கிறிஸ்து அரசர் பெருவிழா
நம் தாய்த்திரு அவையானது கிறிஸ்து அரசர் பெருவிழாவை கொண்டாட நமக்கு அழைப்பு தருகிறது...
இன்றைய நாள் வாசகங்கள் அனைத்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே உண்மையான உலகின் அரசர் என்பதை எடுத்துரைக்கின்றன.
அதுபோலவே இன்றைய நாளின் நற்செய்தி வாசகமானது அன்றைய காலகட்டத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து உண்மையான அரசாக இருப்பாரோ என்று அஞ்சிய உரோமை அரச அதிகாரிகளை குறித்தது தெளிவுபடுத்துகின்றது.
பொதுவாக ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை தந்தையாக, தாயாக உறவாக, நண்பராக, நல்லாசிரியராக பார்த்துப் பழகிய நமக்கு இன்று திருஅவையானது உலகத்தின் அரசராக பார்க்க அழைப்பு தருகின்றது.
அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே எனக் கூறுவார்கள்.
அரசன் என்று சொன்னாலே அதிகாரத்தின் உச்சம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.....
உலகையே ஆள வேண்டும் என்ற
அலெக்சாண்டரின் கல்லறை வாசகங்கள் .... " இந்த உலகம் முழுவதுமே போதாது என்று சொன்னவனுக்கு , இந்தக் கல்லறைக் குழி போதுமானதாக ஆகிவிட்டது
இந்த உலகம் அகிலத்தையே ஆளவேண்டும் என்ற அரசனையும் பார்த்திருக்கிறது. அடுத்தவர் நலனில் அக்கறை கொள்ளக்கூடிய அரசனையும் பார்த்திருக்கிறது.
நீதியை நிலை நாட்ட தன் மகனுக்கு மரண தண்டனை விதித்த அரசர்களும் உண்டு... தன் மக்களின் மகிழ்வே தன் மகிழ்வு என எண்ணிய அரசர்களும் இவ்வுலகத்தில் உண்டு... அது போல அரசனாக இருப்பதற்கு ஆசைகொண்டு பல அட்டூழியங்களை செய்தவர்களும் இவ்வுலகத்தில் உண்டு. அரசன் என்ற பதவியை அடைந்த பிறகு அதில் உள்ள அனைவரையும் தனக்கு கீழ் மண்டியிட வைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களும் வரலாற்றில் உண்டு..
இன்று நாம் நினைவு கூறுகின்ற இந்த
கிறிஸ்து அரசர் பெருவிழா உருவான பின்னணியும் இதை ஒட்டியதே...
முதலாம் உலகப் போருக்குப் பின்னும் ஆட்சியையும் அதிகாரத்தையும் அடிப்படையாகக்கொண்டு அடுத்தவர் நாட்டை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட்ட அரசர்களுக்கு புத்தி புகட்டும் வண்ணமாக அப்போதைய திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் அவர்கள் 1925 ஆம் ஆண்டு கிறிஸ்துவே உலகத்தின் அரசர் என அறிவித்து இந்த நாளை கிறிஸ்து அரசர் பெருவிழாவாகக் கொண்டாட வழி வகுத்துத் தந்தவர்.
அகிலத்தில் நானே சிறந்தவன், அனைவரும் எனக்கு கட்டுப்பட்டவர்கள் என்ற மமதையோடு செயல்பட்ட அரசருக்கு திருஅவை தந்த பதில் உலகத்தின் அரசர் இந்த இயேசுகிறிஸ்துவே ...
அகிலத்திற்கு அரசராக, ஆட்சி அதிகாரத்தில் விளங்குகின்றவர்கள் அனைவரும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பின்பற்றிய நல்லதொரு தலைவராக இச்சமூகத்தில் உதயமாக வேண்டும் என்பதே இன்றைய நாள் நமக்கு தருகின்ற பாடமாக உள்ளது.
ஆட்சியும் அதிகாரமும் தன் கையில் இருந்தால் தான் விரும்புவதை எல்லாம் செய்ய முடியும் என்ற மமதையில் பலநேரங்களில் நம்மை மனிதர்களாக செயல்பட விடாது தடுக்கிறது. ஆனால் ஆட்சியும் அதிகாரமும் கிடைக்கின்ற போது அதனை பயன்படுத்தி மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதும், மக்களின் நலனை முன்னிறுத்துவதும் அரசனின் தலையாய பணியாக இருத்தல்வேண்டும்.
ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் வாழ்ந்த போது அன்பையும் அடிப்படையாக கொண்டு சமத்துவத்தையும் சமூக நீதியையும் தனது அனைத்து பணிகளிலும் முன் நிறுத்தினார். இந்த இயேசுவை பின்தொடர கண்டு நாமும் அவரைப் போல அன்பை அடிப்படையாகக் கொண்டு சமத்துவத்தையும் சமூக நீதியையும் நமது பணிகளில் முன்னிறுத்த கடமைப்பட்டுள்ளோம்.
ஆனால் இன்றைய எதார்த்த நிலை என்ன என சிந்திக்கின்ற போது ஆட்சியும் அதிகாரமும் கையில் வருகின்றபோது அனைவரும் நமது அடிமைகள் என்ற எண்ணமே மேலோங்கி காணப்படுகின்றது ... ஆட்சியையும் அதிகாரத்தையும் தக்க வைப்பதற்கான பல பொய்கள் அரங்கேற்றம் செய்யப்படுகின்றன. பல நாடகங்கள் நடந்தேறுகின்றன. பொது நலனை முன்னிறுத்தி ஆட்சியையும் அதிகாரத்தையும் பெற்று தன்னலத்தை மட்டும் முன்னிறுத்தக் கூடிய மனிதர்களாக இந்த தரணியில் பலரும் உதயமாகிக் கொண்டே இருக்கின்றார்கள். ஆனால் அகிலத்தின் அரசராக விளங்கிய ஆண்டவர் இயேசு கிறிஸ்து மக்களுக்காக தன் இன்னுயிரைத் தியாகம் செய்தார். மனிதனை மனிதன் மதித்து வாழ வேண்டும் என கற்பித்தார். கற்பித்ததை செயல்வடிவ மாக்கினார். இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி அவரின் பாதையில் வழி நடக்கக்கூடிய நாமும் ஒவ்வொரு நாளும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் போல வாழ அழைக்கப்படுகிறோம்
தலைமைத்துவம் என்பதும் ஆட்சி அதிகாரம் என்பதும் அடுத்தவரை அடக்கியாள வேண்டும் என்பதற்காக அல்ல.... மாறாக அன்பு சமூகத்தை உருவாக்குவதற்கான தளம் என்பதை உணர்ந்து கொண்டவர்களாய் நாம் வாழுகின்ற காலத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் போல நாம் ஒவ்வொருவரும் நல்ல தலைவர்களாக இச்சமூகத்தில் உருவாகிட நல்லெண்ணங்களை நமதாக்குவோம். அந்த எண்ணங்களை நமது வாழ்வாக மாற்றுவோம்...
மனிதனாக பிறந்த நம் ஒவ்வொருவருக்குமே இந்த சமூகத்தில் பொறுப்புகள் இருக்கின்றன. குடும்பத்தில் நல்லதொரு குடும்ப தலைவனாக,
சகோதரர்களுக்கு நல்ல ஒரு சகோதரனாக...
நண்பர்களுக்கு நல்லதொரு நண்பராக...
உறவுகளுக்கு நல்ல ஒரு உறவினராக இருக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் நம் அனைவருக்கும் உண்டு. அதனை நாம் திறம்பட செய்ய.... நல்ல தலைவர்களாக இயேசுவைப் போல இச்சமூகத்தில் விளங்கிட.... இன்றைய நாள் நமக்கு அழைப்பு தருகிறது.
கிறிஸ்து அரசர் பெருவிழாவை கொண்டாடும் இந்த நல்ல நாளில் நாமும் நம் தலைவனாம் இயேசுவைப் பின்பற்றிய நல்ல தலைவர்களாக ஆட்சி அதிகாரங்களைக் கொண்டு அன்பால் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் நல்ல தலைவர்களாக மாறிட இறைவனது அருளை திருப்பலி வழியாக தொடர்ந்து வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக