சனி, 22 ஜூன், 2019

இயேசுவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா

இறைவன் இயேசுவில் அன்புக்குரிய இறைமக்களே இன்று மனித வாழ்வில் பசி என்பது இல்லையென்றால் பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்பார்கள். புசியை நீக்க அன்றாட உணவு அவசியமாகிறது. ஆரை சாண் வயிற்றுக்காக தான் மனிதன் அனுதினமும் அலைந்து திரிகிறான். மனிதன் பாடுபட்டு உழைத்தாலும் அதனால் பயனேன்றுமில்லை என்கிறார் சபை உரையாளர். இன்று நம் தாய்த்திரு அவையானது ஆண்டவர் இயேசுவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா கொண்டாடுகிறது. அதாவது ஆண்டவர் இயேசு கிறிஸ்து சிலுவையில் நமக்காக தன் உடலையும், இரத்தத்தையும் கையளித்ததை நினைவுகூறும் வகையில் அவர் ஏற்படுத்திய நற்கருணை அருட்சாதனத்தை இன்று நாம் நினைவு கூறுகிறோம். இயேசு கிறிஸ்து இதனை நாம் அனுதினமும் நினைவுகூற அறிவுறுத்தியதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார். இயேசு காட்டிக் கொடுக்கப்பட்ட அந்த இரவில் அப்பத்தை எடுத்து கடவுளுக்கு நன்றி செலுத்தி அதைப்பிட்டு இது உங்களுக்கான என் உடல் இதை என் நினைவாகச் செய்யுங்கள் என்றார். அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள் என்றார். என்று அன்று இயேசு கூறிய வார்த்தைகளை புனித பவுலடியார் கொரிந்து நகர மக்களுக்கு  எடுத்துக்கூறி நற்கருணை அருள் சாதனத்தினை கொண்டாடுகிறார். இன்றைய முதல் வாசகத்தில் அன்று நாம் பயன் படுத்தும் கோதுமை அப்பமும், திராட்சை இரசமும் பலங்காலமாகவே இறைவனுக்கு என்று பயன் படுத்தப்பட்டு வந்துள்ளது என்பதை இன்றையமுதல் வாசகம் நமக்கு விளக்குகிறது. இதையே மெல்கிசேதேக்கு அப்பமும் இரசமும் வைத்திருந்தார்கள். அவர் உன்னத கடவுளின் அர்ச்சகராக இருந்தார். என குழுக்களுக்குள் முதன்மையானவரான மெல்கிசேதேக்கு பற்றி இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டோம். இன்று திருப்பலியில் பயன்படுத்தப்படும் இந்த அப்பத்தையும் இரசத்தையும் இயேசு கூறிய வார்த்தைகளை கூறி ஒரு குருவானவர் செபிக்கும்போது அந்த அப்பமும், திராட்சை இரசமும் ஆண்டவரின் உடலாகவும், இரத்தமாகவும் மாறுகிறது. இதுவே நம் திருஅவையின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையை ஏற்று அதை பின்பற்றி வாழக் கூடியவர்களாகிய நாம் இதன் உண்மையான நோக்கம் என்ன என்பதை அறிந்திட முயலுதல் வேண்டும். இயேசு எவ்வாறு தன் உயிரை தவறு ஏதும் செய்யாத போதும் நமக்காக கையளித்தாரோ அதுபோல நாம் ஒருவர் மற்றவருக்கு நம்மால் இயன்றதை கொடுத்து உதவ வேண்டும் என்பதையே இன்றைய நாளில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றாக திருஅவை கூறுகிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டிருப்போம் பெருந்திரளான மக்கள் ஆண்டவர் இயேசுவின் போதனைகளை கேட்பதற்காக கூடி வந்தார்கள் மாலை நேரமான போது அவர்களை இயேசு அனுப்பிவிட சீடர்கள் எண்ணினார்கள். ஆனால், அவர்கள் பசியாய் இருப்பதை உணர்ந்து அவர்களுக்கு உணவு கொடுக்குமாறு தம் சீடர்களிடம் இயேசு கூறியபோது அவர்கள் தங்களிடத்தில் எதுவுமில்லை இவர்களுக்கு உணவு வாங்க நம்மால் இயலாது என்று பதில் தருகிறார்கள். ஆனால், இயேசு உங்களிடம் என்ன இருக்கிறது அதை கொண்டு வாருங்கள் என்று கூறியபோது கூட்டத்தில் இருந்த ஒருவர் தன்னிடம்  இருந்த ஐந்து அப்பத்தையும் இரண்டும் இணையும் கொண்டு சென்று இயேசுவிடம் கொடுத்தார். அதை கொடுப்பதற்கான மனம் அவரிடம் இருந்தது. அத்தகைய மனதினை கொண்டவர்களாக நாமும் வாழ வேண்டும் என்பதையே இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. நம்மிடம் இருப்பதை நாம் பிறரிடம் பகிரும் பொழுது நம் தேவையை இறைவன் பார்த்துக் கொள்வார், நமக்கு தேவையானதை அவர் தருவார் என்ற நம்பிக்கையோடு நாம் இருத்தல் வேண்டும். .நம் அனைவருக்கும் தெரியும் புனித அன்னை தெரசா அவர்கள் அனுதினமும் ஆண்டவர் இயேசுவின் முன்பு அமர்ந்து தங்களுக்கு தேவையானவற்றை கேட்பார்கள் ஆனால் மகிழ்ச்சியோடு அந்த அன்னை தெரசா அவர்கள் கூறுவார் இதுநாள் வரை நாங்கள் பட்டினியில் வாடியது இல்லை ஏனெனில் நாங்கள் கேட்கும் போதெல்லாம் இறைவன் யார் மூலமாவது எங்களுக்கும் எங்களிடையே இருக்கக்கூடிய குழந்தைகளுக்கும் உணவு தந்து கொண்டிருக்கிறார் என்று புனித அன்னை தெரசா அவர்கள் கூறுவார். அன்னை தெராசா அவர்கள் தன் வாழ்வில் நடந்த ஒரு மகிழ்ச்சியான நிகழ்வினை ஒரு முறை பகிர்ந்து கொண்டார். அதாவது ஒருமுறை அன்னை தெரசா அவர்கள் தனது சக சகோதரர்களிடம் பக்கத்தில் இருக்கக்கூடிய கிராமத்திற்குச் சென்று அங்கு உள்ள ஏழைகளுக்கு நம்மிடம் இருப்பதை கொடுத்து வாருங்கள் எனக்கூறி அனுப்பினாராம். அப்போது அங்கு சென்ற சகோதரி ஒருவர் தன்னிடம் இருந்த சிறிதளவு உணவை இன்னொரு கஷ்டப்படக் கூடிய ஒரு பெண்மணியிடம் கொடுத்தார். அந்த பெண்மணியோ அதை வாங்கிக்கொண்டு இதோ வந்து விடுகிறேன் என்று கூறி விட்டு சிறிது நேரம் கழித்து வந்தார். அம்மா எங்கே சென்று இருந்தீர்கள்? ஏன் இவ்வளவு நேரம்? என்று கேள்வி எழுப்பிய போது அந்த தாயார் கூறினாராம் நான் எனது பசியைத் தாங்கிக் கொள்வேன் ஆனால் எனது பக்கத்து தெருவில் ஒரு வயதான பாட்டி இருக்கிறார்கள் அவர்கள் பசியால் மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார.; எனவே தான் அவருக்கு இதில் பாதியை கொடுத்து விட்டு வந்து விடலாம் என்று சென்றேன் என்று கூறினாராம். அந்த சகோதரி இந்த நிகழ்வை அன்னை தெரசாவிடம் கூறியபோது அன்னை தெரசாவின் கண்கள் கலங்கியது. இதுவல்லவா மனிதநேயம் தான் பசியாக இருந்தாலும் பரவாயில்லை மற்றவர் வயிறார உணவு உண்ண வேண்டும் என்ற எண்ணம் அல்லவா நம்மிடத்தில் என்று இருக்க வேண்டும் இதையே இன்றைய நற்செய்தி வாசகங்கள் நமக்கு கற்பிக்கின்றன. ஆண்டவரின் திருவுடல், திருரத்த பெருவிழாவை கொண்டாட கூடிய நாம் ஒவ்வொருவரும் இந்த நாளில் இந்த கருத்துக்களை மனதில் உள்வாங்கியவர்களாக சிந்திப்போம.; தொடர்ந்து  இறைவனது ஆசியை பெற முயல்வோம். நம்மிலிருந்து நம் வழியாக ஒருவர் மற்றவர் உதவி பெற நல்ல மனம் கொண்டவர்களாக வாழ வரம் வேண்டி தொடர்ந்து செபிப்போம்;.

என்றும் அன்புடன் உங்கள்
ஜே. சகாயராஜ்
இரண்டாம் ஆண்டு இறையியல்
தூய பவுல் இறையியல் கல்லூரி
அம்மாபேட்டை
திருச்சி மறைமாவட்டம்










1 கருத்து:

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...