வியாழன், 10 செப்டம்பர், 2020

உன்னை நீ முதலில் சரி செய்... (11.09.2020)


"நீ நடந்து வந்த பாதையை திரும்பிப் பார்த்தால் உன் மனச்சான்று உனக்கு கை தட்ட வேண்டும்". 

குடியின் தீமைகளைப் பற்றியும், அவற்றினால் விளையும் பாதிப்புகள் பற்றியும் ஒரு நபர் கூட்டமொன்றில் விளக்கிக் கொண்டிருந்தார். இந்த நகரில் மிகப் பெரிய பணக்காரன் யார்? மது கடை உரிமையாளரே. இந்த நகரத்தில் உள்ள மிகப்பெரிய வீடு எது? அது யாருடையது? மதுக்கடை வைத்திருப்பவருடையது. உங்கள் பணம் எல்லாம் மதுக்கடை வைத்திருக்க கூடியவரிடமே செல்கிறது என்று உணர்வுபூர்வமாக பேசிக்கொண்டிருந்தார்.  

கூட்டம் முடிந்ததும் ஒரு தம்பதியினர் அவரை சந்தித்து அவருக்கு நன்றி செலுத்தினார்கள். அவரது பேச்சு தங்களுக்கு ஒரு சில தெளிவுகளை தந்திருப்பதாக கூறினர். அப்பொழுது பேச்சாளர் என் பேச்சு உங்களுக்கு தெளிவைத் தந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. இனி மது கடை பக்கம் செல்லாதீர்கள் என்றார்.  

அதற்கு அந்த தம்பதியினர் நீங்கள் எங்களை தவறாக புரிந்து கொண்டு விட்டீர்கள். நாங்கள் நன்றி சொல்லியதன் காரணம் என்ன தெரியுமா? இருவருமே கடந்த சில நாட்களாக எந்த தொழிலில் இறங்குவது என்றும், எந்த தொழில் இலாபகரமானது என்று சிந்தித்துக் கொண்டிருந்தோம். அது பற்றிய ஒரு தெளிவு எங்களிடம் இல்லை. ஆனால் உங்கள் பேச்சைக் கேட்ட போது மது கடை ஆரம்பிப்பது சிறந்த இலாபத்தை கொண்டுவரும் என்பதை புரிந்து கொண்டோம் என்றார்கள்.  


நாம் வாழக்கூடிய உலகில் மற்றவர்கள் என்ன செல்ல விரும்புகிறார்கள் என்பதை முற்றிலுமாக ஒதுக்கி வைத்துவிட்டு, நமக்கு எது வசதியாக இருக்கிறதோ அதை மட்டும் எடுத்துக் கொண்டு செயல்படக் கூடியவர்கள் அதிகம்.  அதுபோலவே நம்மிடம் இருக்கக்கூடிய குறைகளை சரி செய்து கொள்வதை விடுத்து விட்டு, அடுத்தவரின் குறைகளை மிகைப்படுத்தி குற்றம்சாட்டி அவர்கள் தங்கள் வாழ்க்கையை சரிசெய்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்க கூடியவர்களும் அதிகம்.  

ஆனால் இன்றைய நற்செய்தி வாசகத்தில் வழியாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து, நம்மை நாம் சரி செய்து கொள்ள அழைப்பு விடுக்கின்றார். நம்மை நாம் சரி செய்து கொள்ளாமல் அடுத்தவரின் குறைகளை சரிசெய்ய முயற்சிக்கும் செயல் பயனற்றது  என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் சிந்தனைகளை ஒவ்வொருவரும் அவரவர் இருக்கக்கூடிய தளத்திலிருந்து ஒப்பிட்டு பார்க்க அழைக்கப்படுகிறோம்.  உதாரணமாக
என்னுடைய குருமட பயிற்சி வாழ்வில் இன்றைய வாசகத்தை நான் ஒப்பிட்டு பார்க்கும்பொழுது,  விவிலியம் கூறுகிறது: 
குருவை விட சீடர் உயர்ந்தவர் அல்ல என்று. ஆனால் பல நேரங்களில் என்னுடைய பயிற்சி வாழ்வில் பயிற்சி அளிக்கக்கூடிய வழிகாட்டிகள் என் மீது கொண்ட அக்கறையின் காரணமாக சிலவற்றை என் வாழ்வில் நான் மாற்றிக்கொள்ள அறிவுறுத்துவார்கள்.  அப்படி அறிவுறுத்தப்படும் பொழுதெல்லாம் எனக்கு தேவையானதை மட்டும் நான் எடுத்துக் கொண்டு செல்கின்றேன். பல நேரங்களில் என் வளர்ச்சிக்காக அவர்கள் கூறக்கூடிய செயல்களை ஏற்றுக்கொள்ளாமலும் என்னை நான் சரி செய்து கொள்ளாமலும் எனக்கு அறிவுரை கூற கூடியவர்களின் மீது குற்றத்தை கண்டுபிடித்து அவர்களின் செயல்களை குற்றம்சாட்ட கூடியவனாக பலநேரங்களில் செயல்பட்டு இருகிறேன். என்னை நான் சரி செய்து கொள்ளாமல் அடுத்தவர்களின் மீது குற்றம் சாட்ட கூடிய செயலை இறைவன் வெருக்கிறார் என்பதை இன்றைய வாசகங்கள் வழியாக நாம் உணரலாம்.

நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில்  அடுத்தவரின் குறைகளை சுட்டிக்காட்டி, அவர்களை குற்றவாளிகள் என்று கூறிக்கொண்டே நமது வாழ்க்கையை நகர்த்துவதைவிட, நம்மை நாம், நமது செயல்களை சீர்தூக்கிப் பார்த்து நம்மை நாம் சரி செய்து கொண்டு, ஆண்டவர் இயேசுவின் உண்மை சீடர்களாக அவரை பின்தொடர வேண்டியது அவசியமாகிறது. இத்தகைய செயல்பாட்டையே இறைவன் நம்மிடம் விரும்புகிறார்.  

இயேசு மண்ணில் வாழ்ந்த காலத்தில் குற்றவாளி என விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை இயேசுவின் முன்பு நிறுத்தியபோது, உங்களில் குற்றம் இல்லாதவர் முதல் கல் எறியட்டும் என கூறினார். இயேசுவின் வார்த்தையை கேட்டு அங்கிருந்த பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் அவ்விடத்தை விட்டு சென்றார்கள் என விவிலியத்தில் நாம் பார்க்கலாம். 

நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் நமது வாழ்வில் அடுத்தவர்களைத் குற்றவாளிகள் என்று கூறுவதற்கு  முன்பாக, நமது செயல்களை நாம் சீர்தூக்கிப் பார்த்து, நம்மை நாம் சரி செய்துகொண்டு, நமது வாழ்வில் நாம் உண்மையான இயேசுவின் சீடர்கள் என்பதை வெளிக்காட்ட, நாம் அனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம்.  நாம் அனைவரும் உண்மையான இயேசுவின் சீடர்கள் என்பதை சொல்ல அல்ல செயலால் காட்டிட இன்றைய நாளில் உறுதி ஏற்ற செயல்படுவோம்.

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
 மெய்வருத்தக் கூலி தரும் .

எனும் வள்ளுவனின் வாய்மொழி வார்த்தைகளுக்கு ஏற்ப, விழித்துக் கொண்டிருக்கும் நேரத்திலெல்லாம் நம்மை நாம், நமது செயல்பாடுகளை சரி செய்துகொண்டு, இயேசுவின் வார்த்தைகளின் படி நமது வாழ்வை அமைத்துக் கொள்ளக்கூடிய, நல்ல சீடர்களாக இந்த அகிலத்தில் அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ முயல்வோம். அதன் வழியாக  வாழ்க்கையை அழகாக்குவோம்.

உன்னை நீ முதலில் சரி செய்... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...