“நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் மூலம் கடவுளுக்கு ஏற்புடையவராகியுள்ளோம்.”
நாம் ஓரே கடவுளை ஏற்று நம்பக்கூடியவர்கள். ஆனால், நமது கடவுள் மூன்று தன்மைகளைக் கொண்டு மூவராய் இருக்கிறார். அவரை தந்தை, மகன், தூய ஆவியார் என்போம். தந்தையாம் கடவுள் உலகத்தை படைத்தார். அவரது மகன் இயேசு கிறிஸ்து நம்மை பாவத்திலிருந்து மீட்பதற்காக மண்ணுலகிற்கு வந்து நமக்காக இறந்தார். மூன்றாம் நபராகிய தூய ஆவியார் நம்மை வழி நடத்த கூடியவர். இவர்கள் எத்தகைய தன்மையைக் கொண்டிருந்தாலும் இவர்களின் நோக்கம் ஒன்றே. அது அகிலத்திற்கும் நன்மையை செய்வது மட்டுமே. தொடக்கத்தில் தந்தையாம் இறைவன் உலகைப் படைத்த போது, தான் படைத்துள்ள அனைத்தும் மனிதனுக்க பயன்படும், அவை அவனுக்கு நல்லது எனக்கண்டார். இதையே தொடக்கநூல் அதிகாரம் 1 இறைவசனம் 31-இல் நாம் வாசிக்கலாம். “கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன.” இவ்வாறு கடவுள் தாம் உருவாக்கய அனைத்துமே மனிதனுக்கு பயன்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் உருவாக்கினார் என்பதை விவிலியத்தின் மூலம் நாம் அறியலாம். அதுபோலவே இயேசுவும் மத்தேயு நற்செய்தி 26 ஆம் அதிகாரம் 39 ஆவது வசனத்தில் “என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்;ணம் என்னைவிட்டு அகலட்டும். ஆனாலும், என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப்படியே நிகழட்டும்” என்று செபித்தார். இம்மண்ணுலகு நலம் பெற வேண்டும் என்பதற்காக தன் இன்னுயிரை ஈந்தார். அவ்வாரே தூய ஆவியாரும், இயேசுவின் இறப்புக்கு பிறகு அச்சமுற்று அறையில் அடைந்து கிடந்த இயேசுவின் சீடர்கள் மீது இறங்கி வந்து அவர்கள் ஆண்டவரைப் பற்றி அச்சமின்றி அறிவிக்கச் செய்தவர். தூய ஆவியானவரை பெற்றுக் கொண்ட சீடர்கள் துணிவு கொண்டவர்களாக, உண்மையை எடுத்துரைக்கும் ஆண்டவர் இயேசுவின் சாட்சிகளாக மாறினார்கள் என்பதை திருத்தூதர் பணிகள் 2 - ஆம்; அதிகாரத்தில் நாம் வாசிக்கலாம். இயேசு எப்போதும் நம்முடன் இருப்பதற்க்காக தூய ஆவியானவர் நமக்கு தந்துள்ளார். தந்தையிடமிருந்தும், மகனாகிய இயேசுவிடமிருந்து வரக்கூடிய இந்த தூய ஆவியானவர் நமது வாழ்வில் எப்பொழுதும் நம்முடன் இருந்து நாம் செய்ய வேண்டியதை நமக்குள் இருந்து கற்பிக்கிறார். அவர் நமக்கு கற்பிக்கும் வழியில் நாம் செல்லும் பொழுது அது உண்மையின் வழி நோக்கியதாக அமையும். ஏனெனில் அவர் நமக்கு கற்பிக்க கூடிய அனைத்தும் ஆண்டவர் இயேசுவிடம் இருந்து கேட்டவை. இதையே இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு கூறுகிறார் “உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியானவர் உங்களை உண்மையின் வழி நோக்கி அழைத்துச் செல்வார். அவர் தாமாக எதையும் பேச மாட்டார். தாம் கடவுளிடமிருந்து கேட்பதையே போசுவார்” என்று குறிப்பிடுகிறார். உண்மையை நோக்கிய வழி என்பது யாருக்கும் துயரம் விளைவிக்காதது. உதாரணமாக மது அருந்துவதை எடுத்துக் கொள்ளலாம். மது குடிப்பவரின் மூளையை மந்தம் அடையச் செய்து அவருக்கும் துன்பத்தை தருகிறது. மேலும் அவரைச் சுற்றியுள்ளவர்கள் அனைவருக்கும் அது துயரத்தை தருகிறது. இதனை உணர்ந்துதான் அந்த மதுபாட்டிலின் மீதே எழுதப்பட்டுள்ளது “மது உடலுக்கும் நாட்டுக்கும் கேடு” என்று, மதுவைப் போலவே கோபப்படுவதும் நாம் கோபத்தை யார் மீது காட்டுகிறோமே அது அவர்களையும் பாதிக்கும், கோபத்தைக் காட்டக்கூடிய நம்மையும் பாதிக்கும். இதுப்போல பல உதாரணங்களை குறிப்பிட்டுக் கொண்டே போகலாம். எந்த ஒரு செயலானது பிறருக்கும், நமக்கும் துன்பத்தை தருகிறதோ அது உண்மையை நோக்கிய செயல் அல்ல, அது தூய ஆவியாரால் நமக்கு வெளிப்படுத்தப்படுவதும் இல்லை. நல்லதை செய்ய தூண்டக்கூடிய நமது மனக்குரலே தூய ஆவியாரின் குரல். மூன்று தன்மைகளைக் கொண்ட ஒரே கடவுளிடம் இருந்து நாம் கற்கும் பாடம் அனைவருக்கும் நல்லது செய்வதே. நல்லதை செய்யத் தூண்டும் தூய ஆவியாரின் குரலுக்கு செவிகொடுத்தவர்களாய் அனுதினமும் நல்லது செய்யத் தூண்டும் மனக்குரலை கடவுளின் குரலாக ஏற்று வாழ நீங்களும் நானும் அழைக்கப்படுகிறோம்.
இதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் கூறுகிறார் “நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் மூலமே கடவுளுக்கு ஏற்புடையவராகிறோம்” என்று. நம்மை நல்லது செய்ய தூண்டும் நமது மனகுரலே தூய ஆவியானவரின் குரல் என்பதை எப்போது நாம் உணர்ந்து கொள்கிறோமோ அப்பொழுது நாமும் கடவுளுக்கு ஏற்புடையவராக மாறுகிறோம். தூய அவியார் என்பவர் ஞானத்தை அருள்பவர். மனிதர்கள் எப்படி ஞானத்தை தேடுகிறார்களே அதுப் போலவே நாமும் அனுதின வாழ்வில் தூய ஆவியாரின் துணையை தேட வேண்டும் என்கிறது இன்றைய முதல் வாசகம். இந்த தூய ஆவியானவரே நமக்கு தேவையான அனைத்தையும் நமக்கு வெளிப்படுத்துவார் எனவே இன்றைய வழிபாட்டில் மூவொரு இறைவன் மீது முழுமையான விசுவாசம் கொண்டவர்களாக வாழவும், எவ்வாறு தந்தை, மகன், தூய ஆவியார் அகிலத்தின் நன்மைக்காகவே அனைத்தையும் செய்கிறார்களோ அதுபோலவே நாமும் அகிலத்தின் நன்மைக்காக நமது வாழ்வை அமைத்துக் கொண்டு, உண்மையின் வழி நடந்து ஒருவர் மற்றவருக்காக வாழ தொடர்ந்து செபிப்போம்.
என்றும் அன்புடன் உங்கள்
ஜே. சகாயராஜ்
இரண்டாம் ஆண்டு இறையியல்
தூய பவுல் இறையியல் கல்லூரி
அம்மாபேட்டை
திருச்சி மறைமாவட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக