இயேசுவுடன் உடனிருத்த தோமையார்
“உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைச்சாற்றுங்கள்” (மாற்கு 16: 15) என்ற ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு ஏற்ப, ஐயம் தவிர்த்து ஆண்டவர் இயேசுவின் மீது பற்றுக் கொண்டு இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதற்காக ஆசியா கண்டத்தில் உள்ள இந்தியாவின் தமிழகப் பகுதிக்கு வந்த முதல் திருத்தூதர் புனித தோமையார் அவர்கள். இவர் இயேசுவின் பணியை உலகிற்கு அறிவித்து தனது இன்னுயிரையும் இழந்து இயேசுவின் சாட்சியாக இன்றும் நம் மண்ணில் மனம் வீசிக்கொண்டிருக்க கூடியவர். இத்தகைய சிறப்புமிக்க ஒருவரான புனித தோமையாரின் நினைவு நாளை இன்று நம் தாய் திருஅவையானது நினைவு கூறுகிறது. இந்த நேரத்தில் அவரின் பெயரை தாங்கி இருக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் நாம விழா வாழ்த்துக்களை உரித்தாக்கி மகிழ்கிறேன். தோமையார் என்ற பெயரைக் கூறிய உடனேயே நமக்குள் தோன்றுவது என்ன? அவர் சந்தேகப்படக் கூடியவர், இவர் இயேசுவின் சீடர், இவர் கூறிய வார்த்தைகள், இவர் இந்தியாவிற்கு வந்த முதல் திருத்தூதர், இவர் மறைபரப்பு பணியை செய்தவர் என பலவாறு நாம் கூறிக்கொண்டே செல்லலாம். ஆனால் இன்று புனித தோமையாரின் வாழ்வில் இருந்து நாம் நமது சிந்தனைக்கு எடுத்துக் கொண்ட தலைப்பு “இயேசுவுடன் உடனிருத்த தோமையார்”. இயேசு மண்ணில் வாழ்ந்த போது பலவிதமான மக்கள் அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள். உதாரணமாக அவர் கூறுவதெல்லாம் கேட்டுக்கொண்டே அவருக்கு முன்னும் அவருக்குப் பின்னும் ஆக ஓடிச் சென்ற மக்கள் கூட்டம் ஒருபுறம். மற்றொருபுறம் இவர் மீது எப்படி குற்றத்தை சுமத்தலாம். எங்கு இவரை எப்படி சிக்க வைக்கலாம் என்று, இயேசுவைக் கொலை செய்யும் நோக்கத்தோடு அவருடன் தொடர்ந்து வந்தது ஒரு கூட்டம். இன்னும் ஒருபுறமோ இயேசு பெயர் சொல்லி அழைக்க அவரை பின்தொடர்ந்து, அவரோடு தங்கி நற்செய்திப் பணியை அகிலத்திற்கு அறிவிப்பதற்காக அவரால் பயிற்ச்சிக்கப்பட்ட கூட்டம். இக்கூட்டத்தில் ஒருவர் தான் நாம் இன்று நினைவு கூறக் கூடிய நமது புனித தோமையார் அவர்கள். இயேசு மண்ணில் வாழ்ந்த போது உண்மையை எடுத்துரைத்தார். சமூகத்தில் அநீதி இழைக்கப்படும் பொழுது அந்த அநீதியை எதிர்த்தார், சட்டத்தால் மனிதன் அடிமைப்படுத்த போது சட்டத்தை விட மனிதன் என்பவனே முதன்மையாணவன் என்ற கருத்தை ஆழமாக பதிவு செய்தார். இயேசு என்ற இந்த ஒரு மனிதனை கொலை செய்வதற்கு ஒரு கூட்டம் தேடுகிறது. இவரை சிக்க வைக்க ஒரு கூட்டம்; சூழ்ச்சிகள் பல செய்கிறார்கள் என்பதை எல்லாம் அறிந்து இருந்தபோதும் அந்த இயேசுவுக்கு துணை நிற்பதற்காக அவர் அழைத்தார் என்ற ஒரே காரணத்திற்காக ஏன்? எதற்கு? என்ற கேள்விகளை எழுப்பாமல் அழைத்தது இயேசு என்பதை மட்டும் மனதில் இருத்திக் கொண்டு அவர் பின்னே சென்று அவரோடு பயணித்தவர் நாம் இன்று நினைவு கூறக்கூடியவர் புனித தோமையார் அவர்கள். சமூகத்தின் அநீதிகளை தட்டி கேட்டுக் கொண்டே சென்ற இயேசுவை நானும் பின் தொடர்ந்து வருகிறேன் என்று கூறி அவரோடு தொடர்ந்து பயணித்து. இயேசுiவைப் போல தானும் ஒருநாள் உயிர் விட வேண்டிய சூழல் உருவாகும் என்பதை அறிந்தவராய் நம் புனிதர் இயேசுவுடன் இருந்தார். இயேசு கிறிஸ்து இம்மண்ணில் ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை கற்பித்து அதன்படி வாழ்ந்து காட்டினார். அவரின் அடிச்சுவட்டை பின்பற்றி தொடர்ந்து பயணித்தவர் நாம் நினைவு கூறும் புனித தோமையார் அவர்கள். இயேசுவை கைதுச் செய்யப்பட்ட போது அவரை விட்டுவிட்டு அஞ்சி ஓடியவர்தான் இவரும். ஆனால், திரும்பி வந்தார் இயேசுவின் உயிர்ப்பால் மனமாற்றம் பெற்றார். “நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்” (யோவான் 11: 16) என்று அறிக்கையிட்டவர் அதை நிறைவும் செய்தார். இயேசுவுடன் உடனிருந்த தோமையார் இன்று நாம் இச்சமூகத்தில் எந்த விதமான மக்களுடன் உடனிருக்கிறோம் என்பதை சிந்திக்க நம்மை அழைப்பு தருகிறார். இன்று நாம் வாழும் சமூகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நமது நாட்டில் நாம் வாழும் நமது சமூகத்தில் நடந்தேறக் கூடிய அநீதிகள் ஏராளம், அதேசமயம் அந்த அநீதிகளை எதிர்க்கும் வகையில் உதயமான மனிதர்களும் ஏராளம். இதற்கு சிறந்த உதாரணமாக மெரினா புரட்சி, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு, ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்பு அலைகள் என பலவற்றை நாம் பலவற்றைக் கூறிக்கொண்டே செல்லலாம். உண்மைக்கும் உரிமைக்கும் இடையேயான போராட்டத்தில் உயிர் போவது உறுதி என தெரிந்த நிலையிலும் பலர் இன்று இயேசுவாகவே உதயமாகி உண்மைக்கும், பொய்மைக்கும் மனித வாழ்வுக்கும் எதிரானவற்றை எதிர்த்த போது அவர்களில் பலர் உயிர் நீத்தார்கள், இரத்தம் சிந்தி பலர் காயங்களோடு இன்றும் நம் முன் வலம் வருகிறார்கள். இத்தகைய மனிதர்கள் இன்று உலகில் வலம் வந்து கொண்டிருக்கும் பொழுது இவர்களில் யாரிடம் நாம் நமது உடனிருப்பை கொடுத்தோம் என்பதை சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம். தோமையார் என்றால் உடனே நம் நினைவுக்கு வருவது சந்தேகம்... சந்தேகம்... சந்தேகம்... என்பது தான். இவர் சந்தேகித்தார் என்பது உண்மைதான் ஆனால், அந்த சந்தேகத்தினை எதற்கும் அஞ்சாது துணிவோடு அறிக்கையிட்டவர் இவர். நாங்கள் ஆண்டவரை கண்டோம் என அனைத்து சீடர்களும் கூறியபோது “நான் ஆவரடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்ப மாட்டேன்” என்று துணிவுடன் கூறியவர் இவர் இதனையே இன்றைய நற்செய்தி வாசகங்கள் (யோவான் 20: 25) நமக்கு தெளிவுபடுத்திக் காட்டுகின்றன. அவரிடமிருந்து துணிவு இன்று நம்மில் எத்தனை நபரிடம் இருக்கிறது என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறோம். உயிர்த்த ஆண்டவர் அவர் முன் தோன்றி “இதோ என் கைகள்! உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்” என்றபோது “என் ஆண்டவரே நீரே என் கடவுள்” (யோவான் 20: 27-28) என்று கூறிய ஆண்டவரிடத்தில் சரணடைந்தவர் நம் புனிதர் புனித தோமையார். ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளின் படி தன் வாழ்வை அமைத்துக் கொண்டு நற்செய்தியைப் பறைசாற்ற நம் இந்திய நாட்டிற்கு வந்து வேத சாட்சியாக மரித்தவர் இவர். அகிலத்தில் சிலரின் கல்லறைகள் மீது தான் ஆலயங்கள் எழுப்பப்பட்டுள்ளன அவர்களுள் நாம் இன்று நினைவு கூறும் புனித தோமையாரின் கல்லறையின் மீது தமிழ்நாட்டில் சென்னையில் ஒரு ஆலயமானது நிறுவப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. “நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்” (யோவான் 11: 16) என்ற எழுச்சி வார்த்தைகளின் சொந்தக்காரரான புனித தோமையார் இயேசுவைப் பற்றிய நற்செய்தி பணியை பல இடங்கள் அறிவித்து இயேசுவுக்காக உயிர் துறந்து தம்முடைய வார்த்தைகளுக்கு செயல் வடிவம் கொடுத்தவர். புனித தோமையாரை நினைவுகூரும் நாம் வெறும் விழாவாக இன்றைய நாளில் அவரை பற்றி அறிந்து கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவரை போல அகிலத்தின் நன்மைக்கு உரிமைக்கும் எதிராக உருவாகும் அநீதிகளை எதிர்க்கக்கூடிய இயேசுவாகவும், தேவையில் இருப்பவர்களுக்கு நண்பர்களாகவும், நீதியை நிலைநாட்ட முயலும் தோழர்களுக்கு உறுதுணையாகவும் இருந்து இயேசுவுடன் இருந்த தோமையாரைப் போல நாமும் இவர்களுடன் நமது உடனிருப்பை வழங்கக்கூடிய நல்ல மனிதர்களாக நமது வாழ்வு அமைந்திட அருள் வேண்டி தொடர்ந்து இந்த வழிபாட்டில் பக்தியோடு இணைவோம்....
என்றும் அன்புடன் உங்கள்
ஜே. சகாயராஜ்
இரண்டாம் ஆண்டு இறையியல்
தூய பவுல் இறையியல் கல்லூரி
அம்மாபேட்டை
திருச்சி மறைமாவட்டம்
Sagayam! St. Thomas was always with Jesus! You have very beautifully explained the faith and the courage of him! Nice and eager to think about the courage of him! Well done!
பதிலளிநீக்கு