மனித நேயத்தோடு ...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் நூற்றுவர் தலைவன், தனது பணியாளனுக்காக, ஆண்டவர் இயேசுவை நாடி வந்ததை குறித்து வாசிக்கக் கேட்டோம். நூற்றுவர் தலைவன் என்றால் தனக்கு கீழ் பணி புரிவதற்கு 100 பேரை கொண்டிருக்கக்கூடிய இந்த நூற்றுவர் தலைவன், தனது பணியாளர்களின் நலனில் அக்கறை கொள்ள கூடிய மனிதனாக இருந்தார். எனவேதான் நோயுற்றிருந்த தனது பணியாளனுக்காக ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை தேடி செல்லக்கூடிய மனிதராக தென்பட்டார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் தெளிவாக எடுத்துரைக்கிறது.
பொதுவாக நாம் வாழுகின்ற சமூகத்தில் நமது தேவைகளை முன்னிறுத்தி நமது குடும்ப உறவுகளின் தேவைகளை மட்டுமே முன்னிறுத்தி பயணம் செய்கின்ற நாம், நமது தேவைகளை முன்னிறுத்துவதை விட அடுத்தவரின் தேவைகளை முன்னிறுத்தவும் அழைக்கப்படுகிறோம்.
ஒரு மனிதன் ஒரு சமூகத்தில் பசியால் வாடுகிறான் என்றால் அது அவன் செய்த குற்றமல்ல. உன்னையும் என்னையும் போன்றவர்கள் அவனை பராமரிக்காததன் விளைவு, என அன்னைத் தெரசாள் குறிப்பிடுகின்றார்.
தனக்குக் கீழ் பணி புரிபவர்களை தன் விருப்பம் போல வேலை வாங்கக் கூடிய அதிகாரம் நூற்றுவர் தலைவரிடம் இருந்தபோதும் கூட, தனக்கு கீழ் வேலை பெறுகின்றவனது உடல் நலனின் மீது அக்கறை கொண்ட மனித நேயமிக்க மனிதனாக இந்த நூற்றுவர் தலைவனை நாம் பார்க்க இயலும். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வருகையை எதிர் நோக்கி நம்மை நாம் தயாரித்துக் கொண்டு இருக்கக்கூடிய இந்த நாட்களில் இன்றைய நாள் வாசகங்கள் நமக்குத் தருகின்ற செய்தி எது என பார்க்கின்ற போது, நாம் மனித நேயம் கொண்ட மனிதர்களாக வாழவேண்டும் என்பதே இறைவன் இன்றைய நாளில் நமக்குத் தருகின்ற செய்தியாக உள்ளது.
தன்னுடன் வேலை பார்த்த தனது பணியாளனின் மீது அக்கறை கொண்டிருந்த நூற்றுவர் தலைவனைப் போல, நாமும் நாம் வாழுகின்ற சமூகத்தில் துன்பத்தில் வாடுகிறவர்களையும் நம்மை விட வலிமை குறைந்தவர்களையும் சமூகத்தில் காணுகின்ற போது, அவர்களின் நலனை முன்னிறுத்தியவர்களாய் அவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்க கூடிய மனிதர்களாய் வாழவும், அவர்கள் நலனில் நாம் மகிழவும் இறைவன் இன்றைய நாளில் அழைப்பு தருகின்றார். இறைவன் தருகின்ற அழைப்பை உணர்ந்து கொண்டவர்களாக, நாம் வாழ்கின்ற இச்சமூகத்தில் அருகாமையில் இருக்கக்கூடிய மனிதர்களை மனிதநேயத்தோடு நோக்கவும், அவர்களின் நலனை நமது நலனாக எண்ணி செயல்படவும், இன்றைய நாளில் இறைவன் அழைப்பு தருகின்றார். இறைவனின் அழைப்பிற்கு செவி கொடுத்து நமது உள்ளத்தில் மாற்றத்தை
ஏற்படுத்திக் கொண்டு பயணிக்க இறையருளை வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக