"நீயே என் கோயில் ஆண்டவனே!
உன்னில் நிலையாக வாழ்வேன் ஆசையிலே!
வார்த்தையின் வடிவினில் உன்னை பார்க்கிறேன்!
வாழ்க்கையே வழிபாடாய் உன்னை பார்க்கிறேன்!
செயல் உள்ள நம்பிக்கையில் உன்னை பார்க்கிறேன்!".
என்று இறைவனை இறைவார்த்தையாக, நம்முடைய வாழ்வாக, நம்பிக்கையாக பாடி ஜெபிக்கிறோம்.
"இறைவார்த்தை உயிர் உள்ளது ஆற்றல் வாய்ந்தது இரு பக்கமும் வெட்டக் கூடிய எந்த வாளினும் கூர்மையானது" என்று எபிரேயர் 4: 12 இல் நாம் வாசிக்கிறோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் விதைப்பவர் உவமை பற்றி இயேசு கூறுகிறார். நான்கு வகை மனிதர்கள் பற்றியும் நான்கு வகை நிலங்கள் பற்றியும் எடுத்துக் கூறுகிறார்.
1. வழியோரம் விழுந்த விதைகள்:
நான் நல்லவன். அடுத்தவன் நல்லவன் அல்ல என்ற மனநிலை உடையவர்கள் இவ்வகை மனிதர்கள். வானத்துப் பறவைகள் வந்து கொத்தி சென்றதால் தன்னிலை மாறிய விதைகளை போல தன்னைச் சுற்றி வாழும் மனிதர்கள் மற்றும் தன்னை சுற்றி நடக்கின்ற நிகழ்வுகள் தீமைமையானவை என்று கூறி தனது பொறுப்புகளையும் கடமைகளையும் தட்டிக்கழிக்கின்றவர்கள்.
2. பாறை மீது விழுந்த விதைகள்:
அடுத்தவன் நல்லவன். நான் நல்லவன் அல்ல என்ற மனநிலை உடையவர்கள் இவ்வகை மனிதர்கள். இவர்கள் தங்களுக்கு கிடைக்கும் சிறு வாய்ப்புகளையும் சிறு உதவிகளையும் கூட உதாசீனப்படுத்திவிட்டு, தன்னையே ஒரு குறுகிய வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்கிறவர்கள். விளக்கின் வெளிச்சத்தில் விழுந்து மடியும் விட்டில் பூச்சிகள் போன்றவர்கள் இவர்கள்.
3. முச் செடிகளுக்கு நடுவில் விழுந்த விதைகள்:
நானும் நல்லவன் அல்ல. அடுத்தவனும் நல்லவன் அல்ல என்ற மனநிலை உடையவர்கள் இவ்வகை மனிதர்கள்.
இவர்கள் தங்களது வாழ்க்கை நிகழ்வுகள், தங்கள் கவலைகள், தங்களது சோதனைகள் இவைகளையே பெரிதுபடுத்துகிறவர்கள். இதனால் தங்களது நிம்மதியையும் இழந்து அடுத்தவர்களின் நம்பிக்கையையும் இழந்து, எப்போதும் ஒருவித தயக்கத்தையும், சோர்விலுமே தங்களுடைய வாழ்க்கையை நடத்திச் செல்கின்றவர்கள். தங்களது வாழ்க்கையிலும் முன்னேறாமல், மற்றவர்களையும் முன்னேற விடாமல், துக்கங்களிலும் துயரங்களிலுமே சுகம் காண்பவர்கள். இவர்களால் யாருக்கும் எவ்வித பயனும் இல்லை.
4. நல்ல நிலத்தில் விழுந்த விதைகள்:
நானும் நல்லவன். என்னை சுற்றி வாழ்கின்ற மனிதர்களும், இந்த உலகம் முழுவதுமே நல்லவை என்று இறைவனின் படைப்பில் ஆனந்தம் கொள்கின்ற மனிதர்கள் இவ்வகை மனிதர்கள்.
இவர்கள் இறைவனின் ஆசீர்வாதங்களையும், கொடைகளையும் அதிகமாக தங்களது வாழ்க்கையில் உணர்பவர்கள். தங்களது எண்ணங்களில் தூய்மையும் தெளிவான சிந்தனையும் முன்னோக்கிச் செல்லக்கூடிய ஆர்வமும் உடையவர்கள். தங்களோடு உடன் இருப்பவர்கள் சோற்வுற்றாலும் அவர்களை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி நன்மைகளில் வழி நடத்துபவர்கள். மற்றவர்களையும் மனிதர்களாக மதிப்பவர்கள். மனித நேயத்திற்கும் மனித மாண்பிற்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.
இத்தகைய மனிதர்களால் உலகம் நிறைந்து இருக்கும் பொழுது இம்மண்ணைகமே விண்ணகம் ஆகின்றது.
இந்த நால்வகை மனிதர்களில் நாம் எந்த வகையில் இருக்கின்றோம் என்று சிந்திப்போம். நல்ல நிலத்தில் விழுந்த விதை போன்று ஒளியாக, நீராக, காற்றாக தனது வாழ்க்கையில் வருகின்ற அனைத்து நிகழ்வுகளையும் இறைவனின் ஆசீர்வாதமாக ஏற்றுக் கொள்பவர்களாக நம்மை மாற்றிக் கொண்டு வாழ நல்ல நிலமாக நமது உள்ளத்தை இறையருளால் பண்படுத்துவோம்.
அருமையான பதிவு சகோ..🙏
பதிலளிநீக்கு