கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார்: காலத்தைப் பற்றிய உணர்வை மனிதருக்குத் தந்திருக்கிறார். ஆயினும், கடவுள் தொடக்க முதல் இறுதிவரை செய்துவருவதைக் கண்டறிய மனிதரால் இயலாது.
சபை உரையாளர் 3:11
கிறிஸ்து இயேசுவில் பிரியமானவர்களே!
கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாக செய்கின்றார் என்று இன்றைய முதல் வாசகம் வழியாக நமக்கு வெளிப்படுத்தப்படுகிறது.
இயேசுவின் சீடர்கள்அனுப்பப்பட்ட தமது பணி முடிந்து திரும்பிய போது ஏரோது அரசன் குழம்பினான் என்று அறிந்தோம். சீடர்கள் பல்வேறு வல்ல செயல்களையும், நோய்களை குணப்படுத்தியதையும் ஏரோது அறிந்தபோது இவர் யார்? என்று இயேசுவைப் பற்றி அறிய முற்படுகிறான். அவரைத் தேடவும் அவரை காணவும் வாய்ப்பு தேடுகின்றான். இறையாட்சியின் பயணத்திட்டப் பாதையில் இயேசு பயணித்துக்கொண்டிருந்த வேளையில் இயேசு தந்தையின் திருவுளத்தை தேடுவதை "அவர் தனியே ஜெபித்து கொண்டிருந்தார்" என்பதிலிருந்து நாம் காண்கிறோம்.
மக்களின் புகழ்ச்சிக்கும் ஏரோது அரசனின் உயர் மரியாதை உள்ள தேடலுக்கும் இடம் கொடுக்காமல் தந்தையின் திருவுளத்தை தேடியவராக ஜெபித்துக் கொண்டிருக்கிறார். தன்னைப் போலவே தன் சீடர்களும் இறை திருவுளத்தை தேடுபவர்களாக இருக்கிறார்களா? என்பதை அறிய இயேசு மக்கள் தன்னை யார் என்று சொல்கிறார்கள்? என்று சீடர்களிடம் கேட்கிறார்.
மக்களோடு தங்கி மக்களுக்கு பணியாற்றிய சீடர்கள், இயேசுவின் வல்லமையை மக்கள் புகழ்ந்து பேசியதை அவரிடம் கூறுகிறார்கள். அதில் மகிழ்ச்சியும் காண்கிறார்கள்.
ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்? என்று இயேசு கேட்டபொழுது, புனித பேதுரு இறைவெளிப்பாட்டை உணர்ந்தவராக, நீர் மெசியா வாழும் கடவுளின் மகன் என்று உரைக்கிறார்.
மக்களின் புகழ்ச்சிகளையும், ஏரோதின் தேடலையும் விட இறைவனின் திருவுளமே மேலானது, மேன்மையானது என்பதை உணர்ந்தவராக இயேசுவின் வார்த்தைகள் வெளிப்படுகின்றன.
மிகவும் விரும்பத்தக்கதான புகழ்ச்சியின் பாதையை விட
இறை திருவுளம் வெளிப்படுத்தும் கடினமான பாதை மேன்மையானது என்பதை இயேசு நன்றாக அறிந்திருக்கிறார்.
"உளி விழும் என்று அழும் கற்கள் சிலை ஆவதில்லை" என்பதற்கேற்ப தான் சந்திக்கவிருக்கின்ற சிலுவைப் பாடுகள் வழியாக தன்னையே இறைவனிடம் ஒப்புக் கொடுக்கிறார், தந்தை இறைவனின் மாட்சியில் இணைந்திட.
இயேசுவின் சீடர்களாகிய நாமும் அன்றாட வாழ்வில் சந்திக்கின்ற துன்பங்கள், சோதனைகள், இயலாமைகள், உடல்நல குறைபாடுகள் மத்தியிலும் கூட, அனைத்திற்கும் மேலாக இறையாட்சியை தேடுபவர்களாக, இறை அன்பின் சீடர்களாக இறையாட்சியின் வித்துக்களாக, மக்கள் பணியில் வேரூன்றி இறையாட்சியை மலரச் செய்வோம்!
அனைத்திற்கும் மேலாக இறையாட்சியை தேடுவோம்! இயேசு ஆண்டவரை தேடுவோம்!
பதிலளிநீக்குஅவரின் ஆற்றல் பெற்ற மக்களாக வாழ்வோம்!