இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஆண்டவரே நான் மீண்டும் பார்வை பெற வேண்டும் என்ற வார்த்தைகள் பார்வையோடு இருந்த மனிதன் பார்வையற்றவனாக மாறி இருந்தார் என்பதை வெளிப்படுத்துகின்றது.
பார்வையற்ற இந்த மனிதன் நமக்கு கற்பிக்கின்ற பாடங்கள் ஏராளம்.... குறிப்பாக சில என பார்க்கும் பொழுது...
முதலில் விழிப்புணர்வு கொண்ட மனிதராக இவர் தென்படுகிறார்.
பார்வையை இழந்த அந்தச் சூழ்நிலையில் சமூகத்தாலும் உறவுகளாலும் ஒதுக்கப்பட்ட நிலையில் ஏதோ நடக்கிறது என்று இருந்து விடாது என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் விழிப்புநிலை கொண்ட மனிதராக இவர் இருக்கிறார். அதன் அடையாளமே இது என்ன? என்ற கேள்வி எழுப்பி நடப்பவற்றை அறிந்து கொள்ள முயலுகிறார். நாம் வாழுகின்ற சமூகத்திலும் நம்மைச் சுற்றி நடப்பவைகளை குறித்து விழிப்போடு இருப்பதற்கு இந்த மனிதன் இன்றைய நாளில் நமக்கு பாடம் கற்பிக்கிறார்.
இரண்டாவது இயேசுவைப் பற்றிய ஆழமான புரிதல் கொண்டவராக தென்படுகிறார்.
உடன் இருந்த சீடர்கள் கூட அவரை முழுமையாக அறிந்து கொள்ளாத நிலையில் இந்த பார்வையற்ற மனிதர் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை தாவீதின் மகன் என அழைத்து இவரே உண்மையான மெசியா என்பதை எடுத்துரைக்க கூடிய மனிதராக தென்படுகிறார். இவர் இடத்தில் காணப்பட்ட இறைவன் மீதான ஆழமான புரிதல் நமது பொருளாக மாற வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
மூன்றாவதாக நம்பிக்கை கொண்ட மனிதனாக இவர் தென்படுகிறார்.
பார்வையற்ற மனிதன் தன்னை இயேசுவால் மீண்டும் பார்வை பெற வைக்க முடியும் என்று ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தான். எனவேதான் ஆண்டவர் இயேசுவின் இடத்தில் நான் மீண்டும் பார்வை பெற வேண்டும் என்று கேட்டு பார்வையை பெற்றுக் கொண்டான். நாம் பின்பற்றுகின்ற இயேசுவின் மீது ஆழமான நம்பிக்கை நம்மிடத்தில் இருக்க வேண்டும் என்பதற்கு இந்த பார்வையற்ற மனிதர் சான்றாக அமைகிறார்.
பார்வையற்ற மனிதன் நமக்கு கற்பிக்கின்ற பாடங்கள் ஏராளமாக இருந்தாலும் நாம் வாழுகின்ற இவ்வுலகத்தில் பல நேரங்களில் நாம் பார்க்கிறோம். ஆனால் பார்வையற்ற மனிதர்களாக இருக்கிறோம். இதற்கு சிறந்த உதாரணமாக அமைவதே இன்றைய முதல் வாசகம்.. ஆண்டவரின் பராமரிப்பால் அடிமைத்தனத்தில் இருந்து மீட்கப்பட்ட இஸ்ரயேல் மக்கள் அவரிடம் இருந்து விலகிச் சென்று தங்கள் விருப்பம் போல செயல்படுவதை இன்றைய நாள் முதல் வாசகத்தில் வாசிக்க கேட்போம் .
தங்களை பகலில் மேக தூணாகவும் இரவில் நெருப்பு தூணாகவும் இருந்து பாதுகாத்து அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வந்த ஆண்டவரை மறந்தவர்களாக பார்வையற்ற நிலையில் இருந்தவர்கள் பலர் ஆனால் அவர்களுள் சிலர் தங்களை பாதுகாத்து பராமரித்து வந்த ஆண்டவரை அறிந்தவர்களாக அவரோடு செய்த உடன்படிக்கையை பின்பற்றுபவர்களாக இருந்தார்கள் என வாசிக்க கேட்டோம்.
நாம் வாழுகின்ற இவ்வுலகத்தில் பல நேரங்களில் ஆண்டவரின் மீது ஆழமான நம்பிக்கையும், நம்மைச் சுற்றி நடக்கின்ற நிகழ்வுகளை பற்றிய விழிப்புணர்வும், ஆண்டவரின் திட்டங்களை குறித்த ஆழமான புரிதலும் நமக்குள் வளர்த்துக் கொண்டு எப்போதும் பார்வை பெற்ற மனிதனாக இச்சமூகத்தில் வலம்வர இறைவனது அருளை இணைந்து வேண்டுகோள் இந்த திருப்பலியில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக