வெள்ளி, 11 செப்டம்பர், 2020

நீங்கள் உண்மை சீடர் தானா...? (12.09.2020)


நீங்கள் உண்மை சீடர் தானா?

ஒரு நல்ல ஆரம்பம் நல்லதொரு முடிவை தரும் என்பார்கள். அதுபோலவே ஒரு மரத்தின் கனியை கொண்டு, அந்த கனியின் சுவையின் தன்மை கொண்டு, அந்த மரம் எத்தகையது என்பதை நாம் அறியலாம். 
அவ்வாறே ஒரு மனிதர் பேசும் வார்த்தைகளைக் கொண்டே அவரைப் பற்றி நாம் அறிந்து கொள்ளலாம். உள்ளத்தின் நிறைவை வாய் பேசும் என்கிறது விவிலியம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். 

நல்ல எண்ணங்கள் நிறைந்தவர் நற்காரியங்களை பற்றி பேசுவார். தீய எண்ணங்கள் நிறைந்தவர் பிறரின் வீழ்ச்சியையும், தீமையையும் பற்றி பேசிக் கொண்டிருப்பார். நமது உள்ளத்திற்கு நன்மை  தீமையை பகுத்து ஆராய்கின்ற, நன்மையை சேர்ந்து கொள்கின்ற தன்மை உண்டு. அதுவே நமது மனசாட்சி. நமது மனசாட்சியின் வழியாக தூய ஆவியார் நம்முடன் உறவாடுகின்றார். உலக மாய கவர்ச்சிகளின் வழியாக மனிதன் ஈர்க்கப்படுகிறான்.

கனியை கொண்டே மரம் அறியப்படும் என்பதற்கேற்ப நமது செயல்களை, வார்த்தைகளைக் கொண்டே நம்மை இந்த சமூகம் அறிந்து கொள்ளும். நமது மனதிற்கு பிடித்தவர்களை நாம் சந்திக்கும் பொழுது இனிய வார்த்தைகளைப் பேசி அவர்களை மகிழ்ச்சி படுத்துகிறோம். நமக்கு பிடிக்காத அவர்களை சந்திக்கும் பொழுது கடினமான வார்த்தைகளால் அவர்களை காயப்படுத்துகிறோம். இவ்வாறாக நன்மை செய்கின்ற ஆற்றலும், தீமை செய்கின்ற ஆற்றலும் நமக்குள்ளேயே இருக்கின்றன. 

நல்லவர் தமது உள்ளமாகிய கருவூலத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக் கொடுப்பார் என்பதற்கேற்ப நல்லவர்கள் தமது சிந்தையில் தொடங்கி, தமது வாழ்க்கை முழுவதும் நன்மையையே வெளிப்படுத்திக் கொண்டிருப்பார். 

நான் ஆண்டவரின் அடிமை, உமது சொற்படியே எனக்கு ஆகட்டும் என்ற தனது வார்த்தையால் உலகிற்கே  மீட்பை கொணர்ந்தார் அன்னைமரியாள். அவர் சொல்வதெல்லாம் செய்யுங்கள் என்ற வார்த்தைகளால் எளியோரின் துயரத்தை போக்கியவர் அன்னை மரியாள்.

வார்த்தைகள் வாழவும் வைக்கும் அல்லது வாள் போல வெட்டும் என்பார்கள். 

நாம் நமது இனிய சொற்களால், ஆறுதலின் சொற்களால், வல்லமையின் சொற்களால், பிறரை வாழ வைக்கின்றோமா? அல்லது நமது சந்தேக வார்த்தைகளால் கோபத்தின் உச்சத்தில் பிறரை காயப்படுத்துகின்றோமா? என்பதை சிந்திக்க இன்றைய நாள் வாசகங்கள் நம்மை அழைக்கின்றன.

நீங்கள் இயேசுவின்  உண்மை சீடர் தானா?
உண்மை சீடர்களின் எண்ணம் நேர்மறையானதாக இருக்கும். அவ்வெண்ணம் அவர்களின் சொல்லிலும், செயலிலும் வெளிப்பட்டு, அவர்கள் நல்ல கனி தரக்கூடிய நல்ல மரங்களாக இச்சமூகத்தில் அடையாளம் காணப்படுவார்கள்.  

பாரதியார் கூறுவார் ...

"மனதில் உறுதி வேண்டும்.
வாக்கினி லேயினிமை வேண்டும். நினைவு நல்லது வேண்டும். நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்.
களவு மெய்ப்பட வேண்டும்.
கைவசமாவது விரைவில் வேண்டும். தனமும் இன்பமும் வேண்டும்.
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்.
காரியத்தி அறுதி வேண்டும்.
பெண் விடுதலை வேண்டும்.
பெரியகடவுள் காக்க வேண்டும்.
மண் பயனுற வேண்டும்.
வானகமிங்கு தென்பட வேண்டும்.
உண்மை நின்றிட வேண்டி
ஓம் ஓம் ஓம் ஓம் (இறைவா)".

என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப நல்ல எண்ணங்களின் அடிப்படையில்  நம் வாழ்வை அமைத்துக் கொண்டு, நமது சொல்லிலும், செயலிலும் நன்மை தரக்கூடிய வார்த்தைகளை பகிர,
நமது தாயாம் மரியாளை பின்பற்றி வாழ்வளிக்கும் வார்த்தைகளால் பிறரின் வாழ்வில் ஒளியேற்றுவோம். இயேசுவின் உண்மை சீடர்களாய் வாழ்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...