சனி, 6 நவம்பர், 2021

இழப்பதில் உருவாகும் உறுதியான இதயம்....(7.11.2021)

இழப்பதில் உருவாகும் உறுதியான  இதயம்....




தூய பவுல் இறையியல் கல்லூரியின் படித்துக் கொண்டிருந்த நாட்களில் கலைப் பணிக்காக கீரனூர் மாவட்டத்திலுள்ள இலட்சுமணன் பட்டி என்ற கிராமத்திற்கு சென்றிருந்தேன்.
அங்கு இருக்கக்கூடிய அனைத்து மக்களுமே மிகவும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள். அன்றாட பிழைப்புக்கு அல்லலுருபவர்கள். 

கொரோனா  தொற்று நோய் தீவிரமடைந்து கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டு, மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்  கிடந்த உச்சக்கட்ட நிலையின் போது அந்த ஊரைச் சார்ந்த இளைஞர்கள் அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கூறினார்கள். நாங்கள் ஏழைகள் தான் ஆனாலும் எங்களை காட்டிலும் பலர் இந்த ஊரடங்கு காலத்தில் உணவின்றி வாடுகிறார்கள் அவர்களுக்கு நாங்கள் உதவி செய்ய ஆவலாக இருக்கின்றோம். எங்களுக்கு வழி காட்டுங்கள் என்று கூறினார்கள். அவர்கள் சொன்னபோது இல்லாத சூழ்நிலையிலும் உங்களிடம் இருப்பதை நீங்கள் பகிர வேண்டும் என எண்ணுகிறீர்களே இதுவே மிகப் பெரிய காரியம். இந்த எண்ணம் கண்டிப்பாக ஈடேறும். எந்த வகையில் உங்களால் உதவ முடியும் என அமர்ந்து யோசியுங்கள், கலந்துரையாடுங்கள் பிறகு கூறுங்கள் என்றேன். அவர்களும் கலந்துரையாடிவிட்டு சொன்னார்கள். எங்களிடம் எப்போது கைவசம் இருப்பது எங்கள் நிலங்களில் விளைந்த நெல் மணிகள் மட்டுமே, இந்த நெல்மணிகளை அரிசிகளாக மாற்றி வைத்திருக்கின்றோம். இவைகளை நாங்கள் இல்லாதவர்களோடு பகிர விரும்புகிறோம் என்று கூறினார்கள். அதன் அடிப்படையில் அந்த ஊரில் இருக்கக்கூடிய இளைஞர்கள் அனைவரும் இணைந்து அருகாமையில் இருக்கின்ற ஊரில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு தங்களிடம் இருப்பதை பகிர்ந்து  பகிர்ந்துகொண்டார்கள்.

நமது பங்கிலும் இதுபோன்ற பகிர்வு நடந்தது என்பதை அறிவேன். ஆனால் இந்த குறிப்பிட்ட கிராம மக்களைப் பற்றி உங்களிடத்தில் பகிர்வதன் காரணம் அவர்கள் அன்றாட பிழைப்புக்கு அல்லலுருப்பவர்கள். மூன்று வீதிகளை மட்டும் கொண்ட அந்த ஊரிலே இருக்கக்கூடிய 30 குடும்பங்களை சார்ந்த இளைஞர்களும் சிறுவர்களும் இணைந்து எடுத்த முயற்சி அது. 

மிகுதியாக வைத்திருப்பவர்கள் கூட பகிர்வதற்கு யோசிக்கின்ற சூழ்நிலையில் தங்கள் பிழைப்புக்காக தங்களிடம் இருக்கக்கூடியதையும் பகிர்ந்து கொள்ளக் கூடியவர்களாக இருந்தவர்கள் இவர்கள்.  இன்று ஐந்து ரூபாய் கொடுத்தால்கூட அரைப்பக்கம் சுவரொட்டி விளம்பரம் செய்கின்ற மனிதர்களுக்கு மத்தியில் இவர்கள் மாறுபட்டவர்களாய் விளம்பரங்களை தேடாது, மனிதத் தன்மையின் அடிப்படையில் தங்கள் பசியை போலவே அடுத்தவரின் பசியை அறிந்தவர்கள். இவர்கள் மட்டுமல்ல எத்தனையோ நல்ல உள்ளங்கள் நமது பங்கியிலும் கூட  இக்கட்டான சூழ் நிலைகளின் போது பெயர் சொல்ல விரும்பாது உதவி செய்தவர்கள் பலர்.  பெயரை குறிப்பிட்டாலும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல் பட்டவர்களும் பலருண்டு. இவர்களெல்லாம் நன்றியோடு நினைத்துப் பார்க்கப் படக் கூடியவர்கள் இந்நன்னாளில். 

 இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தில் கூட தன்னுடைய பிழைப்புக்காக வைத்திருந்த அனைத்தையும் ஆண்டவரிடம் கொடுத்துவிட்டு அடுத்த வேளை உணவுக்கு ஆண்டவரை எதிர்பார்த்து இருக்கக்கூடிய பெண்மணியைப் பற்றி நாம் வாசிக்க கேட்டேம்.

தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் மறைநூல் அறிஞர்களும், தன்னிடம் இருப்பதையெல்லாம் எதையும் எதிர்பாராமல் இறைவனுக்குக் கொடுக்கும் ஏழைக் கைம்பெண்ணும் ஒருவருக்கொருவர் முரண்பட்டாலும், உண்மையான மகிழ்ச்சி எதல் அடங்கியுள்ளது என்ற கேள்விக்கு இவர்களை ஒரு புள்ளியில் இணைக்கிறது. 


இயேசு மக்களின் கவனத்தை ஈர்க்கும் வீண் முயற்சிகளில் ஈடுபடும் மறைநூல் அறிஞர்களைக் கண்டிக்கிறார். ஆனால் எந்த பலனையும் எதிர்பாராமல் தன்னிடம் உள்ளதை முழு உள்ளத்தோடு, தாராள மனத்தோடு காணிக்கை செலுத்திய கைம்பெண்ணை பாராட்டுகிறார். 


இருப்பதை பகிர்வது ஒரு ரகம்....
 இருப்பது அனைத்தையுமே பகிர்வது மற்றொரு ரகம்.... 

இந்தப் பெண்மணி இரண்டாம் ரகத்தைச் சேர்ந்தவர். தன்னுடைய பிழைப்புக்காக வைத்திருந்த அனைத்தையும் இழந்தார். இழக்கின்ற போது இழக்கின்ற மனதிற்கு உறுதி என்பது அவசியமான ஒன்றாகும். எல்லோராலும் எல்லாவற்றையும் இழந்து விட முடியாது. இருப்பதை பகிர முடியும் நம்மால். ஆனால் இருப்பது அனைத்தையும் அடுத்தவரிடம் பகிர்ந்து விட இயலாது. அப்படி பகிர வேண்டும் என்றால் அதற்கு உள்ளமானது உறுதி கொண்டதாக இருக்க வேண்டும். இந்த பெண்மணியின் உறுதியான இதயம் தான் என்று இறைவன் நமக்கு தருகின்ற செய்தியாக இருக்கின்றது.

 ஏழை கைம்பெண்ணாக இருந்த சூழ்நிலையில், கணவனால் கைவிடப்பட்ட நிலை, சமூகத்தால் ஒதுக்கப்பட்ட நிலை, கவனிப்பாரின்றி ஓரம் கட்டப்பட்ட நிலையில் இருந்தபோதும் கூட தன்னிடம் இருக்கின்ற அனைத்தையும் ஆண்டவருக்கு அர்ப்பணித்தவர். தன்னை வெறுமையாக்கினாள். ஆனால் இந்தப் பெண்மணியின் செயலைக் கண்ட இயேசு இந்த பெண்மணியால் நிறைவடைந்து, இத்தகைய  மனமே ஒவ்வொருவரிடத்திலும் உதயமாக வேண்டும் என்பதை எடுத்துரைத்தார்.

இன்றுகூட நாம் மறைபரப்பு ஞாயிறு கொண்டாடுகின்றோம் ...

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறியாத மக்களுக்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிவிக்கும் பணியில் ஈடுபடுகின்றவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய திருஅவை இந்த நாளை நமக்கு தந்திருக்கிறது ... 

 ஆண்டவர் இயேசுவின் அடிச்சுவட்டை பின்பற்றி அவர் காட்டுகின்ற பாதையில் பயணம் செய்கின்ற நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்வில் இருப்பதை பகிர்வதற்கான மனதையும், இருப்பதையே பகிர்வதற்கான நிலையையும் அடைய இறைவனது அருளை இன்றைய நாளில் இணைந்து வேண்டுவோம். 

காலங்களையும், யுகங்களையும் கடந்து நிற்கின்ற இறைவன் நமது தேவைகளை நாம் அறிவதற்கு முன்பாக அறிந்து வைத்திருக்கின்ற இறைவன், நம்மை பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையோடு, இருப்பதை பகிரவும் இருப்பது அனைத்தையும் இறைவனுக்காக, இறைவனின் பணிக்காக, இறைவனின் இறையாட்சியின் மதிப்பீடுகளின் அடிப்படையில் இழந்திட தயாராவோம். இழப்பதில் இன்பம் உண்டு அந்த இன்பத்தை நம்முடையதாக மாற்றுவோம். இறைவன் என்றும் நம்மோடு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...