உள்ளத்தை மந்தமடைய செய்வது எவை?
அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் வழியாக என் சிந்தனைகளை உங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
உள்ளம் மந்தம் அடைவதற்கு மூன்று காரணங்களை இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துரைக்கிறது.
முதலாவது குடிவெறி
இரண்டாவது களியாட்டம்
மூன்றாவது இவ்வுலக வாழ்வுகுரிய கவலைகள்...
இவை மூன்றுமே ஒரு மனிதனின் வாழ்வையும், உள்ளத்தையும் மந்தம் அடையச் செய்கின்றன. ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மூன்று நிலைகளில் இருந்தும் விடுபட்டவர்களாக வாழ அழைப்பு தருகின்றார்.
நம்மை மந்தமடையச் செய்வதற்கான முதல் குறியீடாக ஆண்டவர் உரைப்பது குடிவெறி....
மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உடலுக்கும் கேடு என்பது அனைவரும் அறிந்த ஒன்றே... கேடு என அறிந்த போதும் அதை தேடுபவர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்பத்திலும் குடிப்பது துன்பத்திலும் குடிப்பது என குடிப்பது மட்டுமே வாழ்க்கையாக மாறிவிட்டது . இந்நிலை மாற்றப்பட வேண்டிய ஒன்றாகும்.
அதுபோலவே உள்ளத்தை மந்தம் அடையச்செய்யும் இரண்டாவது குறியீடாக ஆண்டவர் உரைப்பது களியாட்டம்....
நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் இன்று களியாட்டங்கள் பல தலை தூக்க தொடங்கியுள்ளன...
ஆடம்பரமான வாழ்வு என்ற பெயரில், அனுதினமும் தொலைக்காட்சி தொடரும், உல்லாச பயணங்களுமே நமது வாழ்நாளில் பெரும்பான்மையான நேரங்களில் எடுத்துக் கொள்கின்றன. இந்த நாகரீக வளர்ச்சி நயமாக நம்மை மந்தம் அடையச் செய்வதற்கான முயற்சி என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
உள்ளத்தை மந்தம் அடையச்செய்யும் மூன்றாவது குறியீடாக ஆண்டவர் உரைப்பது வாழ்க்கை பற்றிய கவலைகள்.... கவலைகள் இல்லாத மனிதன் உலகில் இல்லை. எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒன்றைப் பற்றி கவலைப்படுகிறோம். கவலைப்படுவது தவறில்லை கவலைப்பட்டுக் கொண்டே இருப்பது தவறாகும்.
எதிர்காலத்தை எண்ணி நிகழ்காலத்தை இழப்பவர்கள் பலர்... மண்ணில் வாழுகின்ற ஒவ்வொரு நொடியும் மகிழ்வோடு நிம்மதியோடு மந்தமடையாது வாழ நாம் அழைக்கப்படுகிறோம். இதுவே இன்றைய நாள் நமக்குத் தருகின்ற பாடமாக உள்ளது.
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை குறித்து சிந்திக்கின்ற இந்நாட்களில் இந்த
குடிவெறி
களியாட்டம்
உலகக் கவலைகள்
இவை மூன்றையும் தவிர்த்து இறைவன் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாய் இறுதிநாளில் அவரை எதிர் கொண்டு செல்ல நம்மை நாம் தகுதிப்படுத்திக் கொண்டு அவரது பாதையில் பயணம் செய்ய இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்போம் ....
இறைவன் தம் ஆசியால் நம்மை வழி நடத்துவாராக ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக