பிரான்ஸ் நாட்டில் புரட்சி நடந்த நேரத்தில் அறிஞன் ஒருவன் ஒரு புதிய மதத்தை தோற்றுவிக்க நினைத்தான். நற்செய்தியிலிருந்து சில கருத்துக்களையும், பிளேட்டோ அரிஸ்டாட்டில் போன்ற தத்துவ ஞானிகளின் அறிவுரைகளில் சிலவற்றையும் சேர்த்துக்கொண்டு ஒரு புதிய மதத்தை படைக்க முயற்சித்தான் . ஆனால் அவனது மறை பரவவில்லை. ஒருநாள் அவன் தன் நண்பனிடம், நண்பனே நான் ஒரு அறிஞன் நான் ஏற்படுத்தியிருக்கும் மறையும் அறிவுஜீவிகளாக திகழ்ந்த தத்துவஞானிகளின் தத்துவ கோட்டை. ஆனால் மக்கள் இந்த மதத்தை ஏற்றுக் கொள்ள தயங்குகிறார்கள். ஆனால் மீன் பிடித்து வாழ்ந்த 12 பேரை தனது சீடர்களாக கொண்ட இயேசுவின் வேதம் மட்டும் எப்படி இப்படி பரவியுள்ளது? பரவுகிறது? என்றான். அதற்கு அந்த நண்பன் நீயும் இயேசுவைப்போல மக்களுக்காக சிலுவையில் உயிர் விட்டால், நீயும் அவரைப்போல் இறந்தும் உயிர் வாழ்வாய் என்றான்.
"போதனை இல்லாத சாதனையை உலகம் ஏற்றுக்கொள்ளும். ஆனால் சாதனை இல்லாத போதனையை உலகம் ஏற்றுக்கொள்ளாது".
ஒன்றுமில்லாமையில் இருந்தும், வெறுமையில் இருந்தும் இறைவன் இவ்வுலகைப் படைத்த போது, தனது வார்த்தையால் இவ்வுலகில் அனைத்து இயற்கையின் அதிசயங்களையும் ஒவ்வொன்றாக படைத்தார்.
ஒளியின் எழுச்சியில்
இருள் வீழ்ச்சியடைந்தது.
புவியின் எழுச்சியில் ஒன்றுமில்லாமை வீழ்ச்சியடைந்தது.
விதையின் வீழ்ச்சி
விருட்சத்தின் எழுச்சி.
மலரின் வீழ்ச்சி
கனியின் எழுச்சி.
சருகின் வீழ்ச்சி
தளிரின் எழுச்சி.
சோர்வின் வீழ்ச்சி
உற்சாகத்தின் எழுச்சி.
இன்றைய நற்செய்தி வாசகத்திலும், அன்னை மரியின் துயரங்களைப் பற்றி அறிகிறோம். அவரது மனிதத் தன்மையின் வேதனைகளின் வீழ்ச்சியையும் அவரது கீழ்ப்படிதலால், இறை அருளின் எழுச்சியையும் நாம் காண்கிறோம்.
அன்னை மரியாள் தனது மகனின் பொதுவாழ்வு பயணத்தில் ஏற்பட்ட இக்கட்டு இடைஞ்சல்கள், கடினங்கள் அனைத்திலும் இறை வல்லமையை முழுமையாய் உணர்ந்து இறை வல்லமைக்கு கீழ்ப்படிந்து இருந்த காரணத்தினால் இன்று அந்த இறைவனுக்கே தாயானாள்.
நம் அனைவருக்கும் தாயாக நம் இயேசு ஆண்டவரால் கொடுக்கப்பட்டுள்ளார். தனது துயரங்களை வென்றெடுத்த அன்னை அன்று பெந்தகோஸ்து நாளில் சீடர்களோடு உடனிருந்து உறுதிப்படுத்தியது போல இன்றும் நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நம்மோடு பயணிக்கின்றார். நம்மோடு உடன் இருக்கின்றார், என்பதை உணர்வோம்.
நமது போராட்டங்களை, நமது சோதனைகளை அன்னை மரியின் துணையால் வென்றெடுப்போம். இயேசுவின் உண்மை சீடர்களாய் வாழ்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக