திங்கள், 7 செப்டம்பர், 2020

மரியே (மனிதநேயம்) வாழ்க

இயேசுவின் அன்புக்குரியவர்களை இன்றைய நாளில் உங்கள் அனைவருக்கும் அன்னை மரியாவின் பிறந்த நாள் வாழ்த்துக்களை உரித்தாக்கி மகிழ்கிறேன்.

"அம்மா"
 நான் அறிந்த அழகிய கவிதை.

இந்த உலகத்தில் எத்தனையோ உறவுகள் நமது வாழ்வில் வந்தாலும் எந்த உறவும் ஈடுசெய்ய இயலாத ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் தான் "அம்மா".


"அம்மா என்று நாம் அழைப்பதற்காக பல ஆயிரம் தடவை தன் அம்மாவை அழைத்து அழுதவள் தான் தாய் ".

இன்று நமது தாய்த்திரு அவையானது புனித அன்னை மரியாவின் பிறந்த நாள் விழாவினை கொண்டாடுகிறது. 431 ஆம் ஆண்டு எபேசு நகரில் நடைபெற்ற பொது சங்கத்தில் மரியா இறைவனின் தாய் என்று பிரகடனம் செய்யப்பட்ட பிறகு இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது.  திருஅவையில் பிறப்பு விழா 3 நபர்களுக்கு மட்டுமே கொண்டாடப்படுகிறது.
1. இயேசு 
2. திருமுழுக்கு யோவான்
3. அன்னைமரியாள்.  

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் தெரிந்து இருக்க வேண்டிய முக்கியமான ஒன்று அவனது வரலாறு. அதனடிப்படையில் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல் இடம்பெறுகிறது.  அதனைத் தொடர்ந்து இயேசுவின் பிறப்புக்கு முன் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது.

இந்த அகிலத்தின் சிறந்த முன்னுதாரணமாக விளங்க கூடிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு பலவித போராட்டங்களுக்கு மத்தியில் நிகழ்ந்த ஒன்று.  

திருமணத்திற்கு முன்பாக ஒரு பெண் கருத்தரித்து இருக்கிறாள் என்ற செய்தி கிடைத்தால் கல்லால் எறிந்து கொல்ல துடித்துக்கொண்டிருந்தது யூத சமுதாய சட்டங்கள்.   

திருமணத்திற்கு முன்பாக ஒரு பெண் கருவுற்றிருக்கிறாள் என்பதை அறிந்தால், அவரை பலரின் முன்னிலையில் நிறுத்தி, அவளை கேள்விக்குள்ளாக்கி தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் என துடித்துக் கொண்டு இருந்தவர்கள் யூத சமூகத்தைச் சார்ந்த ஆண்கள் . 

திருமணத்திற்கு முன்பாக ஒரு பெண் கருவுற்று இருந்தால் அப்பெண்ணுக்கு என்ன நேரும் என்பதை யூத சமூகத்தில் வாழ்ந்த அனைத்து பெண்களும் அறிந்திருந்தனர். இந்த நிலையில் ஆண்டவரின் சார்பாக வானதூதர் ஒருவர் வந்து அன்னை மரியாவிடம் ஆண்டவர் இயேசுவை திருவயிற்றில் சுமக்க அனுமதி கேட்கின்றார்.  இந்தச் சமுதாயத்தை பற்றிய பயம் உள்ளுக்குள் இருந்தாலும், கேட்பது இறைவனின் பிரதிநிதி என்பதை உணர்ந்தவளாய், நான் ஆண்டவரின் அடிமை உன் சொற்படியே எனக்கு ஆகட்டும் என்று கூறி இறைவனின் திட்டத்திற்கு தன்னை கையளித்தள் இந்த அன்னை மரியாள்.

இன்று நாம் வாழக்கூடிய இந்தச் சமுதாயத்தில் பல அன்னைமரியாக்கள் இன்றும் உயிரோடு நடமாடுகிறார்கள். உன் பிள்ளைக்கு படிப்பு வராது, உன் பிள்ளைக்கு அறிவு மிகவும் கம்மி, உன்னுடைய பிள்ளை ஊனமுற்றவனாக இருக்கின்றான் என பலர் எள்ளி நகையாடினாலும், காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு என்பதுபோல, என் பிள்ளை என்னுடைய மிகப்பெரிய பொக்கிஷம் என்பதை எடுத்துரைக்கும் விதமாக, எங்கும் விட்டுக் கொடுக்காது பிள்ளைகளை பேணி வளர்க்க கூடியவளாக, பிள்ளைகளுக்காக இச்சமுதாயத்தில் எத்தனையோ அவமானங்கள் இருந்தாலும், அதனை தாங்கிக் கொண்டு பயணிக்கக்கூடிய பெண்கள் இச்சமூகத்தில் ஏராளம்.

அன்னை மரியாவிடம் இருந்து பலவிதமான நற்பண்புகளை நாம் நமதாக்கிக் கொள்ள இயலும்.

1. துணிச்சல் :

அன்னை மரியாவை துணிச்சல் மிக்க ஒரு பெண் என்றால் அது மிகையாகாது.  யூத சமூகம் ஒரு பெண்ணை எப்படி நடத்தும் என்பதை அறிந்திருந்தும், ஆண்டவர் மீது அதீத நம்பிக்கை கொண்டு துணிச்சலோடு இயேசுவை தன் வயிற்றில் சுமந்து கொள்ள முன்வந்து தன்னையே கையளித்தள் இந்த அன்னை மரியா.

2. உதவி : 

தேவையில் இருப்போருக்கு உதவிக்கரம் நீட்டுபவள்தான் இந்த அன்னை மரியா.  தான் வயிற்றில் ஒரு குழந்தையை சுமந்து இருந்த நேரத்திலும், தனது உறவினரான எலுசபெத் கருவுற்று இருக்கிறார் என்ற செய்தியை அறிந்து, அந்த பெண்மணிக்கு உதவி செய்வதற்காக பல மைல் தூரம் பயணப்பட்டவள் இந்த அன்னைமரியா.

3. துயரம் துடைப்பவர் :

துயரம் துடைப்பவள் இந்த அன்னைமரியா. கானாவூர் திருமணத்தில் திராட்சை இரசம் தீர்ந்து போக திருமண வீட்டாரின் துயரத்தைக் கண்டு, அதனை துடைக்க தன் மகனிடம் பரிந்து பேசியவள் இந்த மரியா.

4. தெளிவு கொண்டவள்:

தெளிவு மிக்கவளும், தெளிவுபடுத்துபவளும் இந்த அன்னைமரியாள். கபிரியேல் வானதூதர் இயேசுவின் பிறப்பை அறிவிக்கும் பொழுது இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே என்ற கேள்விகளை எழுப்பி, தெளிவைப் பெற்று ஆண்டவர் மீது அசைக்கமுடியாத நம்பிக்கையில் தனக்குள் தெளிவை  ஏற்படுத்திக் கொண்டவள் இந்த அன்னைமரியா.


5. இறை வார்த்தைகளின் தாய்: 

"இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பவரே என் தாயும் சகோதரரும் ஆவார்" என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு உயிர் தரும் வகையில்,  ஆண்டவரின் வார்த்தைகளுக்கு இணங்கி இயேசு கிறிஸ்துவை தன் வயிற்றில் சுமக்க தன்னையே கையளித்தவள் இந்த அன்னைமரியா.

6. உலகின் தாய் :

அம்மா, இதோ உன் மகன் என்று கூறியபோது, அகிலத்தில் உள்ள அனைவரையும் தன் பிள்ளையாக ஏற்று இன்று வரை நமக்காக பரிந்து பேசிக் கொண்டிருப்பவள் இந்த அன்னைமரியா.

இவ்வாறு இன்று அன்னை மரியாவை பற்றி நாம் பலவாறு கூறிக்கொண்டே செல்லலாம். ஆனால் உண்மையில் இந்த அன்னை மரியாவின் பிறந்த நாளில் நாம் இந்த அன்னை மரியாளுக்கு தரக்கூடிய பிறந்தநாள் பரிசு எது? என்பதை சிந்திக்க நாம் இன்று அழைக்கப்படுகிறோம்.

இன்று இந்த அகிலத்தில் நிகழக்கூடிய இந்த இக்கட்டான சூழ்நிலை காரணமாக, அன்னையை தரிசிக்க இயலாத சூழ்நிலை நிலவிக் கொண்டிருக்கிறது. சாதாரண மக்களின் நம்பிக்கை இன்ற கேள்வி குறியாகி இருக்கிறது.  இன்று நிலவுக்கு கூடிய இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஒவ்வொருவரும் தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதில் அரசு முனைப்போடு செயல்படுகிறது. ஆனால் ஆண்டவர் இயேசுவின் மீதும் ,அந்த இயேசுவை தன் திருவயிற்றில் சுமந்த தாயின் மீதும் கொண்டுள்ள அசையாத நம்பிக்கை இன்று அந்த அன்னை மரியாளை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று எண்ணக்கூடிய வகையில் ஏதாவது ஒரு வழியில் அன்னை மரியாவை சந்தித்து விட வேண்டும் என்ற ஆவலோடு பலரும் பல விதமான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம் என்பது மறுக்கவியலாத உண்மை.  ஆனால் உண்மையில் இன்று அன்னை மரியாள் நம்மிடம் எதிர்பார்க்கக் கூடியது ஒன்று மட்டும்தான். அது பல மைல் தூரம் கடந்து பலவித தடைகளை கடந்து எப்படியாவது என்னை வந்து சந்தியுங்கள் என்பது அல்ல, மாறாக உங்கள் அருகாமையில் இருக்கக்கூடிய இந்த அகிலமே அஞ்சக் கூடிய ஒரு  தொற்று நோய் காரணமாக உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார் என அனைவராலும் கைவிடப்பட்டு தனிமையில் வாழக்கூடியவர்களை சந்தித்து அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டுமென்பதே இன்று அன்னை விரும்பும் பரிசாக அமைகிறது.  
அன்னை மரியாள் எப்போதும் நமக்காக பரிந்து பேசுவார் என்ற எண்ணம் நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இருக்கிறது. ஆனால் இன்று நாம் ஒரு தொற்றுநோய் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு கவனிப்பாரற்ற கிடைக்கக்கூடியவர்களின் உடல் நலனுக்காக ஆண்டவரிடம் பரிந்து பேச, நாம் அனைவரும் முயல வேண்டும். அடுத்த நபரின் மீது நாம் கொள்ளக்கூடிய அன்பு மட்டுமே அன்னைமரியாள் நம்மிடமிருந்து எதிர்ப்பார்க்கும் உண்மையான பிறந்தநாள் பரிசாகும். 

 அன்னையின் பிறந்தநாள் விழாவான இந்நாளில்ஏராளமான மனிதர்கள் அன்னையின் திருவுருவத்தை தாங்கிய தேரினை பார்ப்பதற்காக வேளாங்கண்ணியை நோக்கி படையெடுக்க முயலுகிறார்கள்.ஆனால் நிலவக்கூடிய இந்த இக்கட்டான சூழ்நிலை அவர்களை தடுத்து நிறுத்தி இருக்கிறது. ஆனாலும் இன்றைய நாளில் அனைவரும் மனங்களிலும் எழக்கக் கூடிய ஒரு வார்த்தை மரியே வாழ்க என்பதாகும். இந்த வார்த்தை தான் இன்று பல மனங்களுக்கு ஆறுதலைத் தந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதனைச் சற்று மாற்றி மனிதர்களை மனிதர்கள் காக்க வேண்டும். அவர்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டும் என்ற உணர்வோடு மனிதநேயம் வாழ்க என ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஒலிக்கச் செய்ய வேண்டியது இன்று நாம் அன்னை மரியாவுக்கு தரும் சிறந்த பரிசாக அமையும்.  


இந்தப் பரிசை அன்னை மரியாளுக்கு தருவதற்கு மனிதநேயம் வாழ்க என கூற வேண்டியது அல்ல, மாறாக நமது செயலில் மனிதநேயம் வெளிப்பட வேண்டும் என்பதாகும்.  அகிலத்தின் மீது கொண்ட அக்கறையின் காரணமாக அன்னைமரியா ஆண்டவரைத் தன் வயிற்றில் சுமந்தது போல, நாமும் அடுத்தவரின் நலனுக்காக மனிதநேயத்தோடு நடந்து, மனிதநேய பணியாற்றி அன்னையின் பிள்ளைகள் நாம் என்பதை நமது மனிதநேயச் செயலால் உணர்த்துவோம். 

அடுத்தவர்களின் வலிகளை உணர்வுகளால் உணரத் தொடங்கும்போது தான் பிறக்கிறது "மனிதநேயம்".

"மரியே (மனிதநேயம்) வாழ்க..."

1 கருத்து:

  1. நமக்கு அருகில் இருப்பவர்களை நமது அன்பால் பலப்படுத்துவோம் என்ற வார்த்தைகள், மனித நேயத்தை வளர்க்கும் வார்த்தைகள்! மிகவும் அருமை!

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...