புகளை எல்லாம் உணர்ந்துகொண்டு... நாம் வாழுகின்ற இச்சமூகத்தில் நலமான நல்ல பணிகளை அனுதினமும் முன்னெடுக்க கூடியவர்களாக, சின்னஞ்சிறிய காரியங்களில் கூட நமது பொறுப்புகளை உணர்ந்து செயல்படக் கூடியவர்களாக இருக்க இன்றைய நாள் வாசகங்கள் அழைப்பு தருகின்றன. நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்புகளை உணர்ந்து இறைவன் படைத்த இந்த அழகிய உலகத்தில் அவர் நமக்கு தந்திருக்கின்ற விலைமதிக்க முடியாத வாழ்க்கை என்ற இந்த பரிசினை நாம் பயனுள்ள விதத்தில் பயன்படுத்தி பலருக்கும் பலன் தரக்கூடிய வாழ்வை வாழ இறைவன் அருள் வேண்டி இணைவோம் இந்த திருப்பலியில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக