"பழமை + அன்பு = புதுமை
புதுமை + அன்பு = பழமை"
"குடும்பம் என்பது பழமை மற்றும் புதுமையின் சங்கமம்".
இங்கு தந்தை மகன் இடையே கருத்து வேறுபாடுகள் காணப்படலாம். ஆனால் மகிழ்விக்கும், அனுபவத்திற்கும் பஞ்சம் இருக்காது.
இன்பத்தில் சிரிப்பவன் அதிர்ஷ்டசாலி
துன்பத்தில் சிரிப்பவன் ஞானி
கற்பனையில் சிரிப்பவன் கவிஞன்
கண்டவுடன் சிரிப்பவன் காரியவாதி
தெரிந்து சிரிப்பவன் நடிகன்
தெரியாமல் சிரிப்பவன் ஏமாளி
ஓடவிட்டு சிரிப்பவன் வஞ்சகன்
உட்கார்ந்து சிரிப்பவன் சோம்பேறி
உழைப்பில், பிறர் உயர்வு சிரிப்பவன் மனிதன்
என்பார்கள். மகனின் உயர்வில் பெருமை கொள்வதும், பேரனின் மழலையை வார்த்தைக்கு அடிபணிவதும் குடும்பத்தில் தினமும் நிகழும் அன்றாட செயல்.
மணமகன் மண விருந்தினரோடு இருக்கும்போது அவர்களை நோன்பிருக்க செய்யலாமா ?என்பதை பெற்றோர் பிள்ளைகளோடு ஒப்பிட்டு பொருள் கொள்ளலாம்.
குடும்பத்தில் மூத்தவர்கள் அதாவது முதியவர்கள் உள்ள வரை பிள்ளைகள் பெற்றோராக மாறினாலும் அன்புக்கும், அரவணைப்புக்கும் பஞ்சம் இருக்காது. இதற்காக ஏங்கி எங்கும் அவர்கள் தவிக்க வேண்டிய நிலை ஏற்படாது என்பது முற்றிலும் மறுக்கவியலாத உண்மை.
பல பிள்ளைகளைப் பெற்றாலும் பெற்றோருக்குப் பிள்ளைகள் எப்போதும் குழந்தைகள் தான். பிள்ளைகள் பல பிள்ளைகள் பெற்று பெற்றோராக மாறினாலும், தங்களுடைய பெற்றோரோடு இருக்கும்போது அவர்கள் வருந்த வேண்டிய, தங்களை வருத்திக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட வேண்டிய அவசியமில்லை.
புதிய ஆடையில் பழைய துணியைக் கொண்டு ஓட்டு போட இயலாது என்ற விவிலிய வார்த்தைகளை இவ்வாறு பொருள் கொண்டு பார்க்கலாம்.
புதியது என்பதை இப்போது உள்ள இளம் தலைமுறையினரையும் (பிள்ளைகள்), பழையது என்பதை நம்முடைய பெற்றோரையும் (முதுமை அடைந்தவர்கள்) என எடுத்துக்கொள்ளலாம்.
புதுமைக்கும், பழமைக்கும் எப்போதும் பல சிக்கல்கள் உண்டு.
புதுமை எப்போதும் ஏதேனும் ஆபத்தில் சென்று விடுமோ? என்ற அச்ச உணர்வு பழமைக்கு இருக்கும்.
பழமையில் இருப்பவர்கள் புதியதை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள் என்ற எண்ணம் புதுமைக்கு இருக்கும்.
ஆனால் ஆழமாக சிந்தித்து பார்க்கும் பொழுது இரண்டுக்கும் இடையே இருக்கக்கூடிய சிக்கல் என்பது அன்பின் வெளிப்பாடாக அமையும்.
புதுமையை விரும்பக்கூடிய ஒவ்வொருவரும், வளரக்கூடிய நாட்களில் பலவிதமான வளர்ச்சிகளின் மத்தியில் ஒவ்வொரு நாளும் புதிதாக வளருகிறார்கள். ஆனால் பழமை என நாம் கருதக்கூடிய மூத்தவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் தாங்கள் கற்றதையும், தாங்கள் பெற்றுக்கொண்ட அனுபவத்தின் அடிப்படையில் புதுமைக்கு வழிகாட்ட வேண்டும் என எண்ணுவார்கள். எனவே புதியவர்கள் செய்வதை அவர்கள் மறுப்பது போலத் தோன்றினாலும், அதில் அன்பு அடங்கியுள்ளது. புதியதும், பழையதும் இணைத்து ஒட்டு போடுவது என்பது இயலாத காரியம் தான் இருந்தாலும், இரண்டிலும் அன்பின் வெளிப்பாடு இருப்பதை உணரலாம்.
பழமை, புதுமை என நாம் கருதக்கூடிய ஒவ்வொன்றும் தனித்துவம் வாய்ந்தது. தனித்தனி உயிர்கள். தனித்தனி கருத்து சிந்தனைகளை கொண்டவர்கள். தன் வழிக்கு மற்றவர்கள் வரவேண்டும் என எண்ணுவதை இருவரும் கைவிட வேண்டும். அதாவது புதியததோடு பழையது ஒத்துப்போக வேண்டும், பழையதை புதியதோடு ஒத்துப் போகச் செய்ய வேண்டும் என்ற சிந்தனைகள் முற்றிலும் ஒவ்வொருவரிடமிருந்தும் அகற்றப்பட வேண்டும். இதனை மனதில் கொண்டு குடும்பத்தில் உள்ள மூத்தவர்களை அன்போடும், அரவணைப்போடும் ஏற்றுக் கொண்டு, அவர்களை மதிக்கவும், நேசிக்கவும் புதியவர்களாகிய இன்றைய இளம் தலைமுறையினர் முயல வேண்டும். அதுபோலவே மூத்தவர்களாகிய முதியவர்களும் வளரக்கூடிய இந்த நவீன உலகத்தில் பலவிதமான வளர்ச்சிகளின் மத்தியில் வளர்ந்து வரக்கூடிய தங்களின் பிள்ளைகளின் கருத்துக்கும், சிந்தனைக்கும் முக்கியத்துவம் தரக்கூடியவர்களாக இச்சமூகத்தில் இணைந்து வளரவேண்டும்.
மணமகனோடு இருக்கக்கூடிய மன வீட்டாரைப் போல, பழமையும், புதுமையும் இணைந்து விளங்கும் சங்கமமான குடும்பத்தில் அன்போடும், விட்டுக் கொடுக்கக் கூடிய எண்ணத்தோடும், ஒருவர் ஒருவருடைய கருத்துக்களை மதிக்கக் கூடியவர்களாக இச்சமூகத்தில் வலம் வந்து எப்போதும் மகிழ்வோடு வாழ ஆண்டவர் இயேசுவை பின் தொடர்வோம்.
பழமை யும் + அன்பும் (இணைந்தால்) = புதுமை மகிழும்.
புதுமையும் + அன்பும் (இணைந்தால்) = பழமை மகிழும்".
"அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாள்..."
Superb bro.. 👏👏👍
பதிலளிநீக்கு